Wednesday, December 20, 2017

தாய்மை



தாய்மையின் சிறப்பைப்  போற்றாத காவியங்கள் இல்லை.  சிறு குழந்தைப்   பருவத்திலிருந்தே தாயற்றவர்கள் கூட பிறர் தன் மேல் காட்டும் அன்பை தாய்மை அன்பு என்று கூறுகிறார்கள்.  அந்தத் தாய்மை தன் பிள்ளைகளுக்காக அனைத்து தியாகங்களும் செய்யக்கூடியது.  தான் இது வரை மேலானது என்றும் தன் வாழ்வின் இலக்கு என்று கொண்டதையெல்லாம் தன் பிள்ளைகளுக்காக கைவிடச் செய்வதாக தாய்மை அன்பு இருக்கிறது.  கைமாறு எதையும் எதிர்பார்க்காத தூய அன்பு அது. அந்த அன்பின் ஆழத்துக்கு ஈடாக வேறு எதையும் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.  ஓரளவுக்கு தந்தையர் தன் மைந்தர் மேல் காட்டும் பாசத்தையும் நாம் தாய்மைப் பாசம் என்றே குறிப்பிடலாம்.  இருப்பினும் தாயைப்போல நேசத்தில் தன்னை முற்றாக தந்தை ஒப்புக்கொடுப்பதில்லை என்றே கருதுகிறேன். 
    அதே நேரத்தில் அந்த நேசத்தின்  காரணமாகவே தாயின் அன்பு மேலும் விரிந்து பரவாமல் குறுகியும் இருக்கிறது. தன் பிள்ளையின் நலனே முக்கியம். அது முழுமையான பிறகே மற்றவர் நலனை ஒரு தாய் ஏறெடுத்துப் பார்க்கிறாள்.  சில சமயம் தன் பிள்ளைகளின் நலனுக்காக மற்றவர்களின் நலனை அவள் பாதிக்கும்படி செயல் புரிவதும் உண்டு.   இதுவரை மற்றவரிடம் காட்டிய அன்பு  தனக்கென ஒரு பிள்ளை வந்த பிறகு பெரிதளவு குறைந்துவிடுகிறது.   தாய்மை அவள் அன்பை தன் பிள்ளைகளுக்கென மட்டும் குறுக்கிவிடச் செய்வதாக எனக்கு தோன்றுகிறது.  அதற்கு அந்தத் தாயை நாம் குறை சொல்ல முடியாது. அவ்வாறு இருப்பது அவள் குருதியின் அணுக்களில் எழுதப்பட்டுள்ளது.  அனைத்து விலங்குகளிலும் அதுவே நியதியாக உள்ளது.   தாய்மை என்பது ஒருவர் தன் அறிவுகொண்டு சிந்தித்து பயின்று வருவதல்ல.   ஆகவே அப்படி தாய்மை அன்பு அவள் பிள்ளைக்ளளுக்கு மட்டுமே என்று குறுகி இருப்பது அவள் தவறல்ல.    தாய்மையின் சிறப்பைக் கொண்டாடும் நாம் அதன் குறுகலையும் புரிந்துகொள்ள வேண்டும். 
   

தேவிகை பாண்டவர்களின் ஐவர்களின் புதல்வர்களையும் தம் பிள்ளைகள்என்றே பேணுபவள்தான்.  அவர்கள் அனைவரின் நலனிலும் அக்கறை உள்ளவள்.  அப்படியே தன் உள்ளத்தை அவள் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறாள்.   அந்த மைந்தர்களை உயிராபத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக அவள்  புண்டரிகை ஆலயத்தில் நடத்தும் பூசனையில்,  குளத்தில் புனித நீராடுகையில் அவள் அனைத்தையும் மறந்து தன் மகனை மட்டுமே நினைக்கும் வெறும் தாயெனன ஆகிறாள்.  அத்தனை   பேருக்குமென வேண்டினால் அதன் பலன் அத்தனை பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகையில் தம் மைந்தனனான யௌதேயனுக்கு அப்பலன் சற்று குறைந்துவிடுமோ என்ற அவள் ஆழ்மன எண்ணமே அவளை தன் மகனுக்காக மட்டுமென வேண்டிக்கொள்ள வைக்கிறது.      
    வேண்டுதலை உளம்கொள்ளவேண்டும் என அவள் எண்ணினாலும் ”யௌதேயன்” என்னும் சொல் மட்டுமே எஞ்சியிருந்தது. மும்முறையும் யௌதேயன் என்றே மூழ்கியெழுந்தாள்.
   
பின்னர் இதுவரை அனைவரையும் தம் பிள்ளைகளென எண்ண வேண்டும் என பயிற்றுவித்த அவள் மனம் குற்ற உணர்வுகொள்கிறது. தன் வேண்டுதலை மாற்றிக்கொள்ள முயல்கிறாள்.
  

நீர்வடிந்த குழலை கைகளால் நீவி பின்னால் வழித்து முகத்தை துடைத்தபோது குற்றவுணர்வு கொண்டு முழுவேண்டுதலையும் முனைந்து உளத்தில் ஓட்டினாள். “என் மைந்தர் ஒன்பதின்மரும் நலம்கொண்டு முழுவாழ்வு வாழவேண்டும். என் கணவரும் தம்பியரும் துயரற்று வாழவேண்டும். என் கொடிவழிகள் செழிக்கவேண்டும்.”
  

இருப்பினும் அவளுள் இருக்கும் தாய்மை அவளை தம் மகனைப்பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கிறது.  
தேவிகை “யௌதேயன் யௌதேயன்” என்றே தன் உள்ளம் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். வேண்டுதல்மொழிகளை சொல்லவேண்டும் என எண்ணினாலும் அவளால் சொல்கூட்ட முடியவில்லை.


  

வெண்முரசு தாய்மையின் இயல்பை இவ்விடத்தில் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.  இதில் சரி தவறு  என்று நாம் கணிப்பதற்கு  ஏதுமில்லை.  தாய்மை என்பது ஆதி இயற்கையிலிருந்து வருவது அதற்கான அறத்தை நாம் இப்போது வரையறுக்க முடியாது.  ஆனாலும் அந்தத் தாய்மை அன்பை உலகின்  பிற உயிர்கள் மீதெல்லாம் விரித்துக்கொள்வதன் மூலம் அரிய யோக சாதனைகள் மூலமாக அரும்பாடுபட்டு அடைய வேண்டிய ஆன்ம உச்சத்தை எய்லாம் என்று தோன்றுகிறது.    புத்தன் கூறுவதும் இதைத்தான் அல்லவா?


தண்டபாணி துரைவேல்