பொத்தி வைக்கப்பட்டிருக்கும் மலர்ச்சரம் தன் வாசத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. புதைத்து வைக்கப்பட்டிருந்த பொற்குவியல் தன் மதிப்பில் குறையாதிருக்கிறது. மண்ணில் புதைந்திருக்கும் சிற்பம் தன் பொலிவை இழக்காமல் இருக்கிறது.
ஆயிரம் இனிப்புகளை உண்டாலும் கையில் இருந்து தவறி விழுந்து சுவைக்கப்படாத இனிப்பின் சுவை தனித்துவமானது என மனம் நினைக்கிறது.
நிறைவேறாத காதல் என்பது
மேற்கொண்டு நிகழாமல் தடைபட்டு பாதியில் தொக்கி நிற்கும் வாழ்வின் பகுதியாக இருக்கிறது. அது நெஞ்சில் சுவைக்கத் தவறிய இனிப்பாக இருந்துகொண்டே உள்ளது.
கால ஓட்டத்தில் அது கொஞ்ச கொஞ்சமாக நினைவுப்பொதிகளின் அடியில் ஆழ்ந்துவிடுகிறது.
ஆனாலும் அது என்றென்றும் அவர் மனதின் ஆழத்தில் கரவுகொண்டிருக்கிறது.
அது தோன்றியபோது கொண்டிருந்த வாசத்தை கால ஓட்டத்தில் இழந்துவிடுவதில்லை.
ஏனென்றால் அந்நினைவு ஒரு ஒரு காலப்பொறி. அந்தக் காதலை நினைவுறுத்தும் ஏதோ ஒன்று எதிர்படும்போது அது மேலெழும்பிவந்து அன்றிருந்த அதே பரவச உணர்வைத் தருகிறது.
நிறைவேறிய காதல் தன் நிலை மாறலாம். அதில் கடமைகள் பொறுப்புகள் சேர்ந்து அதன் பரவசம் குன்றி விடலாம்.
ஆனால் நிறைவேறாக் காதல் அவர் காதல் கொண்டிருந்த காலத்தின் அதே இனிமையை எப்போதும் கொண்டிருக்கிறது.
வெண்முரசு ஒரு புராண காவியமாக இருந்தாலும் அது மனிதர்களின் பல்வேறு உளவியல் கூறுகளை சொல்லிச் செல்கிறது.
நிறைவேறாக் காதல் பொருட்டான உளவியலை இன்றைய அத்தியாயத்தில் வெகு சிறப்பாக காட்சிபடுத்துகிறது.
பூரிசிரவஸ் தேவிகை இடையில் காதல் அரும்பி ஆனால் முதிராது போய், கால ஓட்டத்தில் இருவருக்குமிடையே நீண்ட இடைவெளி தோன்றிவிட்டிருக்கிறது.
இப்போது அவர்களின் நேசம்கொண்டவரின் இருப்பும் தோற்றமும் அக்காலத்திய மனநிலைக்கு அவர்களை கொண்டு செல்கிறது.
இன்றைய காலத்தின் சூழலில் அது வெளிப்படுத்த முடியாத ஒன்று எனினும் அவர்களின் அந்தக் காதல் அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளை மீறி அவர்கள் சொற்களில் பாவனைகளில் ததும்பி வெளிப்படுகிறது.
இதில் தேவிகையின் உள்ளம் செயல்படும் விதத்தை அவர்களின் சேடிகள் பூரணை சுரபி ஆகியோரின் சொற்களினூடாக நாம் அறிய முடிகிறது.
பூரணை பேசுவதெல்லாம தேவிகையின் சிந்தனையோட்டத்தின் வெளிப்பாடாகவும் சுரபி பேசுவது அவளுடைய ஆழ்மனதின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.
நாம் நல்லவைகெட்டவைகளை விருப்பு வெறுப்புகளை காரணமாகக்கொண்டு உருவாகும் எண்ணங்கள் ஒருவகை. மற்றொன்று நம் ஆழ்மனதின் உள்ளிருந்து எழுபவை.
அவை சிலசமயம் நாம் எதிர் பார்க்காத எண்ண ஓட்டங்களை எற்படுத்தும், நாம் சிந்திக்க விரும்பாதவற்றை சிந்திக்க வைக்கும்.
