அன்புள்ள ஆசிரியருக்கு...
ஒருவழியாக முதற்கனல் நாவல் முழுவதையும் ஒலிப்பகுதிகளாக மாற்றி விட்டேன், இத்தனை ஆண்டுகள் கழித்து.
இமைக்கணத்தில் வருவது போல, கணப்பொழுதில் இன்றைய பகுதிகளுக்கும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளுக்கும் மாறி மாறிப் போய் போய் வந்தேன். இன்றிருக்கும் யாரும் அன்று இல்லை. அன்றிருந்தவர்களில் இன்றிருப்பவர்கள் பீஷ்மரும், சிகண்டியும், திருதராஷ்டிரரும் விதுரரும் தான். முதற்கனல் முடிவில் விதுரர் கைசூப்பும் நிலைக்குக் கூட வரவில்லை. திருதராஷ்டிரர் உடல் கவிழ்ந்திருக்கவில்லை. பீஷ்மரும் சிகண்டியும் மட்டுமே அன்று இருந்த மேனிக்கு அப்படியே இமைக்கணத்திலும் வருகிறார்கள். அதே விரதமும், அதே பழிவெறியுமாக.
முதற்கனலை மறுவாசிப்பு (literally!) செய்கையில் மனதை மிகவும் பாதித்தது அம்பை தான். எல்லோராலும் முற்றிலும் கைவிடப்பட்டு இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒருவர் கூட துணைக்கு இல்லாத (நீங்கள் எழுதிய தெருநாய் பற்றிய பதிவு போல) முழுத்தனிமை. பழமையான தொல்குடி ஒன்றின் மூத்த இளவரசி என்ற உச்சியிலிருந்து பித்தி என்ற அதலபாதாளத்திற்கு வீழ்ச்சி. ஒரு மகளென அவளைப் பார்க்கையில் தவிப்பு.
முன்னர் படிக்கையில் புரியாத சில விஷயங்கள் இப்போது விளங்குகின்றன. பித்தியான பின்பும் அவள் ஏன் காசியின் வீதிகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்? தர்க்க மனம் குலைந்து விட்ட பின்பு வேறு புலன்கள் திறந்து அவளது ஊரைச் சொல்லி விட்டதா? அவளது தந்தை மறுமணம் செய்வது வரை அவள் அங்கேயே திரிகிறாள். மறுமண அறிவிப்பும் அதற்கான முன்னேற்பாடுகள் நிகழ்த்துவங்கியதும், நகர் நீங்கி தீக்குளிப்புக்குச் செல்கிறாள். அதுவரை அவளை அங்கே இழுத்துப் பிடித்து வைத்தது என்ன? வேள்வியில் மறைந்த அவள் அன்னையின் ஆன்மாவா? மறுமணத்திற்குப் பின் அது அங்கிருந்து விடை பெறச் சொல்லி விட்டுத் தன்னுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டியதா?
அம்பைக்கு அடுத்தது பரிதாபத்திற்கு உரியவளானாள் சிவை. வறுமை தான்; அடக்குமுறை தான். ஆனால் அந்த வாழ்வில் அவள் மகிழ்வாகவே இருந்தாள். அவளுடைய ஊழ் அன்று அவளை வியாசரிடத்தும் சத்யவதியிடத்தும் இழுத்துச் சென்றது. அதனால் அவளுடைய சூதப் பணிப்பெண் வாழ்க்கை அறுபட்டு சூத அரசி ஆகிறாள். அம்பிகையும் அம்பாலிகையும் எங்கும் ஷத்ரிய அரசிகள் என்று சொல்லப்படுவதில்லை; ஆனால் இவள் எங்குமே சூத அரசி என்றே சொல்லப்படுவாள். ஏன்? ஏனெனில் இயல்பாகவே அரசி என்றால், அவர்கள் ஷத்ரியப் பெண்கள் தான். விதிவிலக்காக அமைபவர்கள் இப்படி ஒரு சிறப்புச்சொல் சுமக்க வேண்டியதாகிறது (குந்தியும் அதைத் தான் அடைந்தாள் யாதவ அரசியென. ஒருவேளை அந்தச் சிறப்புச் சொல்லைத் தவிர்ப்பதற்கான பனிப்போர் தான் யாதவ அரசி பாமாவுக்கும் ஷத்ரிய அரசி ருக்மிணிக்கும் நிகழ்ந்ததோ என்னவோ!). சிவை ஒருவழியில் சுனந்தை தான். அது பால்ஹிகர் சிகண்டியிடம் சுனந்தையைப் பற்றிச் சொன்ன போது தோன்றிக் கொண்டே இருந்தது.
