Wednesday, May 20, 2015

காண்டவம் தொடக்கம்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.  

வெண்முரசு-காண்டவம் வாழ்த்துக்கள். 

அன்னையும், குழந்தையும் இணைந்து இணைந்து பின்னப்படும் காண்டவம் நெஞ்சை தடவவும், கிள்ளவும் செய்கின்றது. 

கள்ளிச்செடியை ஒடிக்கும்போது அதில் இருந்து பால் வடிவதற்காக இன்பம் அடைவதா? அல்லது ஒடிக்கப்பட்ட கள்ளியின் வெள்ளைக்காயத்திற்காக வருந்துவதா? 

அன்னையும் குழந்தையும் சேர்ந்து சேர்ந்து வரும் இந்த காண்டவத்தின் பதிவுகள் நினைக்கும்போது புன்னகையும், வலியும் ஒன்றாகவே வழிகின்றது. 

இங்கு ஒரு பூனை மூன்று குட்டிகள் ஈன்று உள்ளது. பயன்படுத்தாத பாத்ரூமில் குப்பைகளையே மெத்தையாக பயன்படுத்தி தன் குழந்தையுடன் சந்தோஷமாக படுத்து கிடக்கிறது. அது சந்தோஷம்தானா? அதற்கு அதுதான் சந்தோஷம். பளிங்கு கண்கள் மின்னப் பார்க்கின்றது. எனக்கு வரணாவதம் தீவிபத்தில் தப்பி சதசிருங்கம் காட்டில் தனது குழந்தைகள் உடன் சிறுகுடிலில் படுத்திருக்கும் குந்தியின் நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூனை என்பதே மறைந்துபோகின்றது. பிரபஞ்சத்தாயும், அதன் குழந்தைகளும்தான் நினைவுக்கு வருகின்றார்கள். 

கடந்த வியாழக்கிழமை மண்காற்று, வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள் முகவரி தொலைத்துவிட்ட அனாதைகள்போல அலைகின்றன, தொடவே முடியாத உயரத்தை நொடியில் தொட்ட வெற்றிக்களிப்பில் உடல் பருத்து சிரிக்கின்றன. எனக்கு அந்த தாய்ப்பூனையும், குட்டிக்குழந்தைகளும் ஞாபகம். இந்த காற்றில் தனது குழந்தைகள் அடித்துச்சென்றுவிடும் என்று அது எண்ணியதா? ஒரு குட்டியை கவ்வி தூக்கிச்சென்று,  தலைக்குமேல் உள்ள திறந்து கிடக்கும்   தண்ணீர் இல்லாத பயன்படுத்தாத பிளாஸ்டேங்கில் வைக்கின்றது. என்னைப்பார்த்ததும் அதற்குள்ளேயே படுக்கமுடியாமல் படுத்துக்கொண்டது. என்னே அன்னையின் தவம்? நெஞ்சம் பதறி பதறி அடிக்கின்றது. உடல் இருக்கும்போதே உடல் உருகிவழிய, இதயம் மட்டுமாகி நிற்பதுபோன்ற உணர்வு. இரவு தூங்க முடியவில்லை. “தாயா நீ...பே..” அம்மாவை ஒருநாள் வார்த்தையால் குத்திய ஈட்டி இன்’று திரும்பி வந்து அடியாழம் வரை இறங்கிக்கொண்டே  இருக்கிறது. இரவு பதினோறு மணிக்கு பாத்ரூம் சென்று மீண்டும் பார்த்தேன். ஒற்றைக்கல் சுவற்றில்,மொத்த உடம்பையும் குறுக்கிவைத்து, குழந்தைகள் வாசம் அறியும் தூரத்தில்  எதிரிகள் வரும் திசையில் முகம் வைத்து படுத்துகிடக்கின்றது. 

மனிடா! உன்னிடம் ஏதடா தவம்?. சொல்லிக்கொடுத்ததை செய்கின்றாய், சொல்லிக்கொடுக்க ஒருவன் இருந்து செய்கின்றாய்.  பூனை மறைந்துவிட்டது. அம்மா மறந்துவிட்டது. இன்னும் பார்க்காத கங்கையை, வெண்முரசாலும் பார்..பார் என்று சொல்லப்படும் கங்கைக்கு நேராக சென்று மூழ்கி மூச்சடக்கிவிடவேண்டும் என்று தோன்றியது. உலகத்தைப்படைத்த ஆதி அன்னையின் பாதத்தை கட்டிப்பிடித்து, கண்ணீரோடு முத்தமிட துடித்தேன். காலையில் எழுந்து சென்று பார்த்தேன் அது அதன் குழந்தையை கவ்விக்கொண்டு வேறு இடம் தேடி வழித்தப்பியதுபோல அங்கு இங்கும் அலைந்து வேறு ஒரு பார்வைப்படாத இடத்திற்குள் மறைந்தது. திருதராஸ்டிரன் சொன்ன குட்டிப்போட்ட ஓநாய் கதை நினைவில் ஓடியது. 

சனிக்கிழமை காலையில் ஆபிஸ்வந்து காண்டவம் இரண்டு பதிவும் படித்தேன். கதையின் ஊடுபாகே அன்னையும், குழந்தையும்.  அன்னையும், குழந்தையும் ஆகிய கதையின் வலைப்பின்னல், பெரும் பிரபஞ்சமாகி விரிந்து விரிந்து சென்றுக்கொண்டே இருந்தது. நெஞ்சு பஞ்சாகி விட்டது. பிரபஞ்சம் முழுவதும் பரந்து பறந்து திரியும் உணர்வு. எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.  இந்த பிரபஞ்ச வெளியில் நான் யார்? நான் என்ற ஒன்று இருக்கிறதா? 

சிலந்தியும், குழவியும், மீனும், குஞ்சும், குயிலும்,  குஞ்சும், நாகமும், குட்டியும், ஆதி திரியையும், அதன் குட்டிகளும். வாரணாவத திரியையும், அவள் குழந்தைகளும். சினம், வஞ்சம் எல்லாம் தாண்டி அனல் புனல் புகும்போதும் குழந்தையை அணைத்துக்கொள்ளும் அந்த நேசத்தை என்ன சொல்வது? எங்கும் நானும் அம்மாவும்போலவே உள்ளது. 

வானகம் சென்று விட்ட அம்மா! ”தாயா நீ?”.... நான் கத்த மட்டும் தெரிந்த குட்டி, நீ கடித்தாலும் அன்னை! 

நன்றி 
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.