Thursday, May 21, 2015

நாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)

அன்பு ஜெயமோகன்,
         
நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி. இங்குள்ள தெய்வங்களுக்கெல்லாம் அரசி நம் மூன்று பேரன்னையர். தொல்நாகர் ஒருபோதும் பிறருக்கு கடன்பட்டவரல்ல. ஒருபோதும் பிறருக்கு தலைவணங்குபவரும் அல்ல. இங்குள்ள மானுடர் எவருக்கும் அவர் எந்நிலையிலும் பிணையும் அல்ல” எனும் நந்தவாசுகியின் அழுத்தமான குரலில் நெடுநேரம் ஆடிப்போய் இருந்தேன்.
         
நாகர்கள் ஒருகாலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாட்டின் பலபகுதிகளைத் தங்கள் ஆளுகையின்கீழ் வைத்திருந்திருக்கின்றனர். கி.மு.13ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் கங்கைக்கும் யமுனைக்கும் இடையே நாக அரசுகள் இருந்ததாகக் காப்பியங்கள் தகவல் சொல்கின்றன. அர்ச்சுணன் நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் இரண்டு நாக இளவரசிகளை மண்ந்ததாகவும் செய்தி உண்டு.
         
தமிழ்ச்சங்கங்களில் நாகர்கள் பங்கேற்றிருக்கின்றனர். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் எனும் நாகரியர் போன்றோர் நாகர்களே. தம் பெயர்களிலும், தங்கள் ஊரின் பெயர்களிலும் நாகம் எனும் சொல் இடம்பெற்றே தீரவேண்டும் என்பதில் நாகர்கள் முனைப்பு காட்டி இருக்கின்றனர். நாகர் எனும் வேரிலிருந்து உருவானவையே நகரம், நாகரிகம் போன்ற சொற்கள் எல்லாம். இடம்பெயர்ந்து கொண்டே இருந்தவர்கள் நாகர்கள். நகர் எனும் வேர்ச்சொல்லின் நீட்சியே நாகர். நாகர்கள் ஓரிடத்தில் தங்காதவர்கள். வேட்டைச்சமூகக் காலகட்டத்தில் அப்படியான வாழ்க்கையே இயல்பு. அவ்வகையில்  நாடோடிகளாகத் திரிந்தவர்கள் என்பதாக அதை விரித்துப் புரிந்துகொள்ளும்போது அவர்களின் குடிமரபின் காலப்பரப்பை நம்மால் ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடியும். சங்ககாலத்தில் இசையைப் பாடிப்பரப்பிய பாணர்கள் நாகர் குலத்தினரே. காலமாற்றத்தில் நாகர் வழிபாடு சைவத்தோடும், இன்னபிற சமயங்களோடும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இன்று பரதவர்களாகவே இருக்கும் மீனவக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாகர்களாகவே இருக்கக்கூடும். நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டிணம் போன்ற ஊர்ப்பெயர்களைக் கொண்டும், அப்பகுதிகளின் வரலாற்றைக் கொஞ்சம் அலசினாலும் அக்கருத்து வலுப்படும் வாய்ப்புள்ளது. தஞ்சாவூர்ப் பகுதிக்கு அருகே இருக்கும் நாகூர் மற்றும் நாகப்பட்டிணம் ஊர்களைச் சேர்ந்த நாகர்களால் உருவாக்கப்பட்ட இசைக்கருவியே நாதசுரம். ஆரம்பத்தில் அதன் பெயர் நாகசுரம். சங்க இலக்கியத்தில் நாகபாணர் என்றொரு பெயரில் இருக்கும் பாணரோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இலங்கை வரலாற்று நூல்கள் அனைத்துமே நாகர்கள் குறித்த தகவலுடன்தான் துவங்குகின்றன. இலங்கையைப் பல நாக அரசர்கள் ஆண்டிருக்கும் குறிப்பிலிருந்து அங்கும் நாகத்தொல்குடிகள் இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. நாகர்களுக்கு இடையேயான போர்கள் குறித்த தகவல்களை இலங்கை நூல்களான தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. இலங்கையில் நாகர்களுக்கு இடையே நடந்த போரொன்றில் இடையே புத்தர் தோன்றி அப்போரைத் தடுத்து நிறுத்தியதாக தகவல் உண்டு. அதன்பொருட்டு நாகர்கள் புத்தரை வணங்கியதாகவும் சொல்கின்றனர். கா.அப்பாத்துரையார் இன்னும் ஒருபடி மேலேபோய் புத்தரும், மகாவீரரும்நாக இன முன்னோர்களே எனச் சொல்கின்றார். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு நாகமரபின் நீட்சியே என அகழ்வாய்வுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.

குறிஞ்சிநிலத்தின் குகைகளில் நாகவழிபாடு தொடங்கி இருக்க வேண்டும். பிற்பாடு அது முருகவழிபாடு போன்றவற்றுடன் இணைக்கப்படும்போதும் தன் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றது. தன்னை வழிபடுபவ்ர் முன் முருகன் பாம்பாகத்தான் வருவான் எனும் நம்பிக்கை கொண்டிருக்கும் கிராமத்து மக்களை இன்றும் நான் சந்திக்கிறேன். நாகர்களில் ஒரு பிரிவினரே பாலையைச் சேர்ந்த எயினர் என்றும் கருத்துண்டு. கொற்றவை அவர்களின் தெய்வம் என்பது நாமறிந்ததே.

இறுதியாக பரமபத விளையாட்டுக்கு வருவோம். பாம்பின் வாய் இருக்கும் கட்ட்த்துக்கு வருபவன் கீழே சென்றுவிடுவான். மேம்போக்காகப் பார்த்தால் விளையாட்டாகத் தெரியும். நுட்பமாகப் பார்க்க நாகர் இனக்குழுக்களை அழித்த பெருந்தெய்வ மரபின் களியாட்டமாக்வே அது தொனிக்கும். எங்கும் நாகர்களைத் தவிர்க்க முடியாததே அவர்களின் வெற்றி.

நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி” எனும் குரலின் வீச்சு எளிமையாகக் கடந்துபோய்விடக்கூடியதன்று. எம் தொல்குடிகளான நாகர்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்.

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.