முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது.
அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது.
ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத அளவுசிறியது. எண்ணமும்
அறியமுடியா நுண்மை கொண்டது. இன்மையின் துளியென்றே எஞ்சும் அணிமை. தன்னை
சுருளென உணர்ந்த கணமே அது விரியத்தொடங்கி முட்டையை அசைத்தது. அதன் நாவென
எழுந்த செந்தழல் வெண்முட்டை ஓட்டை உடைக்க அது சொடுக்கித் தலையெடுத்தது.
அதன் மூச்சு சீறி எழுந்தது. அதன் மணிவிழிகள் ஒளிகொண்டன. முச்சுருளென அமைந்த
அதன் கரிய உடல் எதிரெதிர் ஒழுக்கென ஓட அதன் உடலின் தண்மையில்
நீர்த்துளிகளெழுந்தன. வானவானவானென விரிந்த வானில் அது தானெனும்தானாக
பேருருக்கொண்டது. சான்றோரே, அதன் நாவை அனலோன் என்றனர். அதன் மூச்சை காற்று
என்றனர். அதன் விழிகளே ஆதித்யர்கள். அதன் உடலின் குளிரலைகளே வருணன். அதன்
ஒழுக்கே காலன். அறிக, அதன் விரிந்த பெரும்படத்தில் எழுந்த வஜ்ராயுதமே
இந்திரன்.
அன்புள்ள ஜெ . big bang theory யை நினைவு படுத்தும் வரிகள் ..இவை வாசகனின் மனதில் தூண்டும் உணர்வுகளை வர்ணிப்பது கடினம். அற்புதமான வரிகள். நன்றி.
தண்டபாணி
அன்புள்ள ஜெ . big bang theory யை நினைவு படுத்தும் வரிகள் ..இவை வாசகனின் மனதில் தூண்டும் உணர்வுகளை வர்ணிப்பது கடினம். அற்புதமான வரிகள். நன்றி.
தண்டபாணி