Sunday, February 7, 2016

படிமக் குவியல்(வெய்யோன் - 47)


      நம் பார்வையின் நீளம் குறைவு. பார்வையின் ஆயுள் குறைவு. நம்முடைய மற்ற பொறிகள் இதைவிட மிகக் குறைந்த திறன் கொண்டவை.  ஆகவே இந்தப் பார்வைமுதலிய பொறிகளின் மூலம்  நாம் அறியும் அறிவு குறைபாடானது. அது அறிவது எல்லாம் பேருண்மையின்  சிறு துணுக்குகளையே. பகுதி உண்மைகளால் மறைக்கப்பட்டிருந்த முழு உண்மையை காண்பது அரிதானது. மிகக் கடினமானது. பகுதி உண்மையென்பது   பொய்மையின் ஒரு வகைதான்.   அறியாத சிறுவன் கடலைப் பார்க்கையில் அது பெரிது எனத் தோன்றினாலும் நிலத்தில் தேங்கியிருக்கும் ஒரு பெரிய குட்டை என்றே அவன் உணர்வான். பூமியைப்பற்றிய முழு உண்மை தெரியும்போதுதான்  பெருங்கடலில் தலைகாட்டும் தீவு என இந்த நிலப்பகுதி தெரியும். அப்படியே ஒரு நதியைப்பார்க்கும் ஒருவனுக்கு அது ஓடும் குட்டைஎனத் தெரியும். அது கங்கையாக இருந்தால் கூட அப்படித்தான் தோன்றும். ஆனால் அந்தக்கூற்றும் உண்மைதான். ஆனால் அது பகுதி உண்மை அவன் பார்வைத்திறனின் வழி அவன் பெற்றிருப்பது பேருண்மையின் சிறு துணுக்கு. ஆனால் ஒரு அறிஞன் இந்த துணுக்குகளை தன் மனதில் உள்வாங்கி சேகரித்து தியானித்து முழு உண்மையை அறிய முற்படுகிறான். தான் அறிந்ததை இவ்வுலகத்திற்கு எடுத்துரைக்கிறான்.  அதே நேரத்தில் அவன் உள்ளத்தில் மட்டுமே உணரக்கூடிய பேருண்மைகளை விளக்க சொற்கள் இன்றி அவன் தவிக்கும்போது அவனிடமிருந்து அவ்வுண்மையின் முழுமை  படிமங்களாக வெளிப்படுகிறது. அப்படி வந்த படிமக்குவியல்கள் இன்றைய வெண்முரசில் கொட்டிக்கிடக்கிறது.

இமயத்தலை சிலிர்த்துச் அவிழ்த்து நீட்டி நிலத்திட்ட நீளிருங் கூந்தல். சுழற்றி இவ்வெண்புரவி மேல் அடித்த கருஞ்சாட்டை. வாள்போழ்ந்து சென்ற வலி உலராத புண். கண்ணீர் வழிந்தோடிய கன்னக்கோடு. போழ்ந்து குழவியை எடுத்த அடிவயிற்று வடு.
  குளிர்த்தனிமை கலையாது இங்கென இக்கணமென என்றுமென எஞ்சுவது என ஓடிக் கொண்டிருக்கிறது இது. கருங்கூந்தல் பெருக்கு. உயிர்சினந்து சீறி கொண்டை கட்டவிழ்த்து உதறி விரித்திட்ட குழல்அலை. குழலெழுச்சி. குழலொளிவளைவு. குழற்சுருளெனும் கரவு. செஞ்செப்பு மூடிதூக்கி செங்குருதி விழுதள்ளிப்பூசி நீவிவிட்ட வஞ்சக்கருங்குழல். இவ்வந்தியில் நீ அள்ளியள்ளிப்பூசும் இக்குருதி மேற்கே செஞ்சதுப்பில் தேர்புதைந்து தனித்திறப்பவனின் நெஞ்சுபிளந்து ஊறும் வெம்மை. கனல். கனலென்றான நீர்மை.
கங்கை நதியா? இல்லை இது மனிதர் மனங்களில் ஓடும் சிந்தனைப் பெருவெள்ளத்தை, பல உடல்களில் உறைந்திருக்கும் மனங்களின் வழி ஓடும் அந்தப் பெருநதியை குறிக்கிறதா? ஒவ்வொரு எண்ணமும் அதில் குமிழி என மிதக்கின்றனவா?

உடலெங்கும் அனல்நீரெனச் சுழித்தோடும் இதை ஒவ்வொரு எண்ணத்துளிக்கொப்புளப்பாவையிலும் விழிதிறந்து சூடுகிறேன். எண்ணமென்பது குருதிநுரையிலெழும் குமிழி. எத்தனை உடல்கள். எத்தனை ஆயிரம் குருதிக்கலங்கள். காத்திருந்து கசந்து, கண்டடைந்து கனிந்து, தான்தானெனப் புளித்து நுரைத்தெழும் மதுக்கலங்கள். தெய்வங்கள் அருந்தும் கிண்ணங்கள். இல்லை. விழிப்பு கொள்வேன். இவ்வீண் எண்ணங்கள் வந்தலைத்து சிதறிப்பரவி துமிதெறிக்க விழுந்து இழுபட்டு பின்னகர்ந்து மீண்டுமெழுந்து அறைந்து கூவும் கரையென்றாகி தவமியற்றும் என் சித்தம் கணம் கணமென கரைந்தழிகிறது.
பெண்கள் எல்லாம அந்த பெருங்கன்னியகவும் பேரன்னையாகவும் உள்ளவளின் துணுக்குகள் அல்லவா. நாம் காணும் பென்களில் எல்லாம் அவளின் தோற்றம் பனித்துளியில் தோன்றும் மலையென பிரதிபலிக்கிறது. அல்லது பெண்கள் எல்லாம் அவள் பேருடலின் உயிரணுக்களா? அதாவது உலகின்இதுவரை பிறந்த இனி பிறக்கப்போகிற  பெண்கள், பெண்விலங்குகள்  அனைத்தும் இணைந்த பெருவடிவம்தான் அந்தக் கன்னிகையா? அவளுடலிலிருந்து பூமரங்கள்  மலர் சொறிவதைப்போல்,  மலையிலிருந்து இறங்கும் அருவியிலிருந்து சிதறும்  நீர்த்துளிகளைப்போல பல்வேறு உயிர்கள் பிறந்தவண்ணம் இருகின்றன. அப்படியும் அவள் அழியாக் கன்னியென வடிவம் காட்டுகிறாள்.  அனைத்துயிர்க்கும் உணவளித்து அன்னையென இருக்கிறாள். சிறு மகவென சிரித்தாடும் அவள் சீற்றம் கொள்கையில் ஊழிப்பெரு நெருப்பென உருக்கொண்டு எழுகிறாள்.  கருணை  தாய்மை  மோகம்  அகங்காரம், மமகாரம் ஆகிய குணங்களில் உச்சம் கொண்டு ஆர்த்தெழுந்திட்ட பெண்களில் இருந்து அவள் வடிவை உருவக்க முயல்கிறோம்.

