Monday, May 11, 2015

ரதிவிஹாரிஇனிய ஜெயம்,

நேற்று இரவு  வெண் முரசின்  [கைக்கு சிக்கிய வகையில்] சில அத்யாங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒன்று  பீமன் இழுக்கும் தேரில் அமர்ந்திருக்கும்  மாயை கிளர்ச்சி உச்சம் எய்தும் அத்யாயம்.   கற்பனை விரிய விரிய, தொடை தசைகள் தளர்ந்து, காது மடல்கள் சூடாகின.  கணிப்பொறியை  அணைத்துவிட்டு அது  சார்ந்த சிந்தனைகளில் மூழ்கினேன். இரவைக்காட்டிலும் இதற்க்கு ஏற்ற தருணம் வேறுன்டா என்ன?

வெண் முரசில் எத்தனயோ தருணங்கள் குறித்து உங்களுக்கு கடிதங்கள் வந்திருக்கும் . காமத்தின் இருண்ட ஆழங்களை நோக்கி மின்மினி ஒளி போல ஊடுருவி செல்லும் இத்தகு தருணங்களை  குறைவான வாசகர்களே சுட்டிக் காட்டி பகிர்ந்திருப்பார்கள்.  இந்த எல்லையில் வாசகிகள்  எது வரை வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வழியே இல்லை.  சராசரி தளத்தில் வாசகர்கள் சப்புக் கொட்டியபடியும் , வாசகிகள் ஸ்கிப் செய்து வாசிக்கும் வண்ணமே இத் தருணங்கள் இருக்கும் என யூகிக்கிறேன்.

சமீபத்தில் ஒரு மன நல ஆலோசக நண்பர் வசம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் சொன்னது மிக விசித்திரமாக இருந்தது. அவரிடம்[விவாகரத்துக்கு முன்] ஆலோசனைக்கு அனுப்பப்படும் பத்து தம்பத்யரில், மூன்று தம்பதிகளில்  கணவர் அவரது துணையை, நல்ல ஒளியில் , ஒரு போதும் நிறை நிலையில் பார்த்தது இல்லை.  அந்த மூன்று மனைவிக்கும் காரணம் சொல்லத் தெரியவில்லை. கணவர் அனைத்து விதத்திலும் நல்லவர்தான் ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த திருமண பந்தத்தில் செம்மையாக ஏமாற்றப் பட்டதாக உணர்கிறார்கள்.  பலரை குழந்தைகள் மட்டுமே இந்த ஏமாற்றத்தை பெரிதாக பார்க்கஒட்டாமல் வைத்திருக்கிறது.

எங்குதான் சிக்ககல் ?யோசித்துப் பார்த்தேன், உங்களுடனான உரையாடல்கள், உங்கள் புனைவுகள் வழியே இவை சார்ந்து ஒரு செறிவான வரையறையை உருவாக்கிக் கொள்ள இயலும்.  பாரத்தில் பண்டைய காலம் தொட்டு,  சிலப்பதிகார இந்திரவிழா காலம் வரை, பெண்ணின் பாலியல் விழைவு தனித்து துணுக்குறும் வகையில் பார்க்கப் படும் ஒன்றாக  பார்க்கப் பட்டிருக்க வாய்ப்பில்லை.  நாயக்கர் காலம் முடிந்து, சட்டமற்ற காலம் நிலவிய போது  பெண் முற்றிலுமாக ஒடுக்கப் படுகிறாள். பிறகு ஆங்கிலேயே கல்வி, காந்தியம் என பெண் மெல்ல மெல்ல வெளியே வந்து, இன்றைய  திறமைக்கு மட்டுமே இடம் கொண்ட  முதலாளித்துவ யுகத்தில், பெண்  மீண்டும் தன்னை  தனித்ததொரு ஆளுமையாக மீட்டுக்கொண்டு வருகிறாள்.

