Sunday, May 10, 2015

அம்பாதேவி


 [அம்பா மாதா- அமராவதி -விதர்ப்பா]

பிரிய ஜெ,

இரண்டு நாட்களாக அம்பையுடனே அலைகிறேன்.  மகாபாரத்தில் என்னை மிக ஈர்த்தவள் அம்பை. ஆற்றல் மிகுந்த பெண். அகங்காரம் மிகுந்த பெண். எனவே ஆழ்ந்த காதலை உடையவள் என்றே தோன்றுகிறது.

சுயம்வரத்தன்றே சூசகமாக சொல்லப்பட்டுவிட்டது. தாட்சாயணி தந்தையின் இல்லத்துக்கும் ஈசன் இல்லத்துக்கும் மாறி மாறி அலைந்து கடைசியில் ஈசனை எண்ணித் தன்னைத் தானே ஆகுதியாக்கிக் கொள்கிறாள். தாட்சாயணி ஏற்கனவே காதலை நுகர்ந்தவளாக இருக்கிறாள். ஒரு முறை வாழ்ந்த வாழ்க்கையின் இனிமைக்குள் புகுந்து கொள்வதற்கான முயற்சிதான் அவள் அர்ப்பணம்.

அம்பை காதலின் இனிமையை அறியாதவளாக இருக்கிறாள்.  இனிமை நிரம்பித் ததும்பும் பெண்ணென அஸ்தினாபுரியை அடைகிறாள். அவளுடைய இனிமையே அவளை லேசாக்கிவிடுகிறது. என் இனிமை மிகுந்த கணங்களில் எடையற்றவளென உணர்ந்த அனுபவத்தை அவளிடம் காண முடிகிறது. தன் முழு அகங்காரத்தையும் விடுத்து இறைஞ்சுகிறாள்.

அவரை ஒரே பார்வையில் அவள் அறிந்து கொள்கிறாள். சொற்கள் பயனற்றவையென எண்ணச்செய்யும் பார்வை. அவரை வெல்லுமளவு தன் காதல் வலிமை மிகுந்ததென நம்புகிறாள். வெற்றி பெறும் நேரத்தில் மிக மோசமான பதிலாகக் கிடைக்கிற ஏளனம் திகைக்க வைக்கிறது.

பீஷ்மரின் ஏளனம் மட்டுமே அவளை ரௌத்திரம் கொள்ளச் செய்யவில்லை. தோற்காத போரில் தோற்றவளென அறிவிக்கப்பட்ட துரோகம் துயர் கொள்ளச் செய்கிறது. அதன் பின்னான ஏளனமே அவளை வெறி கொண்டவளாக்குகிறது. அவருடைய காதலை வெல்வதைக் காட்டிலும் அப்பொய்மையை வென்றெடுக்கவே அவள் ரௌத்திரம் கொள்கிறாளென எனக்குத் தோன்றியது. அவளைப் பொறுத்தவரை பொய்மையே இறை வடிவென ஆற்றல் மிகுந்து வையம் போற்ற அமர்ந்திருக்கிறது. அதனையே அழிக்கவேண்டுமென எண்ணுகிறாள்.

ஆழமான காதலும் முடிவிலாக் குரோதமும் என அவள் உக்கிரம் கொண்டு அலைகையில் அவள் எவ்விதம் அன்னையெனத் தோன்றமுடியும்? அவளை அஞ்சி வணங்கலாமே தவிர, அவள் ஆறுதலடையும் முன் அவள் அன்னையென விளங்குவதெப்படி?


இந்தக் கேள்வி வந்த பிறகு மேற்கொண்டு படிக்க முடியவில்லை.
 

நன்றி


அன்புடன்

மீனா

அன்புள்ள மீனா,

நம் மரபு முழுக்க உள்ள புதிர் இது. வழக்கமான ஆய்வாளர்களுக்கு இது புரிவதில்லை. அழிவுச்சக்திகளை நாம் அருள்கோரி வழிபடுகிறோம். ஆக்கமும் அழிவும் ஒன்றே என எண்ணுகிறோம்.

நாம் இப்பிரபஞ்சத்தில் வெளிப்படும் ஆற்றலையே இறைவடிவாகக் காண்கிறோம். ஓர் ஆலமரத்தில் ஒரு நாகப்பாம்பில் தீயில் ஆற்றின் பெருக்கில் வெளிப்படுவது பிரபஞ்சகாரணமாகிய ஆற்றலே. மானுடனில் வெளிப்படும் வீரமும் சீற்றமும் வஞ்சமும் எல்லாம் அந்த ஆற்றலே. அது பேருருவம் கொண்டு வெளிப்படும்போது இறை தோன்றுகிறது. ஆக்கமும் அழிவும் எல்லாம் அதுவே

அதுவே அம்பையை தெய்வமாக்குகிறது. அவள் துர்க்கையாகக் கொற்றவையாகவே வழிபடப்படுகிறாள்

ஜெ