இமைக்கணம் - வெண்முரசின் கனி
அன்பு ஜெ,
இமைக்கணம் பற்றிய திரு.அருணாச்சல மகராஜனின் கருத்தினை தங்கள் விவாத தளத்திலே கண்டேன். மிக அழகாக தங்களின் பதிவினை விளக்கியுள்ளார்.
" இந்த காகிதச் சூத்திரங்கள் அறிவாக வேண்டுமென்றால் அவை பதிலிறுக்கும் வினாக்கள் வாசகரிடம் இருக்க வேண்டும். சாதாரண வாழ்வில் இருந்து அவற்றை வந்தடைபவர்கள் மிகக் குறைவு. அப்படி அவ்வினாக்களுக்கு வந்திருந்தாலும் அவற்றை முறையாகத் தொகுத்து, சொல்லாக்கி, மொழியிலாக்குபவர்கள் இன்னும் குறைவே. மாறாக இக்கேள்விகளைச் சுமந்தலையும் பாத்திரங்கள் என்றால், வாசகரும் அவர்களோடேயே வாழ்ந்திருப்பதால் அவர்களுக்கும் இவ்வினாக்கள் பொருள் அளிப்பவையாகவே இருக்கும். எனவே இந்த அறிதல்களை நினைவு கூர்கையில் அவை முளைத்த வினாக்களும், அவ்வினாக்கள் வேர்கொண்ட வாழ்வும் அறிபவன் கூடவே நினைவுக்கு வரும். அவ்வாழ்வும், வினாக்களும் இவ்வறிதல்களைக் கால மாற்றங்களுக்கு ஏற்பவும், அறிபவரின் தொடர் அறிதல்களுக்கு ஏற்பவும் மெருகூட்டிக்கொண்டே செல்லும். இறுதியாக மெய்மையை அடையவும் கூடும்."
வாசகனின் அணுகு முறையை செவ்வனே வெளியிட்டுள்ளார்.தங்களின் அமுதபொழிவினைத் தாங்கும் பாத்திரம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்துள்ளார். சிந்தாமல் , சிதறாமல் , தன் வாழ்வின் பல நுண்ணிய கேள்விகளுக்கான விடைகள் இதில் பெரிதினும் பொதிந்திருப்பதால். முக்கிய கட்டத்தில் சிலர் அறிவுறுத்துவர், எதிரே உள்ளவர்களின் கவனம் தன்னை கவர.இதுவும் அச்செயலையே நினைவுறுத்தியது.
புதுவை கூடுகையின் போது திரு.ஜா ஜா அவர்களின் விளக்கம் , அதாவது பல்வேறு நிலையிலிருந்து தாங்கள் வெளிப்படுத்தும் நிகழ்வுகள் அடங்கிய தங்கள் நாவலை வாசிக்கும் முறையை வழிமொழிந்ததாகவே திரு.அ.மகராஜனின் பதிவினைப்பார்த்தேன்.
இமைக்கணம் பதிவு வரையாவது இவரின் இப்பதிவு , வாசகனை அணுகி யுரைக்கும் இக்கூற்று , திரு.ஜா ஜா வின் பதிவு, ஒவ்வொரு பதிவுக்கீழவும் இடம்பெற்றதுப் போல் இடம் பெற்றாலும் நல்லதே!
அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.
செல்வி அழகானந்தன்
கடலூர்.