இது சமூகத்தில். உயிர் இயல்பால்  பெண் இந்த மனித வாழ்வின் தொடர்ச்சியை நிலை நிறுத்துபவள். ஆண் புல் போல மானுடத்தை பரவச் செய்பவன். ஆணின் ஒரு துளி சக்தியில் ஒரு லட்சம் விந்தணுக்கள். பெண்ணுக்கோ  ஒரே ஒரு அண்டம்.  ஆக மதிப்பு மிக்க இந்த ஒரே ஒரு அண்டத்தை தன் உயிர் இயல்பால் சோப்ளாங்கிக்கு வழங்க பெண் விரும்ப மாட்டாள். வலிமையுள்ளதே எஞ்சும் என்ற வன நீதிக்கு ஒப்ப, வலிமையான உயிர் அணுக்களை அவளது கருவறை எதிர் நோக்குகிறது.  எவன் வலிமை கொண்டவன் என, கொரில்லா முதல் மனிதன் வரை ரத்தகளரிக்குப் பிறகே தீர்மானிக்கப் படுகிறது.

அடுத்து உடல் இயல்பால் ஆண் செயல்படக் கூடியவன் ஆகவே ஆற்றலை எளிதில் இழப்பவன். பெண்ணுக்கு ஆற்றல் இழப்பு கிடையாது. ஆணுக்கு உடலில் குறைந்த பகுதிகளிலும், பெண்ணுக்கு உடலில் பெரும் பகுதியிலும் இன்பம். ஆகவே ஒரு எல்லையில் உயிர் தொடர்ச்சியை நிலை நிறுத்தும் பொருட்டு பெண் உடல் பல பதியை தாங்கும் நிலையில் இருக்கிறது.

இன்று நாம் காணும் தாம்பத்திய சிக்கல் அனைத்தின் வேறும், இந்த மூன்று அடிப்படைகளில் கால் கொள்கிறது.  இன்று பெரும்பாலான திருமண சம்பந்தத்தில் பெண்  'சிறந்ததை அடையும்'  அடிப்படை ஒன்றை இழக்கிறாள். ஆகவேதான் காரணமே தெரியாமல் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள்.

அடுத்து பெண் ஒருவனுக்கு அளிக்கும் ஆகச் சிறந்த பரிசாக தனது கருவறையை நினைக்கிறாள். ஆணோ பெரும்பாலும்  தனக்கு உடமையான ஒன்றினை எடுத்துக் கொள்வதுபோலவே அவளது கருவறையை கைப்பற்றுகிறான்.   பெண் நிரந்தரமாக சீண்டப்படும் இடம் இதுதான்.  புள்ள வந்ததும் என்னக் கண்டுக்கறதே இல்லை என்று கணவன் புலம்பும் காரணமும் இதுதான்.  பெற்ற குழந்தைக்கு முதல் பாலூட்டும் மனைவியை கன்னத்தில் முத்தி நன்றி சொல்லும் எந்தக் கணவனும் தோற்க மாட்டான்.

அடுத்து அந்த மனநல ஆலோசனை நண்பர் சொன்னதுதான் ருசிகரமானது.  காமம் இங்கு ஒரே  விதத்தில் மட்டுமே அரங்கேறுகிறது.  பாலியல் தளங்கள் பயிற்றுவிப்பதை அப்படியே பின்பற்றுவது.விளைவு  இன்பத்தின் சாத்தியங்களை இழந்து , வெறும் பல் விளக்குவது போல மாறி, கலவி இன்பம் என்பது, இன்பத்தை இழந்து கலவி மட்டுமாக எஞ்சுகிறது.  இன்று பாலியல் மருந்துகளில் பல ஒழுக்கக் கேடர்கள் கைக்கொள்வது அல்ல. நல்ல கணவன் தனது மனைவியை திருப்தி செய்யவே வாங்குகிறான்.  இங்கு ஆணும் பெண்ணும்  காமம் கற்றுக் கொள்ளாமலேயே காமம் துய்துக் கொண்டிருக்கிர்ரார்கள்.  நிறைவை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய ஒன்றினை, அன்றாட  கருமமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் .

இது குறித்து பேசும் பெண் ஒழுக்கக் கேடானவள் என்றும், பேசும் ஆண் பலவீனம் ஆனவன் என்றும் முதல் குரலிலேயே முத்திரை குத்தப் படுவதால், மௌனமாக இந்த சங்கடங்கள் சகித்துக் கொள்ளப் படுகிறது. ஆம் இன்றைய தலைமுறை  சுகித்துப் பெற்றதல்ல, சகித்துப் பெற்றது.

