அன்பான ஜெயமோகன்
சென்ற வருடம் டிசம்பரில் முதற்கனலை புத்தக
வடிவில் வாசித்து முடித்தேன். அதன் பின் மழைப்பாடலைக் கையில் எடுக்க ஐந்து
மாதங்களாகி விட்டன. தினமும் இணையத்தில் வெண்முகில் நகரம் வாசிப்பது தவறுவதில்லை.
சில நாட்கள் விட்டுப் போனால் சேர்த்து வைத்து வாசித்து வந்து சேர்ந்து விடுகிறேன்.
வெண்முகில் நகரம் பற்றி எழுத வேண்டியவை அதிகம் உள்ளன. எனினும் இப்போது மீண்டும்
மழைப்பாடல்.
மழைப்பாடல் பகுதி ஒன்று, வேழாம்பல் தவம், அத்தியாயம்
நான்கு, பக்கம் 45.
பீஷ்மர் சத்தியவதியின் உரையாடல்.
“ஏதேனும் மூன்று நாடுகள், அங்கம், வங்கம்,
மகதம், அல்லது வேறு, படை கொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாக தேய்க்கப் போகிறேன்.
அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து அச்தினபுரியின் முகப்பில்
கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன். இனி என்னைப்
பற்றியோ என் குலத்தைப் பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லாக் கூடாது. நினைக்கவும்
அஞ்ச வேண்டும்.”
அனைத்துக்கும் வித்து இதுதான். ஒரு பெண்ணின்
வஞ்சம், வன்மம் குலப்பகையாகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும் இடையே விரிசல்கள் பெரிதாகிக் கொண்டே போகின்றன. இது ஆரம்பித்த கணம்
எதுவென யாராவது துல்லியமாக அறிவார்களா என்ன.
சத்தியவதி, அம்பை, குந்தி, அனைவரும் ஏதோ
ஒருவகையில் அவமதிக்கப் பட்டவர்கள். அந்த வஞ்சம் வளர, தன்னை நிலை நிறுத்த அகங்களில்
எத்தனை திட்டங்கள் தீர்மானிக்கப் படுகின்றன. நினைத்தால் மிகச் சிறிது என உதறக்
கூடிய ஒரு எண்ணம் தலைமுறைகள் கடந்து பெரும் போராக உருவெடுக்கிறது.
பக்கம் 16, “அழியாத துயரே, ஒன்று தெரிந்து கொள், ஆற்றாது
அழுத கண்ணீர் யுகயுகங்களைத் தன்னந்தனியாகக் கடந்து செல்லும். தனக்கான வாளையும்
வஞ்சினத்தையும் அது கண்டடையும்.”
ஆற்றாது அழுத கண்ணீருக்குத் தனிமையே விதிக்கப்
பட்டது. எங்குமே ஆற வழியற்ற போது பழி வாங்குகிறது. வாழ்க்கை என்றுமே அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அன்புடன்