Wednesday, April 25, 2018

இமைக்கணம்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
 

"ஒரு சிறு இடைவெளி" பதிவும், தள முடக்கமும், "இமையத்தனிமை" பதிவும் நடந்து பல வருடங்கள் ஆனது போல் உள்ளது !!.. இமைக்கணம் முழு வீச்சுடன், ஆழத்துடன் செல்கிறது..  

வெண்முரசு படித்துக்கொண்டிருக்கும் போது, பல முறை நாவலுக்கு வெளியே தமிழ் இலக்கிய, அரசியல், சமூக சூழலில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், சர்ச்சைகள் போன்றவை, அப்பொது வந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரிலும் ஏதோ ஒரு கோணத்தில் கதையின் ஒரு அங்கமாக வருவது போல் தோன்றும்.. தங்களுக்கு இதை பற்றி கேட்க நினைப்பதும் உண்டு.. ஏதோ ஒரு தளத்தில், வெளி உலக நிகழ்வுகள் உங்கள் மனதுள் சென்று புனைவாக கலந்து வெளி வருவது போல....

இப்போதும் இதுவரை வந்துள்ள இமைக்கணம் கதையும், உங்கள் இமையப்பயணம், அதை தொடர்ந்த இமையத்தனிமை பதிவுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது போல் தான் உள்ளது.. குறிப்பாக வியாஸனின் கேள்வி பகுதி.. என் பிரமையா என்றும் தெரியவில்லை.. இவ்வளவு தூரம் தொடர்பு படுத்தக்கூடாது என்று...

இந்த வேளையில் வந்த இந்த உங்கள் பிறந்த நாள் சிறப்பாக அமையவும், தங்கள் பணி மேலும் உச்சத்தை அடையவும், மனம் நிறையவும், மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன்
வெண்ணி

அன்புள்ள வெண்ணி

பொதுவாக வெண்முரசுக்கும் புற்ச்சூழலுக்கும் தொடர்பில்லை. நான் அதை மிகத்தெளிவாகவே இரண்டாகப் பகுத்திருக்கிறேன்

ஆனால் நான் செல்லும் பயணங்கள் பெரும்பாலும் வெண்முரசுடன் இணைந்துகொள்கின்றன. பயனத்தின் நோக்கமே அதுதான்

ஜெ