விசித்திரவீரியனுடைய திருமணத்திற்குப் பின்பு பீஷ்மரை ஏன் சத்யவதி நகர்நீங்கச் சொல்கிறாள்? மக்கள் விழையவில்லை, பெண் பழிச்சொல் என்று தான் அன்று புரிந்தது. இன்று படிக்கையில் இன்னும் கொஞ்சம் அதிகம். பெண்களைக் கவர்ந்து வந்தவர் பீஷ்மர். முதியவரானாலும் பெருவீரர். காமத்துறப்பு கொண்டவர், ஆகவே பெருவீரியம் கொண்டவர். மணம் புரிந்து கொண்ட கணவனோ உடல் நலமற்றவன். இளவரசியர் தடம் மாறலாம். பீஷ்மரது குருதி வழியாக சந்தனுவின் வம்சம் தொடரக் கூடாது, தன் மகன்கள் வழியாக மட்டுமே அது நிகழ் வேண்டும் என்பதற்காகத் தான் தன் தந்தையிடம் சொல்லி சந்தனுவிடம் பீஷ்மரை விலக்கச் சொல்லும் நிபந்தனையை வற்புறுத்தியவள் சத்யவதி. அவள் இதை ஒத்துக் கொள்வாளா? எனவே பீஷ்மரை அரண்மனை விட்டுக் கொஞ்ச காலம் விலகச் செய்கிறாள். பீஷ்மரும் அதைப் புரிந்தவராகவே காடணைகிறார். ஆனால் அவள் ஊழ் அவளுக்குப் பேரிடி ஒன்றை வைத்திருக்கிறது. சித்ராங்கதன் என்ற அழகிய ஓர் ஆணுடலைச் சிறுவயதில் கற்பனையில் கண்டு திளைத்த சத்யவதி அதே பெயரையே மூத்த மகனுக்கு வைக்கிறாள். அவன் ஆண் உடல் நாட்டமுடையவனாக மறைகிறான். மற்றொரு மகன் உடல்குறைவு கொண்டவன். பின், கரியவன் என்ற காரணத்தால் வனத்தில் கைவிட்ட வியாசன் என்ற மெலிந்த கரிய, வயதான மற்றொரு மகன் மூலமாகவே தன் குலம் நீட்சி கொள்வதைக் காண நேர்கிறது. அது பீஷ்மருக்கு அவள் போட்ட கட்டுக்குக் கிடைத்த பதிலடி.
முதற்கனல் முடித்த சூட்டோடு மழைப்பாடலின் முதல் பகுதியையும் பதிவு செய்து விட்டேன். இன்றேல், அதைத் தொடுவதற்கு இன்னும் சில காலம் ஆகும். இப்போது ஏற்கனவே ஒரு காலடி எடுத்து வைத்தாகி விட்டது, தொடர வேண்டியது தான் என்ற புள்ளிக்குக் கொண்டு வந்தாயிற்று.
தொடர்ந்து இதைச் செய்து கொண்டிருக்கையில், உணர்ந்த ஒன்று.
ஒரு மனம் ஒவ்வொரு வரியாக எழுத்துப் பிழை இல்லாமல் படித்து வாய்க்குக் கொடுத்து பதிவு செய்து கொண்டிருக்க, கூடவே வேறு ஏதோ ஒன்றைப் பற்றி நினைவு வந்து, அது தொடர்பாக வரிசையான நினைவுகள். இரண்டுமே இணையாக நிகழ்கின்றன, ஒன்றையொன்று பாதிக்காமல். சட்டென ஒரு கவனம் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தாவி சரிபார்த்துக் கொள்கிறது. அதுவே ஆச்சரியமும் பட்டுக் கொள்கிறது. கை பாட்டுக்கு வண்டி ஓட்டிச் செல்கையில் மனம் எங்கோ சென்று விடுதலைப் போலவே. பன்கவன வல்லுனர்கள் இதைத்தான் பல மடங்கு கூர் தீட்டிக் கொள்கிறார்கள் போல.
