பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசு- ஒரு மலையாள உரையாடல் படித்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!,அதே நேரத்தில் சற்று ஆதங்கமும் கூட...மலையாளத்தின் ஒரு முன்னணி இதழொன்று மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தமிழில் வெளிவரும் 'வெண்முரசைப்'பற்றி - இத்தனைக்கும் இந்த நாவல் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே- பிரதானமாக ஒரு மாத இதழ் முழுவதும் பேட்டியும் புகைப்படங்களும் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. ஆனால் இந்த தமிழ் கூறும் நல்லுலகிலோ எங்கும் தேடித் பார்த்தும் ஒரு காத்திரமான பாராட்டோ, விமர்சனமோ கிடையாது.'கூகுளில்' தேடினால் தனிப்பட்டவர்களின் பாராட்டும்,'வினவின்' பொருளில்லா 'வசவும்தான்' காணக்கிடைக்கிறது. விக்கிபீடி யா தமிழிலோ வழக்கமான அறிமுகத்தை தவிர குறிப்பாக சொல்லும்படி எதுவுமில்லை.எங்கும் தமிழ்!,எதிலும் தமிழ்!! என்ற காட்டு கூச்சலைத் தவிர சமகாலத்தில் ஒருவர் தனது உழைப்பையும்,நேரத்தையும் அயராது செலவிட்டு ஒரு உன்னத காவியத்தை தூய கலப்பில்லாத அருந்தமிழில் கொண்டு வருவதை பாராட்ட மனமில்லை.
நீங்களோ எந்தவித புகழ்ச்சிக்கும்,பாராட் டுக்கும் ஏங்காமால் ஒரு அருந்தவமாகவே இப்பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள்!.என்றைக்குமே நமது தமிழின் அருமை பிறர் சொல்லித்தான் தெரியவேண்டும் போலும்! அதுவும் காலம் கடந்து...
பி.கு: மலையாள இதழில் வந்ததை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டுகிறேன்.
அன்புடன்,
அ .சேஷகிரி.