Thursday, May 21, 2015

தெய்வீகக்காதல்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அம்மையப்பனாகிய வெண்பனி விடைவாகனன் கதை வெள்ளம் செல்லும் வேகத்தில், அழகில், கவிச்சுவையில். உள்ஞானபொருளில்,  நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்ந்து உருகுகின்றது. நீலத்தில் ராதை ஒரு ஆடைமுழுவதும் நெய்து காட்டிய அழகை, கிரிஜை ஒரு நூல் எடுத்து வீசிக்காட்டுகின்றாள். ராதை மண்ணில் எழுந்து விண்ணோக்கி விழும் கனி என்றாள், கிரிஜை விண்ணவர் மட்டும் காணும் கனி. 

மாணிக்கவாசக சுவாமிகள் போற்றித்திருவகவலில், எத்தனை எத்தனை இடத்தில் தான் பிழைத்தேன் என்று சொல்லிச்சொல்லி கொன்று கொன்று எடுத்துவிடுவார். இத்தனை இடத்தில் பிழைத்து வந்த நீ ஏன்டா சாகின்றாய் என்று கேட்காமல் கேட்பார். அதில் ஒரு பிழைத்தல் “கல்வி என்னும் பெருங்கடல் பிழைத்தும்” இந்த வரி மீண்டும் மீண்டும் நெஞ்சில் சுழன்றுக்கொண்டே இருக்கிறது. கல்வி என்னும் பெருங்கடலை கடந்து பிழைப்பதா? கல்வி என்னும் பெருங்கடலை காணாமலே பிழைப்பதா? காணாமலே பிழைப்பது பிழைப்பாகிவிடுமா? கடந்து பிழைப்பதுதான் பிழைப்பு. கல்விக்கடலை கடப்பதுதான் எத்தனை எத்தனை பெரும் நீச்சல். சொல், சொல்லுக்குள் சொல் என்று எத்தனை எத்தனை அலைகள், அத்தனை அலைகளையும் தாண்டவும் வேண்டும், சிலநேரம், அலைகளில் இருந்து அலைகள் என்று அலைகளே தாண்டவைக்கவும் செய்யும். இப்படி அலையலையாய் மாறம் கல்விக்கடல்தான் மனிதனை தீபமாகவும், தீபகற்பமாக்கும் ஆக்குகின்றது. எங்கும் கல்வியாகி நிற்பவன் தீவு. கல்விக்கு அப்பால் இறைவன் என்பவன் தீபகற்பம். 

மூன்றுபுரம் கல்வி, நான்வது புரம் அனுபவம் என்னும் பருவதம். கல்வி என்னும் கடல் சூழ்ந்த மனிதன் சிந்தனையில் நிற்கும் இறைவன் என்னும் கைலயம். மனிதனே இங்கு ஒரு பாரதம் ஆவதும் அழகு.

கைலாயத்தைப்பற்றி தாங்கள் சொல்லும்போது ஏழுலகங்கள் கவிந்த வான்வெளிக்கு அப்பால் இங்குள்ளாதா என்றே எண்ணச்செய்யும் எழிலுடன் நின்றிருந்தது அது என்று தாங்கள் சொல்வதுதான் அழகினும் அழகு.
  

கற்றதனால் ஆயப்பயன் வாலறிவான் நற்றால் தொழுதல் என்று வள்ளுவர் சொல்கின்றார். அன்னை கிரிஜை கற்றது கற்று, உறுவது உற்று அத்திமரநிழலில் அமர்ந்து தவம் செய்யும் நாளில் கல்விக்கடலை கடக்கின்றாள். கல்வி கடல்மட்டும் சூழ்ந்திருக்கும்வரை மனிதன் ஒரு தீவு மட்டும். கல்வியால் சூழ்ந்து ஒரு கரையை அடைகின்றநாளில் அவன் தீவகற்பம் ஆகின்றான். அப்படி ஆகும் நாளில் அவனுக்கு அப்பால் இருக்கும் கைலாயம் இங்குள்ளது ஆகின்றது. மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழுலகம் கடந்து துரியாதீதத்தில் அன்னை மீனாட்சியை, சோமசுந்தரேசன் கைத்தலம் பற்றுகின்றான் என்று செல்லும் கதை, கதையின் வழியாக தவத்தை கனியவைத்து செல்கின்றது. 

அன்னை கிரிஜைபோல் மண்ணில் ஒவ்வொரு உயிரும் அவனுக்காக பிறப்பெடுக்கின்றது. அன்னை கிரிஜைபோல் அவனுக்கு என்றே முத்திரைக்குத்தி வரும் சீவன்கள் வெட்டவெளி என்றாலும் விண்ணையே நோக்கி கிடந்து அவனையே அடைந்துவிடுகின்றன. மற்ற சீவன்கள் வெட்டவெளியில் என்ன இருக்கின்றது என்று மண்ணைநோக்கி மண்ணோடு மண்ணாகிவிடுகின்றன, மண்ணில் விழுந்தாலும் விண்ணல்லவா நம்மிடம் என்று ஒரு சில சீவன்கள் விண்ணேறுகின்றன அவதராபுருஷர் என்று.

