அன்பு ஜெயமோகன்,
திரும்பத் திரும்பப் பெருவெடிப்பைத்தான் புனைவில் நிகழ்த்திக் காட்டுகிறீர்களோ என்றே தோன்றுகிறது. பெருவெடிப்புக்கு முன்னும், பின்னுமான புள்ளிகளைப் புனைவில் நீங்கள் இணைக்கும்போது கிடைக்கும் உற்சாகம் நடைவண்டி தள்ளல் போன்றது. நடைவண்டியைத் தாங்கிப்பிடிக்கவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் இருந்தும் அது கொஞ்சம் கொஞ்சமாக நகரும்போது உள்ளுக்குள் கிடைக்கும் மழலை உற்சாகத்தை எளிதில் கொண்டுவந்து விடுகிறீர்கள். ”அனைத்தும் பின்னப்படுவதற்கு முன்பு இருந்தது ஒரு பெருஞ்சிலந்தி” எனும் வாக்கியம் என்னளவில் வெளியின் தரிசனம். வெளியைப் பெருஞ்சிலந்தியாக உருவகப்படுத்திக் கொண்டபோது மாபெரும் வலைப்பின்னலுக்குள் சூரியனும், கோள்களும் ஒளிப்புள்ளிகளாகத் தொங்கும் காட்சியும் காணக்கிடைத்தது.
ஒரு பெருஞ்சிலந்தி தன் முடிவிலா பெருந்தனிமையில் சலித்துச் சோர்ந்து விம்மி, அதன் வெறுமை பிசினாகி, அப்பிசின் ஒளிச்ச்சரடுகளாகி, அச்சரடுகள் வலையாகி, அவ்வலையில் அதுவே மாட்டி..மிக நுட்பமான விரியும் காட்சிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருந்தன. ”அவ்வலையை அவிழ்ப்பதும் கிழிப்பதும் அழிப்பதும் எல்லாம் வலைநெசவாகும் விந்தையை எண்ணிப் பெருஞ்சிலந்தி திகைத்து அமர்ந்து கொண்டது” எனும் வரியின் நுட்பம் எனக்குள்ளிருந்த அகத்தவிப்பை இன்னும் அதிகரித்தது. ”நெய்த வலையின் எந்தக் கண்ணியைத் தொட்டாலும் அது அன்னைப் பெருஞ்சிலந்தியைத் தொடுவதாகவே ஆகியது”” எனும் வரியின் வீச்சு ஆழமானது; என்றாலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. இயக்கமற்ற வெளிக்கும், இயங்கும் வெளியின் பகுதிகளுக்குமான உறவையே அது சுட்டுவதாக நான் விளங்கிக்கொண்டேன். அப்படியான புரிதலோடு முன்நகர்ந்த எனக்கு “வலை என்று சொல்லாக சிலந்தியை அறிகிறார்கள்” எனும் வரியை எளிமையாக எதிர்கொள்ள முடிந்தது.
“யாழின் நரம்புகளில் இறுகிநிற்கும் மூதாதையர்” எனும் அடர்ந்த சொற்சித்திரத்தோடு நிறைவடைந்திருந்த காண்டவம் முதல் அத்தியாத்துக்கு எம் வணக்கம்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.