செய்யும் எச்செயலும் வேறு எதற்காகவும் இல்லை. நம்மை நாம் அறிதலுக்காகவே என்பதை இம்முயற்சியில் உணர்ந்தேன்.
ஒலிப்பதிவை மேற்கொள்ள நேரம் கிடைத்த போதெல்லாம், மனம் கவர்ந்த பகுதிகளை மட்டுமே தேடித் தேடிப் பதிந்தேன். ஒருதடவை அப்படிப் பதிந்து கொண்டிருக்கையில் சட்டென புறங்கழுத்தில் ஓர் அடி விழுந்தது. ‘இந்த வேலையை நான் எதற்காகச் செய்கிறேன்? என் மகிழ்ச்சிக்காகவா? இல்லை, ஆர்வமுள்ளவர்கள் பயனுற வேண்டும் என்பதற்காகவா?’ என்ற கேள்வி வந்தது. என் தனி மகிழ்வுக்கு என்றால், நான் இதை முழுக்கச் செய்யப் போவதில்லை. ஏனெனில் என் மனதுக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தான் பதிவேன். வெறும் தகவல்களாக வந்து குவிந்து கொண்டிருக்கும் பகுதிகளை நான் தொடப் போவதில்லை. யாருக்கும் பகிரவும் போவதில்லை. அது தான் என் குறிக்கோளா என்றால் இல்லை. பதிந்து மக்களிடம் பகிர வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்றால், நான் செய்து கொண்டிருப்பது தான் என்ன? நான் பதியும் பதிவுகளைத் தான் விரும்புபவரும் கேட்க வேண்டும் என்றால் அது வெண்முரசுவின் வரிசைக்கு நான் செய்யும் பிழை. இதையே தான் என் தனி வாழ்விலும் அலுவலக வாழ்விலும் பின்பற்றி வருகிறேன் என்பது மின்னல் போல் தெளிவாகியது. அன்பைக் கொடுக்கும் குடும்பத்திற்கும் காசு கொடுக்கும் அலுவலகத்திற்கும் நான் வரிசையாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் (நான்கு வேடங்களே தான்!) எனக்குப் பிடித்ததைத் தோன்றிய வரிசையில் செய்து கொண்டிருந்து விட்டு ‘நான் நிறைய செய்து விட்டேன்’ என்ற வெற்று ஆணவமும் ‘இத்தனை செய்தும் ஒன்றும் நல்லதாக நடக்க மாட்டேன் என்கிறதே’ என்ற சுய இரக்கமும் தான் மிஞ்சுகின்றன என்று உணர்ந்தேன்.
எனவே முடிவு செய்தேன். ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் மற்ற நாவல்களை ஒதுக்கி வைத்து விட்டு, முதற்கனலிலிருந்து தொடங்கினேன். ஒவ்வொரு பகுதியாக. எத்தனை கடினமாக இருந்தாலும் சலிப்பு வந்தாலும் துவக்கத்திலிருந்து இறுதி நோக்கி, எந்த வரிசைக் குலைவும் இல்லாமல். என் விருப்பத்தின் படி செய்ய முடியவில்லையே என்ற நினைப்பு வருகையில், பயனாளிகளைப் பற்றிச் சிந்தித்து கொள்வேன். இதை இனி எல்லா இடத்திலும் செயல்படுத்த முயல்வேன்.
இதைப் பகிர வேண்டுமா என்று முதலில் தோன்றியது. வேறு சிலரும் இந்தச் சிக்கலில் இருக்கலாம் என்பதால் இணைக்கிறேன்.
நன்றிகள்,
இரா.வசந்த குமார்.
அன்புள்ள வசந்தகுமார்
வேறு எந்த பயன் இருக்கிறதோ இல்லையோ, நான் அறிந்தவரை என் ஆசிரியர் கோவை ஞானி உங்கள் ஒலிவடிவ முதற்கனலை நான்குமுறைக்குமேல் கேட்டதாகச் சொன்னார். பதிவுசெய்து ஒரு கேள்கருவியுடன் அவருக்கு அளித்தோம்
பலருக்கும் இது உதவியாக இருந்திருக்கும். நாம் நம்பி, உண்மையாகச்செய்யும் செயல்கள் வீணாவதிலை
ஜெ