ஜெ
எபிஸ்டமாலஜி என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த தளத்தில் அறிதலுக்கான பிரச்சினைகள்
ஒவ்வொன்றாகத் தொட்டுச் செல்கிறது இமைக்கணம். முதலில் அறிதலில் உள்ள பிரச்சினை சாமானியம்
விசேஷம் என்ற பிரிவினை. சாமான்யதள கேள்விக்கு விசேஷத்தை பதிலாகச் சொல்வது பலரும் செய்வதுதான்.
ஒருவருக்கு நோய் என்றால் அதற்கு பிரம்மவாதம் பதில் அல்ல. அதேபோல நாம் நம்மை அறியாமல்
விசேஷதளத்திலுள்ள விஷயங்களுக்குச் சமானியத்தின் பதிலையும் சொல்லிக்கொண்டிருப்போம்.
உதாரணமாக ஒரு மரணம். அதற்கு பிரம்மவாதம்தான் பதிலே ஒழிய உலகவாழ்க்கை இல்லை.
கீதையின் சாரம் இப்படி சாமானியம் விசேஷம் என்று அறிவதற்கு நடுவே ஒரு சமன்வயத்தை
அடைவது. இரண்டு அறிதல்களும் ஒரு சிறந்த நிலையில் ஒன்றாக இருப்பது. அதையே யோகம் என்று
[அதாவது இணைப்புஞானம் என்று] சொல்கிறது கீதை.ஒவ்வொரு அணுவும் தன் வேலையைச் செய்கிறது.
ஒட்டுமொத்தம் அதன் வழியாக தன் வேலையைச் செய்கிறது. இரண்டும் முரண்படாத நிலை. இவ்விரண்டும்
கர்ணன் வழியாக வெளிப்படுகிறது
அடுத்தபடியாக அறிதலின் மூன்றுநிலைகள். செயலாற்றி அறிவது. ஞானத்தால் அறிவது யோகத்தால்
அறிவது. இதை பீஷ்மரின் வில்வித்தையை கண்டகரும் காலகண்டரும் கற்றதன் வழியாகச் சொல்லப்படுகிறது.
அறிவதில் அகங்காரம் என்ன திரிபை அளிக்கிறது என்பதைப் பேசுகிறது. தன்னிலை அழிந்தால்தான்
அறிதலே நிகழமுடியும் என்று சொல்கிறது. அறிதல் என்பது செயல்வழியாக நிகழ்வது. அச்செயலை
எப்படி ஆற்றுவது என்றும் செயல்படாத நிலை என்பது ஏன் சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறது.
சுவாமி