இதை வெண்முரசுவிவாதஅரங்கில் சரவணன் (http://venmurasudiscussions.blogspot.in/2017/12/blog-post_66.html ) என்ற வாசகர் குறிப்பிட்டிருந்தார். அது மிகச் சிறப்பான அவதானிப்பு.
பின்னர் சுரபி பேசுவதை மட்டும் தனித்துப் படித்துப்பர்த்தேன். மிகச் சரியாக பொருந்திவருகிறது.
பூர்ணை “வருக, அரசி” என கூடையுடன் முன்னால் செல்ல சுரபி பின்னால் வந்தாள்.
நாம் அறிவினால் சிந்தித்தாலும் பின்னின்று நடத்துவது ஆழ்மனமாக இருக்கிறது.
அவர்கள் பேசிக்கொள்வதை கேட்காத சுரபி “அரசி, இளைய பால்ஹிகரின் இலச்சினை கொண்ட புரவி அது” என்றாள்.
தேவிகையின் புறமனம் பூரிசிரவஸ் இருப்பதை கவனிக்காமல் தவிர்க்கப்பார்க்கிறது. ஆனால அவள் ஆழ்மனம் அவன் இருப்பை அவளுக்கு வெளிப்படுத்துகிறது.
சுரபி “இளைய பால்ஹிகர் பெண்களுக்கு மிகவும் இனியவர்” என்றாள். தேவிகை திரும்பி நோக்கி “எவ்வாறு சொல்கிறாய்?” என்றாள்.
“அவருடைய மாறா இளமையால்” என்றாள் சுரபி.
தேவிகைக்கு பூரிசிரவஸ் மீதிருந்த கவர்ச்சி அவள் ஆழ்மனதில் புதைந்திருப்பது. ஆகவே இது சுரபியின் கூற்றாக வருகிறது.
சுரபி “அக்கணத்தில் எவ்வுணர்வு எழுமென்று முன்னரே வகுக்கமுடியாது, அரசி. எதுவாயினும் அது அக்கணத்தை ஆளும் தெய்வங்களுக்குரியதென்று கொள்ளுங்கள். நாம் எதற்கும் பொறுப்பல்ல” என்றாள். தேவிகை அவளை ஒருகணம் நோக்கி இமைக்காமல் அமைந்து மீண்டு “நம்மை மீறியா?” என்றாள். “ஆம், நாம் என்ன, பெருக்கில் துகள்கள் மட்டும்தானே?” தேவிகை பெருமூச்சுடன் “ஆம்” என்றாள்.
மற்றவர் முன் நாம் சிந்தித்து நம் பேச்சு செயல்களை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் ஒரு இடத்தில் சிந்தித்து நடந்துகொள்வது ஒரு வகையான நடிப்பு.
ஆகையால் அதில் தடுமாற்றங்கள் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆனால் தேவிகை மீது பூரிசிரவஸ் கொண்டிருந்த நேசத்தின் காரணமாக அவள் தன்னுள் நிகழ்வதை வெளிக்காட்டிக்கொள்வதே அவனை தன்பால் ஈர்க்கும் என்பதை சுரபி சொல்கிறாள்.
ஒரு ஆணின் முன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு பெண்ணின் மரபணுவில் இருப்பது.
யாரையும் நோக்காத பாவனையிலான அலட்சியமும் அதே நேரத்தில் தன்னிருப்பை வெளிப்படுத்தும் தோரணையும் பெண்ணிற்கு இயல்பானது. அது அத்தனை பெண் விலங்குகளுக்கும் என இயற்கை வகுத்திருக்கும் வழிமுறை.
அது இயல்பாக இருப்பதால் ஒரு பெண் அவ்வாறு செய்வது எப்போதும் செயற்கையாகத் தெரிவதில்லை.
