Friday, April 27, 2018

துளி வைரம் .



இனிய ஜெயம் 

ஒரு முறை விஷ்ணுபுரத்தின் தருணம் ஒன்றின் மீது உங்களிடம் மனம் பொங்க ஏதோ கூறிக்கொண்டிருந்தேன் . நீங்கள் மெல்லிய புன்னகையுடன் ''அது நான் கண்டு முடித்த அதிகாலை கனவுகளில் ஒன்று அவ்வளவுதான் '' எளிதாக சொல்லிவிட்டு அடுத்த உரையாடலுக்குள் நுழைந்து விட்டீர்கள் .பின் வந்த நாட்களில் ,அந்த வரி எதை எதையோ என்னுள் தொடுத்து இணைத்தது ..  

இதோ அடுத்த கனவு .வெண்முரசு எனும் தலைப்பிட்டு காணத்துவங்கி விட்டீர்கள் .   கஜுராகோ கோவில் வளாகம் காணும்போது  ,கண் முன் ஒன்று ஸ்தூலமாக அறியக் கிடைத்தது .  அது ஒரு கோவில் அல்ல ,கோவில்களின்  வரிசை .காந்தார மகாதேவர் கோவில்தான் அந்த வரிசையின்  உன்னத  முனை .ஆம் அந்த வளாகம் முழுதும் கோவில்கள் .எது மகாதேவர் ஆலயமோ ,அதை ஒவ்வொரு கோவிலாக கட்டிப்பார்த்து அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் .   
அப்படி வெண்முரசு எனும் கனவை வாழ்ந்து பார்க்க ஒரு முன்னோட்டமாக விஷ்ணுபுரம் எனும் கனவில் வாழ்த்து பார்த்திருக்கிறீர்கள் .  வடிவரீதியாக  விஷ்ணுபுரம்  ஷங்கர்ஷணன் எழுதிய காவியமா , அல்லது யாரோ ஒருவர் கண்டுகொண்டிருக்கும் கனவா என்றொரு மயக்கம் முதல் அடுக்கு .காவியமாக அது சங்கர்ஷணன் எழுதியதா அல்லது மூவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதி ஒன்று சேர்க்கப்பட்டதா என்பது இரண்டாவது  அடுக்கு . பாணர்கள் பாடுவது போல தொகுக்கப்பட்ட காவியமா அல்லது வசந்தன் எனும் பாணன் பாடும் பாடலில் வரும் காவியமா எனும் மயக்கு மூன்றாவது அடுக்கு .   வெண்முரசு இந்த விஷ்ணுபுர விளையாட்டை அதன் சிகரத்துக்கு எடுத்து செல்கிறது .   ஒரு அடுக்கில்  நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போதே அது வியாசரால் எழுதப்படுகிறது .மற்றொரு அடுக்கில்  ஆஸ்திகன் வருகைக்கு முன்பு ஒரே வீச்சிலாக எழுதப்படுகிறது . இவற்றைக் கடந்த மூன்றாவது அடுக்கு  இந்த மொத்த  வெண்முரசு நாவலே  தவத்திலிருக்கும் வியாசரின், யுகங்களை ,முக்காலங்களை கலைத்து அடுக்கும் , அவரது  ஆழ்மனக் கனவின் சித்தரிப்பு என்பது . ஆம் வியாசன் எனும் காவிய கர்த்தனின் ஆழ்மனக் கனவின் பயணத்தை ,அதன் கூடவே நின்று மொழியில் நிகழ்த்துவதே வெண்முரசு .இந்தப் புனைவின் தர்க்கக் கட்டுமானம் என்பது இதுவே .  வியாசரின் கனவு . 

  உள் நிகழ்வுகளாக , விஷ்ணுபுரத்தில் தலைமுறைகள் தோறும் ஞானாதிபதிகள் கையில் மாறும் அந்த நீலக் கல் மோதிரம் ,அதுவே பேருருக்கொண்டு வெண்முரசில் எழுந்து ,சாத்யகி முதல் விதுரர் வரை ஆட்டிவைக்கிறது .  விஷ்ணுபுர பவதத்தர் கொள்ளும் மைந்தத் துயர்த்தீயின்  வடவைத்தோற்றமே ,வெண் முரசில்  திருதா முதல் வியாசன் வரை எழுகிறது .

பொதுவாக உரையாடலில் ஒன்று நிகழும் .  இமைக்கணத்தில் ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான ஒன்றில் சென்று உழலும் கனவு  கசான்ஸ்கி எழுதிய கிறிஸ்துவின் கடைசி சபலத்தை ஒத்திருக்கிறது எனும் பார்வை . இந்த பார்வை நமது புராண மரபில் நாம் எந்த அளவு அறிமுகம் அற்று இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது . நாமெல்லாம் சிறு வயதில் கேட்டிருப்போம் ,விஷ்ணுவின் தாகத்துக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற நாரதர் ,சம்சார சாகரத்தில் சிக்கி உழலும் புராண கதை .  இந்த புராணம் நினைவில் எழாமல் கசான்ஸ்கி மட்டும் நினைவில் எழுவது  நாம் எந்த அளவு நமதே ஆன மரபொன்றிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம் என்பதன் சான்று .

