Monday, April 23, 2018

முதற்கனல் சித்திரங்கள்

அன்புள்ள ஜெ
      


 
        நலம் தானே? முதற்கனல் வாசிப்பில் சித்தராங்கதன் கனாகச் சுனையில் ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருப்பதை படித்தபோது கிரக்கத்தொன்மத்தில் நெமிசிஸ்ஸிடம் சாபம் பெற்ற நர்சிஸஸ் நீரில் தனது தீரா முகபாவங்களைக் கண்டு தன்னுருவின் மீது தானே காதல் கொள்ளும் சித்திரத்தினை மனம் சென்று தொட்டது.அவனுடைய தாயும் சத்தியவதி போன்று செவிசஸ் என்ற நீர்மகள் என்பது இன்னும் வியப்பாக இருந்தது.

இதேபோல குருதிச்சாரலில் நக்கனை அன்னயை பற்றிய விவரணைகளில் நூற்றாண்டு காலத் தனிமை நாவலின் ரெமிதியாஸ் நினைவில் எழுந்தால் இருவரின் கட்டற்ற தன்மையையும் ஏதோ ஒரு இடத்தில் என் மனம் இனைத்துக்கொண்டது. ஒன்றிலிருந்து இன்னொன்றை தொட்டேடுக்கும் போது  களமும் கதையும் இன்னும் பெருகுகிறது. 

வியாசனுக்குள் எழுந்த கட்டற்ற பித்தும் கவியும் தனிமையும் ஆமைதியும் குரோதமும் காமும் வெறுப்பும் துயரும் தான் உருக்கொண்டு மாகபாரதம் முழுக்க கதை மாந்தர்களன பிறந்தனர் என்ற எண்ணத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். அதன் நேர் நிலை உச்சம் சுகர் என முதற்கனலில் வாசித்தடைந்தேன்.
தாங்கள் இமையத் தனிமையில் இருந்த நாட்களில் ஏதோ வேகத்தில் குருதிச்சாரலைத் தான் முதலில் படித்தேன். தங்களை இமையத்தனிமைக்கு அழைத்துச்சென்ற ஆற்றல் என்ன என அறியும் ஆவலில்.

போன முறை என்னை பற்றி ஏதும் சொல்லவில்லை.நான் கோவையை சேர்ந்தவன் ராமக்கிருஷ்ண மிஷனில் படித்துவருகிறேன்.

தங்கராஜ்
கோவை