சுரபி “முகம் கழுவிக்கொள்ளலாம், அரசி” என்றாள். அதை தேவிகை மிக விரும்பினாள். “ஆம்” என்றபடி பக்கவாட்டில் சென்று அங்கிருந்த நீர்த்தொட்டியை அணுகி குனிந்து அதில் தன் முகத்தை பார்த்தாள். அந்தமுகம் அவளை திடுக்கிடச்செய்தது. படபடப்புடன் உதடுகளை மடித்து அழுத்திக்கொண்டாள். பின்னர் முகத்தின் மேல் நீரள்ளிவிட்டு கழுவினாள், அந்த முகத்தை நீர்ப்பாவையை என கலைக்க விழைபவள் போல. சுரபி அளித்த மரவுரியால் முகத்தை துடைத்தாள்.சுரபி பேழையிலிருந்து கொம்புச்சீப்பை எடுத்து அளித்தாள். அவள் விழிகளை ஒருகணம் சந்தித்துவிட்டு தேவிகை அதை வாங்கி தன் தலையை சீவிக்கொண்டாள். சுரபி அவள் கழுத்திலணிந்திருந்த நகைகளை சீரமைத்தாள். தேவிகை அதை முரண்கொண்ட உடலசைவால் தவிர்த்து தானே சீரமைத்துக்கொண்டாள். ஆனால் அவள் எடுத்தளித்த நறுஞ்சுண்ணச்செப்பை மறுக்க முடியவில்லை. அவளை நோக்காமல் அதை வாங்கி சுண்ணத்தை சிறுதுணியில் சிறிது உதிர்த்து அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்தாள். “அகவைகளுக்கு அவற்றுக்குரிய அழகுகள், அரசி” என்றாள் சுரபி. அந்த மீறல் அவளை எரிச்சல்கொள்ளச்செய்ய ஒன்றும் பேசாமல் திரும்பினாள்.
இந்த ஒப்பனையை செய்யத்தூண்டுபவளாக ஆழ்மனமென இருக்கும் சுரபி இருக்கிறாள். தேவிகை தன் அனைத்து பந்தங்கள் கடமைகளை மறந்து வெறும் பெண்ணென ஆகிச் செய்யும் செயல் தன்னை ஒப்பனை செய்துகொள்வது.
இதையெல்லாம ஒரு பெண் சிந்தித்து செய்தால் முறையற்று தோன்றும். ஆனால் இது அவள் பெண்ணெண்ற இயல்பினால் செய்வது. அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென நினைக்கிறேன்.
ஒரு பெண் தன்னை நேசிப்பவன் என கருதும் ஒருவரிடம் தன்னை வெளிப்படுத்துவதில் கவனம் கொள்வது அவள் ஆழ்மனம் சம்பந்தப்பட்டது.
சுரபி “இங்குதானிருக்கிறாரா? என் எண்ணம் நீங்கள் அவரைச் சந்தித்து அப்பொறுப்பை அளிக்கலாம் என்பதுதான்” என்றாள்.
இப்படி நேசம் கொண்ட ஒருவரிடம் ஒரு பெண் உதவிகள் கேட்பதை அவள் அகங்காரம் தடுப்பதில்லை. இதுவே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் உதவி கேட்க அவன் அகங்காரம் தடுப்பதைப் பார்க்கிறோம்.
அத்துடன் தன்னிடம் ஒரு உதவி கேட்கப்பட்டால் எப்பாடு பட்டாவது அதை முடிக்க வேண்டும் என முயல்வது நேசம் கொண்ட ஆணின் இயல்பாக இருக்கிறது.
இயற்கையில் ஆண் பெண்னென உடல்கொண்டிருக்கும் அனைத்து விலங்கினங்களிலும் இதுவே இயல்பானதாக இருப்பதைக் காண்கிறோம்.
ஒருவர் தன் காதல் ஒன்று நிறைவேறாமல் போய் பின்னர் வேறு உறவுகளைக்கொண்டு வாழ்ந்துவந்திருந்தாலும், அவர் அறிந்தும் அறியாமலும் உள்ளத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் அக்காதலின் விளைவுகளால் அவர் பாதிக்கப்படாமல் இருக்கமுடியாது என்பதையே தேவிகை பூரிசிரவஸ் இடையே நடக்கும் இந்த சிறு உளத் தடுமாற்றங்களில் நாம் அறிந்துகொள்கிறோம்.
தண்டபாணி துரைவேல்