அவ்வாறானதே  இன்று வியாசர் நீலனை சந்திக்கும் தருணம் மீதான உரையாடல்களும் .  லூயி பிராண்டல்லோ  வழியாக இங்கே ''இறக்குமதி '' ஆன அழகியல் என்பதே முதல் பார்வை . இங்கும் நிகழ்வது நமது மரபின் மீதான அறிமுகம் இன்மையே .அசிந்தா  ஓவியங்கள் எல்லாம் தியான சாதகர்களால் வரையப்பட்டது .  மீட்சி அளிக்கும்  ஆழ் மனக்  கனவை துளித் துளியாக தூரிகை கொண்டு தீட்டி எடுத்து ,அதை தியானித்து மெய்மை நோக்கி நகர்வது ,மெய்ம்மைப் பாதைகளில் ஒன்று . விஷ்ணுபுரம் நாவலில் ஸ்ரீநாமர் அப்படி ஒரு ஓவியத்தை வரைந்து அதை தியானிக்கும் சித்திரம் உண்டு .அதன் நீட்சியே இங்கு வெண்முரசில் நிகழும்  வியாசன் நீலன் சந்திப்பு .

வியாசன்  காமம் சார்ந்து தன்னை அலைக்கழிக்கும் முதல் வினாவை அவரது மகன் வசம் கேட்கிறார் . சுகர் அந்த வினாவுக்கான பதிலை ,அல்லது அந்த வினா அழியும் நிலையை வியாசர்  எங்கே அடைவாரோ அங்கே ஆற்றுப் படுத்துகிறார் .அங்கே துவங்கிய வினாக்கள் வழியே  வியாசர் கடந்து ,கடந்து  நீலன் முன் எளிய நேரடியான வினாவுடன் வந்து நிற்கிறார் .

இந்த நேரடியான வினா  சுகர் எந்த உலகத்தை வியாசனுக்கு அளித்தாரோ ,அந்த உலகக்த்தில் இருந்து வெளியே வந்து விழுந்து வியாசன் எழுப்பிக்கொள்ளும் வினா .கரையில் விழுந்த மீன் .நீர் என்றால் என்ன என வினவுவது போல . நீலன் இது வினாவும் அல்ல ,இது வினா என்றால் இதற்க்கு விடை என ஏதும் இல்லை என உணர்த்தி அந்த மீனை மீண்டும் கடலில் விடுகிறார் .

நீலம் நாவலில் ராதை ,நான் நான் நான் என உருகி நிற்கிறாள் .அந்த நானை உதாசீனம் செய்யும் நீலன் மீது கோபம் கொள்கிறாள் .  நீலன் அவளை தொட்டு எழுப்பி அவளருகே செல்லும் நதியை காட்டுகிறான் . நதியின் ஒவ்வொரு துளியும் கண்ணன்கள் . அவள் காண பெறுகிச் செல்கிறது கண்ணன் எனும் பெருவெள்ளம் .  உடைந்து கரைந்து நான் என்பது அழிந்து ,மெய்யான சரணடைதல் அதில் நிலைக்கிறாள் ராதை .

அதே மாற்றத்தைத்தான் இங்கே நீலன் வியாசருக்கு அளிக்கிறான் . ஐயோ என் மகன் எனும் ஒரே உணர்வே வியாசரின் உலகமாக இருக்க , அதை ப்ரபஞ்சமளவு விரிக்கிறான் நீலன் ,  விண்ணும் மண்ணும்  நிலவும் எண்ணிறந்த விண்மீனும் எல்லாமும் எல்லாமும் வியாசனும் ,சுகனும் அகி நிற்கிறது .  இப்படி எங்கேனும் சுகனை கண்டு வியாசன் கதறியது போல ,இப்படி எங்கேனும் வியாசனை கண்டு அவரது தந்தை கதறி இருப்பார் ,அந்த தந்தையை இப்படி கண்டு அவரது தந்தை ,தந்தையர் நிறை .

யதார்த்தத்தில் ஒளி வீச்சு அளிப்பது வேறு .காவிய கர்தன் கையில் உள்ள மொழி எனும் வைரத்தை அது தீண்டும் போது நிகழ்வது வேறு . 

அரிசியை உண்டுதான் உயிர் வாழ முடியும் .வைரம் உண்டு வாழ முடியாது . வியாஸா  இந்த உலகம் அன்றும் இன்றும் என்றும் உற்பத்தி செய்து பெருக்கித் தள்ளும் மொத்த  அரிசியை நிறை வைத்தாலும்  முள்  சமன் கொள்ளாது ,உன் சொல் எனும் வைரம் ஏந்தி தாழ்ந்தே நிற்கும் நிற்கும் அதை கொண்ட   துலா தட்டு . என உணர்த்துகிறான் நீலன் .

வைரத்தை எத்தனை துண்டுகளாக உடைத்தாலும் எஞ்சிய ஒவ்வொரு துண்டும் வைரம் என்றே அமையும் .எஞ்சிய ஒரு சொல் இன்னும் வியாசசனிடம் . 

துளி வைரம் .
கடலூர் சீனு