‘மா நிஷாத’ எனத் துவங்குகிறது ஆதிகவியான புற்றுறை முனியின் மகாகாவியம். தன்னில் திளைத்திருந்த காதலிணைகளான இரு கிரௌஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனைக் கண்டு மனம் வெந்த முனி எடுத்த முதல் சுலோகம், வான்மிகி ராமாயணமாக, ஒரு மாபெரும் காவியமாகிய தொன்மம் வெண்முரசில் சொல்வளர்காட்டில் வந்தது தான். இருப்பினும் அதே நிகழ்வு வியாசர் தன் இடத்தைக் கண்டடையக் காரணமாவதும், அது ஒரு மீச்சிறு ஆரம்பப் புள்ளியாகவும் அமைவது என்பது ஜெ வின் அபாரமான கற்பனை. அதே நிகழ்வு இன்னும் சற்று விரிவான தளத்தில் இங்கு நிகழ்கிறது.
வால்மீகி முன் இரு பறவைகளே இருந்தன, ஒரு வேடனும். அதில் ஆண் பறவை அடிபட்டு வீழ பெண் கலங்கித் தவிக்கும். இந்நிகழ்வு ராமாயணத்தைச் சுட்டுவதாக பல விரிவான விளக்கங்கள் இருக்கின்றன. வெண்முரசில் இரு பறவைகள மட்டுமல்ல, மேலும் பல பறவைகள் இருக்கின்றன. வேடர்களும் பலர் இருக்கின்றனர். வியாசரால் ‘நில் காட்டாளனே’ எனக் கூவ இயலவில்லை. வெறுமனே பார்த்து நின்றிருக்கிறார். அவர் காணவே பல பறவைகள் அடிபட்டு வீழ்கின்றன. வீழ்த்தியவர்கள் ஆடிப் பாடி மகிழ்கின்றனர். ஒரு தூக்கம் கடந்த நிலையில் நீர்பரப்பு மீண்டும் நாரைகளால், அவற்றின் மகிழ்சிக் கூச்சலால் நிறைகின்றது. இந்நிகழ்வு அப்படியே பாரதப் போர் அல்லவா. தன் குருதி முளைத்துப் பரவி, சிதறி, பின் மீண்ட முழு நிகழ்வைக் கண்டவர் அல்லவா வியாசர். ஒரு சொல்லில் இருந்தே இரு காவியங்கள் பிறக்க முடியும் என இணைத்த கற்பனையை என்ன சொல்ல!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்