அன்னை கிரிஜைக்கு காலையிலும், மாலையிலும் கிடைக்கும் செவ்வொளி கைலாயக்காட்சி பிறைசூடிய பெம்மானுக்கு மனையாள் ஆக்கும் தவத்தை, காதலை தருகின்றது.

வெட்டவெளிப்பார்வை, பார்வையில் தட்டுப்படும் மலைபீடக்காட்சி, காட்சியில் கரைந்து  மனம் எரிகொள்ளும் காமம், காமம் கனிந்து பெருகும் காதல்,  காதல் முதிர்ந்து கண்ணீர் வடிக்கும் அன்பு,  கண்ணீர் மாலையாகி யோகம்பெருகும் கோலம்,  உள்ளம் குளிர்ந்து திரளும் பனி. பனி வடிவம் எழுந்து வரும் அனல் வடிவம்.  சீவன் சிவன் ஐக்கியம்.  அருவக்கடவுள் காட்சியில் இருந்து வரும் உருவக்கடவுள் தத்துவம் அற்புதம். 


வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்-
என்று மாணிக்கவாசக சுவாமிகள் சொல்வதின் பொருளாகி நிற்கும் காண்டவம்-5

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருவக்கடவுளுக்கும், உருவக்கடவுளுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும்போது. நீரும், பனிக்கட்டியும் என்று சொல்வார். முழுவதும் மூழ்கி தீவாக இருக்கும் மனிதனுக்கு பனிக்கட்டித்தெரிவதில்லை, எல்லாம் நீர் மயம்.  தீபகற்பமாக ஆகும் மனிதன் பனிக்கட்டியை உணர்கின்றான்.  காண்டவத்தில் வஞ்சினம் என்னும் நெருப்பு அனைத்தையும் உருகவைத்து நீராக்கி உருவமற்றதாக காட்டி, கிரிஜையின் காதல் வழியாக குளிர்ந்து உறைந்து பனிக்கட்டியாகி உருவம் காட்டுகின்றது.

அன்னை கிரிஜையை மண்கூரைக்கு கீழே தொங்கிகிடக்கும் சம்சாரமரமாகிய கனிமரத் தோரணத்தின் கனி என்ற உவமையை நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்கின்றேன் ஜெ. அது விண்ணவருக்கு தெரியும், மண்ணுள்ளவர்களுக்கு தெரியாது என்பதுதான் எத்தனை பொருள் பொதிந்தது.

வெள்ளைப்பனி ரிஷபத்தின்மீதுவரும் மலைகுல இளவரசன் மட்டும் எளிதில் காணமுடியாதவன் இல்லை, அவனை காதலிக்கும் அன்னை கிரிஜையும் காணமுடியதவள் என்று படைத்ததுதான் அற்புத பொருள் உடையது.  நிலமக்கள் யாரும் அவளைக்கண்டது இல்லை, பாடகர்கள் மட்டும் பாடிப்பாடி சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். அவன் போலவே அவளும் காட்சிக்கு அப்பாற்பட்டவள். கைலாயம்போலவே இங்கிருப்பதுபோலவே எங்கோ அவளும் இருக்கிறாள். அவனுக்காக பிறக்கிறாள், அவனையே நினைக்கிறாள், அவனையே மணக்கிறாள். அன்னை, தந்தைகூட அவளை கட்டுப்படுத்த முடியவில்லை. தந்தைகளுக்கு கடைசியில் மிஞ்சுவது வஞ்சம் மட்டும்.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்தை ஒருநாள் தடவினேன். கை பாரதம்பாடிய பெரும்தேவனார் பாதத்தில் விழுந்தது. மூன்றே வரி, அதற்குமேல் படிக்க முடியவில்லை இதயத்தை விம்ம வைக்கிறார். நுனிப்புல் மேயும் பலகீனத்தை என்று ஒழிப்பாய் என்று கேட்கின்றது ஒவ்வொரு நூலும் சொல்லும்.  

நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே-ஐங்குறுநூறு

ஒருவனுக்கு இரண்டுகால்கள்தான் பெருதேவனார் ஏன் இங்கு விளையாடுகின்றார். ஆனால் இவனுக்கு இரண்டு காலும் இரண்டு வண்ணம். அந்த இரண்டு வண்ணக்கால்கள், தனித்தனியாக இருந்த, தனித்தக்கால்கள் ஒருவன் காலாகும் அழகை, அற்புதத்தை தவத்தை சிற்பமாக்கி வைத்து உள்ளீர்கள். 

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
   
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
   
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
   
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
   
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.-திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகள்.

தெய்வீகக்காதல் தெய்வீகக்காதல் என்பதை கண்டேன் ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்