திரும்பி நோக்க அவனருகே பறந்தெழுந்தது அவள் பெயர். நான் ரேணுகை. சிரித்தது மறுகுரல். புலோமையென என்னை அழை. பிறகொரு எதிரொலி தேவயானி என்றது. ஆம், தபதி என்று நகைத்தது. அவள் அம்பை. ஏன் பிருதை அல்லவா? நச்சுப்படம் எழுந்த மானசாதேவி என்று என்னை அறியமாட்டாயா?
நான்முகை. திரயம்பகை. நாராயணி! ஹரிதை, நீலி, சாரதை, சியாமை, காளி, காலகை, காமினி, காதரை, காமரூபை. எரியும் ருத்ரை. ஒளிரும் பிரபை. அணையும் மிருத்யூ, அவிழா வியாதி, ஆழ்த்தும் நித்திரை. தேவி, நீ உஷை. நீ சந்தியை. நீ காந்தி. நீ சாந்தி. நீ ஜோதி. நீ ஸித்தி. வெடிபடுமண்டலத்திருளலைவெடிபடநடமிடுதுடியெழுகடியொலிதாளம். எளியவன் நெஞ்சில் நின்றாடும் கரிய பாதம். யாதேவி சர்வமங்கல்யே. யாதேவி சர்வசிருஷ்டே. யாதேவி சர்வதாரிணி. யாதேவி சர்வசங்கரி.
    அந்தப் பெருங்கன்னியும் ஆடி ஒருவனின் மார்பில் அடங்குகிறாள். அவன் பாதாள  இருளின் தன்னந்தனியனாய் இருக்கிறான். அங்கு அவனன்றி வேறு இல்லை. அவன் உந்தியிலிருந்து தோன்றிய அனைத்தும் அவன் வாயில் எழும் அக்கினிகளில் அவிசாக விழுந்து மறைகின்றன.
   விளிம்பில் மிக விளிம்பில் விளிம்பின் விளிம்பெல்லையில் உடல் உந்திச்சென்று கீழே நோக்கினான். முடிவற்ற இருளாழத்தில் மல்லாந்து கிடந்தது பேருருவச்சிலை. அறிந்த முகம். தெய்வங்களே, மூதாதையரே, நன்கறிந்த முகம். யார்? யாரது? மான்கண் நகங்கள். செம்மலரிதழ் கால்கள். கணுக்கால் கண்மணிகள். முழங்கால் மெழுக்கு. நெடுந்தொடைத்திரள். இடைக்கரவு, உயிர்க்கும் உந்தி. நிழலாடும் நெஞ்சவிரிவு. வெற்பெனும் தோள்புடைப்பு. படையாழி, பாஞ்சசன்யம், பணிலம். நகைக்கும் கண்கள்.
வெறித்தெழுந்த வாய்க்குள் எழுந்த வெண்கோரைப்பற்கள். குருதி திளைக்கும் சுனையென நீள்நாக்கு. ஊழிப்பெரும்பசி கொண்ட புலி. பரிமுக நெருப்புறங்கும் பரவை. வடமுகப் பசியெனும் வங்கம். கொலைப்படைகள். கூக்குரல்கள். ஓம் எனும் சொல். ஓங்கி அலையெழுந்து அறைந்தமையும் இறப்பின் பேரொலி. ஓம் எனும் சொல். கண்ணீர் நிறைந்த கதறல்கள். எரிந்தெழும் பழிச்சொற்கள். ஓம் எனும் சொல். ஏன் ஏன் எனும் வினாக்கள். இல்லை இல்லை எனும் கூக்குரல்கள். ஓம் எனும் சொல்.
   இடக்கையில் அப்பெருங்கதாயுதத்தை அவன் கண்டான். நீட்டிய வலக்கையின் விரல்கள் சிம்ம முத்திரை கொண்டு சிலிர்த்து நகம்கூர்த்து நின்றிருந்தன. அவன் நெஞ்சிலிருந்தது கரிய பெருந்திருவின் முகம்.
இந்தப் படிமங்களின் மூலம் வெண்முரசு நம் ஆழ்மனதுடன் உரையாடுகிறது. மானுடன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தவமிருந்து பெறும் ஞானத்தை நமக்கு உணர்த்த முயல்கிறது. இந்த ஞானத்தை பகிர படிமங்கள் ஒரு மொழியென ஆகின்றன. அந்த மொழி வெண்முரசெங்கும் விரவி வருகிறது.