Thursday, December 28, 2017

தாலிப்பனை



அன்புள்ள ஜெ,

பானுமதி தவிர்த்த மருகியர் அனைவரும் காந்தாரியன்னையைக் காணும் அத்தியாயத்தில் கிட்டத்தட்ட அனைவரின் பெயர்களும், அவர்களின் தேசங்களும் மீண்டும் கொடுக்கப்படுகின்றன. அசலை தலைமையில் 95 மருகியரும் வந்தனர் என ஒரு வரியில் இதைக் கடந்திருக்கலாம். இருப்பினும் வெண்முரசு ஏன் வாசகருக்கு மீண்டும் இத்தகவல்களை அளிக்க வேண்டும்? இதன் பதில் அந்த அத்தியாயத்தின் இறுதியில், காந்தாரி தாலிப்பனையைப் பற்றிக் கூறும் இடத்தில் வந்துள்ளது. "தாலிப்பனை கங்கைச்சதுப்புக்கு வந்ததென்றால் அதற்கு இந்நிலம் போதுமா என்ன?" போதவில்லை தான். விந்தியத்திற்கு வடக்கே உள்ள அனைத்து தேசங்களின் மகளிரும் அன்னையின் முன் நின்று கொண்டிருக்கின்றனர். இதோ இன்னும் ஆயிரவர் தேவை. ஒட்டுமொத்த பாரத வர்ஷமே அங்கே வந்தாக வேண்டுமல்லவா?

மேலும் அவ்வரிகள் இன்னும் ஆழமானவை. ஒரு தாலிப்பனை ஒட்டு மொத்த பாலையையே நிறைக்கும் மகரந்தப் பொடி கொண்டிருக்கும். அதன் இணை அப்பாலையின் வேறோர் கோடியில், எங்கோ தனித்து நின்றிருக்கும். அத்தாலிப்பனையை தொட்டால் மலரும் கங்கை வண்டலுக்கு கொண்டு வந்தால் அத்தனை மகரந்தமும் முளைக்காமல் என்ன தான் செய்யும்? முளைப்பவை வேர் கொள்ள நிலம் வேண்டாமா? நிலமில்லையேல் அவை வாழ இயலாதே? துரியனின் நிலத்தின் மீதான பற்றின் ஊற்று இது தான். அதைத் தான் தாரை சொல்கிறாள். அது குற்றமல்ல, அதுவே இயல்பு என பதிலிறுக்கிறாள் அன்னை. அத்தகைய தாலிப்பனையை இந்நிலத்தின் தன்மை அறியாமல், தன் ஆணவ நிறைவிற்காகக் கொணர்ந்தவர் சத்தியவதி. அப்போதும் கூட பீஷ்மர் திருதாவுக்கு மகதத்திடம் மணக்கொடை கோரலாம் என்றே எண்ணுகிறார். ஊழ் என்பதைத் தவிர வேறு எது அவரை காந்தாரத்திற்கு செலுத்தியிருக்க இயலும்? இப்பெரும்போர் இன்று அஸ்தினபுரியை மையம் கொள்வதற்கு அவரும், சத்தியவதியுமே காரணம் இல்லையா?!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்