Saturday, April 14, 2018

மீள்நிகழ்வு



அன்புநிறை ஜெ,

சுதுத்ரியில் சிகண்டி செல்வது பீஷ்மர் சென்ற தினத்தின் (முதற்கனல் 42) மீள்நிகழ்வு. ஒரு Dejavu போல சிகண்டி உணர்ந்திருக்க வாய்ப்புண்டு என்று தோன்றுகிறது. எனக்கு இமைக்கணம் 17 வாசித்ததும் அப்படித்தான் இருந்தது.

சுதுத்ரி வயல்வெளியாக மாறிப் பசுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது என்பதில் தொடங்கி மொத்த ஊரின் வர்ணனையும்,  குலப்பூசகர் இடையில் புலித்தோலாடை அணிந்து கையில் அகல்விளக்குடன் கோயில்களை நோக்கிச் செல்வது வரை அனைத்து நிகழ்வுகளும் அச்சில் வார்த்து அதுவே. ஆயிரமாயிரம் வர்ணனைகள் அனுதினம் எழும் வெண்முரசில் இத்தகைய மீள் பதிவு போன்ற எழுத்து காரணமின்றி இல்லை.

அன்று பீஷ்மர் அகன்றது முதல் அன்றே போல நூறு வயது வரை காத்திருந்த அன்னையின் விழிப் பார்வையில் மீள நிகழ்ந்த தினம் சிகண்டியின் வருகை.  அவள் மறைந்த பின்னரும் அன்னையின் விழிகள் அவ்வண்ணமே மலர்ந்திருந்ததைக் கல்லில் பொறித்தனர் ஊர்மக்கள். அந்த விழிகளின் வழி மலர்ந்திருக்கிறது இமைக்கணம் 17. 

அன்று அங்கு பீஷ்மருக்கு ஒரு கனவு வருகிறது - அவர் இறந்துவிட்டு நீருள் கிடப்பதாக, மேலிருந்து முகங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக. 'மீன்களாகிய நாங்கள் மூதாதையரை உண்பவர்கள், உணவாக ஆகாத தந்தையால் என்ன பயன்?' அது முன்னோக்கி அவர் செல்லும் பயணம். சிகண்டியின் கேள்விக்கு பதில் முன்னரே காத்திருந்தது. விதை சிதைக்காத முளைத்த பயிர் ஏதுமில்லை. //விடையென தன்னை நிறுவிக்கொண்டு வினாக்களால் உலகுகள் சமைத்து விளையாடும் மெய்மை//

அடுத்தது, சிகண்டியிடம் அன்னையின் வார்த்தையாக வந்து சேர்வது: // ஓர் எண்ணத்தின்பொருட்டு ஒருவரை பலி கொள்வேன். ஒரு சொல்லின் பொருட்டு ஒரு குடியை. ஒரு செயலின் பொருட்டு ஒரு நகரை. எரி துளியென்றே எழுகிறது// இங்கிருந்து முதற்கனல் முழுமையாக இமைக்கணம் வரை மூண்டெழுகிறது.

ஒரு எண்ணத்தின் பொருட்டு -  பீஷ்மர், ஒரு சொல்லின் பொருட்டு ஒரு குடி -   'நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழமுடியும் மணிமுடியும் செங்கோலும் இன்றி' என்ற ஒரு சொல்லின் பொருட்டு சால்வனின் குடி, ஒரு செயலின் பொருட்டு ஒரு நகர் -  திரௌபதியை அவைச்சிறுமை செய்ததன் பொருட்டு அழியும் அஸ்தினபுரி என்று புரிந்து கொள்கிறேன். பிழைச்செயல் புரிந்து கொற்றவையின் கண்ணீரில் எரிந்து மதுரையும் அதேவகைமைதானே. எரியென எழும் வெவ்வேறு துளிகள்; துளியெனத் தோன்றி வேள்விக்களம் நிறைக்கும் எரி.

வேறு வகையில் என்றேனும் திறந்து கொள்ளலாம் மீள்வாசிப்புகளில். 

மிக்க அன்புடன்,


சுபா