Wednesday, May 13, 2015

குரோதத்தின் கூடாரம்அன்புள்ள ஜெ,

வெண்முகில் நகரம் ஒரு முக்கியமான, வெகு நுட்பமான ஒரு வேறுபாட்டை பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே விட்டுச் சென்றிருக்கிறது. நாவல் என்னவோ இருவரும் நெகிழ்வுடன் ஒருவரையொருவர் தழுவிக் கொள்வதில் முடிந்தாலும், அரண்மனைப் பெண்களிடத்தில் ஓர் பெரும் ஏற்றத்தாழ்வை விட்டுச் சென்றிருக்கிறது. 

கண்ணன் குழலூதும் அந்த காட்சியை நம் வாசக நண்பர்கள் பலரும் இதை எழுதி விட்டார்கள். மிகக் கவனமாக எழுதப் பட்ட காட்சி. கிருஷ்ணன் மிக இயல்பாக காந்தாரியின் மேல் காலை வைத்துக் கொண்டு இசைத்துக் கொண்டிருக்கிறான். துரியனைக் கூட காந்தாரி இப்படி கொஞ்சியிருக்க மாட்டாள். அதற்கென்ன, கிருஷ்ணனைக் கொஞ்சுவதன் மூலம் உள்ளூர அவள் துரியனைத் தானே கொஞ்சிக் கொண்டிருந்திருப்பாள். அங்கே குந்தி இல்லை. கிருஷ்ணன், கண்ணனாக இருப்பது காந்தாரியிடம் தான். குந்திக்கு அவனிடம் அரசியாடல் செய்வதற்கே நேரம் போதாது. அதையும் மீறித் தான் அவன் அவளிடம் அத்தை என்ற கொஞ்சல்களைச் செய்கிறான். 

உண்மையில் காந்தாரி ஓர் நிறை வாழ்வு வாழ்ந்தவள். நிறைந்த கணவன், அரண்மனை நிறைய மகன்கள். இப்போது அவ்வரண்மனை நிறைய மருமகள்கள். மகிழ்வால் நிறைந்திருக்கிறாள். அப்படியே அவளுக்கு வாய்த்திருக்கும் மருமகள்களும் அவ்வாறே இருக்கிறார்கள். பானுமதி கருணையே உருவானவள். துரியன் மீது மாளாக் காதல் கொண்டிருப்பவள். அசலை முதலான பிற பெண்களும் மகிழ்ச்சியும், துடுக்குத் தனமும் நிறைந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் அரண்மனை எப்போதும் குதூகலத்தில் ததும்பிக் கொண்டேயிருக்கிறது. 

இங்கே பாண்டவர் முகாமில், இருக்கும் பெண்கள் அனைவருமே ஒரு வித அழுத்தமான மனநிலையில் தான் உள்ளனர். திரௌபதி அவளே நினைத்தால் கூட எளிய ஓர் பெண்ணாக இருக்க முடியாது. எப்போதுமே சக்கரவர்த்தினியாகவே இருந்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு. அவள் ஓர் பருவப் பெண்ணாக, முகத்தில் பரு அரும்ப கொண்ட காதல், அப்பரு உருவாகி வருவதற்குள்ளாகவே கருகி விட்டது. தேவிகை, விஜயை இருவருமே காதலை இழந்தவர்களே. இழப்பின் வலி அவர்களுக்குள் குரோதமாக கொதித்துக் கொண்டேயிருக்கும். பலந்தரை அவள் விருப்பத்துக்கு மாறாக கடத்தப் பட்டவள். மேலும் பீமன் அவளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்ற விசனம் கொண்டிருக்கிறாள். தன் விருப்பத்துக்கு மாறாகக் கடத்தப்பட்டும், தனக்கான மரியாதையை, தனக்கான இடத்தை அடைய இயலாதமையால் வரும் குரோதம் அவளுக்குள் கொந்தளிக்கிறது. இதெல்லாத்திற்கும் மேல் திரௌபதிக்கு கீழாக வேறு இருந்தாக வேண்டும். பிந்துமதியும் ஒரு வகையில் எனக்கு அம்பாலிகையை நினைவு படுத்துகிறாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியாதவளாக வருகிறாள். அம்பாலிகை கொண்ட குரோதம் எத்தன்மையது என்பதை மழைப்பாடலில் நாம் கண்டோம். கரேணுமதி அவள் தாயின் வஞ்சத்தையும் அதனால் விழைந்த குரோதத்தையும் கொண்டவளாயிருக்கிறாள். 

இவை அனைத்துக்கும் ஆரம்பம் குந்தி. வாழ்நாள் முழுவதும் பெண் என்பதால் அடைந்திருக்கக் கூடிய எளிமையான, இனிமையான வாழ்வினை அடையாமல், தன் விருப்பத்துக்காக அவற்றை இழக்கவும் செய்திருப்பவள் அவள். அவளுக்கு உண்மையில் காந்தாரி மீது பெரும்பொறாமை தான் இருந்திருக்கும். அக ஆழத்தில் அது வஞ்சமாகத் திரிந்திருக்கும். 

அங்கே சகோதரர்கள் இணைந்து விட்டாலும், நாளை ஓர் பெரும் பாரத யுத்தம் நடக்க இப்பெண்களின் குரோதமே முதற்காரணமாக இருக்கப்போகிறது. ஒரு வகையில் பாண்டவர்கள் முகாமே குரோதத்தின் கூடாரமாகவே காட்சியளிக்கிறது. பாவம் அவர்கள். எப்பெண்ணுடனும் ஓர் இயல்பான வாழ்வை வாழப் போவது இல்லை. படுகளத்தில் அடிபட்டு வீழ்ந்த துரியோதனன், தருமனைப் பார்த்து, "நான் அனுபவிக்க வேண்டியவற்றை எல்லாம் அனுபவித்து, வாழ வேண்டிய ஒரு வாழ்வை நன்றாகவே வாழ்ந்து விட்டேன். இனியாவது நீ வாழ்வாயாக" என்று சொல்வதாகப் படித்திருக்கிறேன். உண்மையும் அது தானே. ஆண்களின் குரோதம் கூட தீர்க்கப் படலாம். பெண்களின் வசம் குரோதம் வந்தால் அது பேரழிவில் தான் கொண்டு போய்ச் சேர்க்கும். அச்சமயங்களில் அவர்களில் குடியேறும் தெய்வங்களிடம் இறைஞ்சுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்