நிரந்தர மௌனம் ,இருள் நிலவும் இந்த பகுதியில் ஒளி பாய்ச்சுகிறது  இலக்கியம்.    எந்தையும் தாயும்  மகிழ்ந்து  குலாவி.. என்று துவங்குகிரானே  அவனிடமிருந்து துவங்குகிறது இந்த ஒளி. பிறரை விடுத்து ஜெயம்மை மட்டும் எடுத்துக் கொண்டால் எத்தனை வித விதமான தருணங்கள்?

கிளிக் காலம்  ஒரு ஆண்பையன்  வயதடையும் தருணத்தை பேசுகிறது. அட்சலன்ட் வயதில் பையன்கள் மனதில் பெண்ணும் காமமும் என்னவாக இருக்கிறது. மெய்ம்மை வந்து தீண்டுகையில் கதை சொல்லி என்ன ஆகிறான் என்பது குறித்த கதை.

அனல் காற்றில்  ஒரு குறிப்பிட்ட சூழலில் வளரும் ஆண், காமத்தில்  அடங்கிக் கிடக்கும் துணையாகவும் , ஆதூரம் செய்யும் தாயாகவும்  பெண்ணில் எத்தகு நிலைகளை எதிர் பார்க்கிறான், அந்த ஆழ்மன விழைவின் சிக்கல்களை பேசுகிறது.   இரண்டுமாக இருக்க முடிந்த பெண்ணை மனைவியாக அடைந்தவன்  தோற்ப்பதில்லை.

ஒரு ஆணை முற்றிலும் வன்மம் கொண்டவனாக ஆக்கும் காமத் தருணம் ஒன்றினில் துவங்குகிறது கன்யாக்குமரி. பரவாஇல்லை எனும் ஒரு சொல் ,தெரியாமல் சொன்ன சொல்தான், ஆனால் அனைத்து திரிபுகளும் அங்குதான் துவங்குகிறது.

வித விதமான காம நுகர்வின், அதன் நிறைவுகளின், சிக்கல்களின் விரிந்து பரவும் கோலமே காடு.

மலரை ஏந்துகையில்  கட்டை விரலாலும்,சுட்டு விரலாலும் அதன் காம்பை எந்த வன்மையில் பற்றுவோமோ ,அந்த அளவில் பற்ற வேண்டும்.காமக் கல்வியின்  கலாபூர்வமான  முதல் அடி  மன்மதன் கதையில் துவங்குகிறது.  

வெண் முரசு உடலியல்,உயிரியல்,உளவில் என அனைத்துக் தளங்களிலும் காமக் கல்வியின்  அடிப்படையான பகுதிகளால் நிறைந்திருக்கிறது.

'நீ நின்றாடும் பீடம் நான்' என கிருஷ்ணன் ராதையின் பாதங்களை மார்பில் சூடிக் கொள்வது போலத்தான் பெண்ணை ஏந்திக் கொள்ள வேண்டும். அவளது கருப்பைக்கு ஆண் செய்ய முடிந்த ஒரே நன்றியும் அதுதான்.

காமத்தில் நிறைவு எய்திய தம்பதியரால் மட்டுமே, நுண்ணுணர்வு கொண்ட, நுகர்வு வெறி அற்ற, நட்பைப் பேணும் ஆரோக்யமான அடுத்த தலைமுறையை உருவாக்க இயலும்.  காம நிறைவுக்கான ஒரு சிறிய ஒளி  முதல் கனல் இறுதி அத்யாத்தில் துலங்கி வருகிறது. 

இலக்கியம்  சமூக மனம் எனும் சாரத்தில்  கலந்து , கட்புலனாகாத ஆனால் காத்திரமான மாற்றம் ஒன்றை உருவாக்கும் வல்லமை கொண்டது.  காமம் சார்ந்து எந்த சமூக இயல், உளவியல், உடலியல், கல்வியியல்  நிபுணர்களும் இன்று பேசாத தளங்களை , ஒரு படைப்பாளியாக அனாயாசமாக உள்ளிறங்கி ,பிரித்து  அடுக்குகிரீர்கள்.   வெண் முரசில் இலங்கும்  காமத் தருணங்களை பாடம் என்றும் கொள்ளலாம் எனில்..

இலக்கியத்தில் என்றென்றைக்குமான இணை சொல்ல இயலாத  ரதி விஹாரி  நீங்கள்.