அன்புநிறை ஜெ,
நலமாக இருக்கிறீர்களா?
இன்றைய வெண்முரசு வாசித்ததும், கிராதத்தில் சண்டன் கூறும் காளையன்-காளி கதை நினைவில் எழுந்தது. மீண்டும் வாசித்தேன். காளியைக் கரியவள் என செஞ்சடையன் சிறுமைச் சொல் எழுப்ப, கன்னிமை தவம் நோற்றுப் பொன்னுடல் பெற்று எழுகிறாள் காளி. அவன் சொல்கிறான்:
//என் ஆணவச்சொல் அது, தேவி. நான் விழைந்ததும் பெருங்காதல் கொண்டதும் உன் கரிய உடலை அல்லவா?” என்றான். “அதை நானும் அறிவேன். அது உங்கள் ஆழத்தால் நீங்கள் விழைந்தது, உங்கள் தகுதியால் நீங்கள் பெற்றது இது” என்று அவள் சொன்னாள்//
காசியின் சுயம்வர மண்டபத்தில் பீஷ்மர் அம்பையைக் கண்டதும் அவர் மனம் அவளை நோக்கி எழும் முதல் தருணத்தில், போர் கண்டெழும் கொற்றவையெனத் தன்னைத் தொட வந்தவனை வாளால் வெட்டி வீழ்த்தும் அந்தக் காட்சியில் அவளே குருகலத்தின் சக்கரவர்த்தினி என அவளை நோக்கி அடியெடுத்து வைக்கிறார். அது அவர் உள்விழைவு.
பின்னர் அஸ்தினபுரியில் தன் காதலை உணர்த்த எண்ணி அம்பை பேசும்போது, தான் சந்திக்கக் கூடுவதிலேயே பெரிய எதிரி தன் முன் தோற்று நிற்கிறாள் என எண்ணியே தன்னை கடினமாக்கிக் கொள்கிறார் பீஷ்மர். அதுவே தேவவிரதன் என வாழ்நாள் எல்லாம் இலக்குகள் தேரும் அவரது தகுதி.
அவர் விழைந்தது அவளுள் இருந்த சக்ரவர்த்தினியை.
அவர் தகுதியால் அவர் அடைவது எரிபுகுந்தெழுந்த போர் முகம் நோக்கி நிற்கும் வராகியை.
சிவம்-உமை என ஆண்-பெண் இடையிலான பிரபஞ்ச ஆடலென்ற காரணத்தையும், அதன் விளைவான பெரும்போரில் செயல் புரிய ஏகும் குமரர்கள் என்ற காரியத்தையும் மீள மீள நடத்துவதே போலும் இவ்வாழ்க்கை.
மிக்க அன்புடன்,
சுபா