திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
மகாபாரதத்தில் சிரஞ்சீவிகளாகக் கூறப்பட்டுள்ள சில
பாத்திரங்களில்,அஸ்வத்தாமன் தன் பிறப்பெடுத்த உடலுடன்
கலியுகம் முடியும் வரை பூவுலகில் அலையுமாறு சாபம் பெற்றதாக
வருகிறது.அஸ்வத்தாமனை நேரில் கண்டதாக சில வலைப்பதிவுகளை காண
நேரிட்டது.கீழ்க்கண்ட வலைப்பதிவைப்பற்றி தங்கள் கருத்து.
http://www.pilotbaba.org/
அன்புடன்
எஸ்.ரமேஷ் கிருஷ்ணன்
அன்புள்ள ரமேஷ்
நீங்கள் வெண்முரசு வாசிப்பதில்லை என
நினைக்கிறேன். வெண்முரசு எழுதப்படுவதே இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு எதிராக
வரலாற்று ரீதியான, அழகியல்ரீதியான. உண்மையான ஆன்மீக நோக்குடன் மகாபாரதத்தை
அணுகுவதற்காகத்தான்மகாபாரதம்ஒரு வரலாற்றுரூல். அது தொன்மங்களால் செறிவுபடுத்தப்பட்டது . அதை மதநூலாக வாசிப்பவர்கள் அதை வெறும் மூடநம்பிக்கைகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். சிரஞ்சீவித்வம் என்பது என்றுமழியாத சில மதிப்பீடுகள் அந்தக்கதாபாத்திரத்தில் உள்ளன என்பதற்கான குறியீடு. வியாசரின் ஞானம் போலவே அஸ்வத்தாமனின் வன்மமும் என்றும் மானுட உள்ளத்தில் வாழும் என்பதே பொருள்
ஜெ
அன்புள்ள ஜெ.,
விரைவான மறுமொழிக்கு நன்றி.
வெண் முரசு சமீபத்தில் படித்து வருகிறேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.மஹாபாரதம் போன்ற பெரும் காவியங்களில்
வரும் பாத்திரங்கள் குறியீடுகள்தான்.தெய்வம்,தேவர்,
நம் மனித மனங்களில் உள்ளனர்.அதோடு வெண் முரசின் தனித்துவமே அதில் வரும்
பாத்திரங்களின் அழகியலும், கலவையான உணர்ச்சிகளுடன் கூடிய அவற்றின்
இயல்பான சித்தரிப்புமே. இதை கிரகிக்க முடிகிறது.
இருப்பினும், தொன்மையான இடங்களை,பொருட்களை காண்பதுவும்,அவற்றின்
காலங்களில் கற்பனையான சஞ்சரிப்பும் தரும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வமே இது
போன்ற செய்திகளின்பால் என்னை சில சமயம் ஈர்க்கிறது.
அன்புடன்,
ரமேஷ் கிருஷ்ணன்