Saturday, December 16, 2017

அகன்றறிதல் (எழுதழல் 77 )


     திருவண்ணாமலையைச் சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போதே மலையின்மேல்  அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் ஒரு பெரிய மாமரம் ஒன்று இருப்பதைப் பார்க்கலாம்.  அங்கு ஒரு சிறு குடில் இருக்கும். அதில் இரமணர் சில ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார். அவருடைய பக்தர் ஒருவர் அவ்விடத்தைச் சீர்படுத்தி அதை உருவாக்கியதால்  அவர் பெயரால் அது கந்தாசிரமம் என்று அழைக்கப்படுகிறது.   அங்கு எப்போதும் வற்றாத சிறு ஊற்று ஒன்று உள்ளது சில தென்னைமரங்கள் கூட இருக்கும். அங்கிருந்து நோக்கினால் அண்ணாமலையார் கோயில் பிரகாரங்கள்  அனைத்தும் மற்றும்  திருவண்ணாமலை நகர் முழுமையும் தெரியும்.    ஒருவன் கந்தாசிரமத்திலிருந்தே  சிறு குழந்தைப்பருவத்திலிருந்து வளர்கிறான் என்றும் அவன்  எப்போதும் மலையைவிட்டு வேறு எங்கும் செல்லாதவன் என்று கொள்வோம்.  நமக்கு அண்ணாமலையைப் பற்றி மனதில் இருக்கும் அதே  சித்திரம் அவனுக்கும் இருக்குமா?  அவனால் அண்ணாமலையை ஒரு கோட்டுப்படமாக வரைய முடியாதிருக்கும் அல்லவா?   அவனைப் பொறுத்த வரை அண்ணாமலை என்பது மேடான ஒரு பகுதி அவ்வளவுதான் அதன் உயரம் பரப்பு அமைப்பு சிகரங்கள் பற்றிய முழுமை அறிவு அவனுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த மலையை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே நாம் அடையும் வியப்பு பரவசம், அதன் உயரத்தை அறிகையில் நம் அகங்காரம் அடையும் சிறுமை ஆகியன அவனுக்கு கிட்டாமலேயே போய்விடலாம்.  ஆம் அண்ணாமலையின் பெருமையை அறிய அவன் அதைவிட்டு அகன்று சற்று தூரம் சென்றால்மட்டுமே அறிய முடியும்.    அதே நேரத்தில் வெளியூரிலிருந்து வந்து  திருவண்ணாமலையை  நோக்கும் ஒருவன் முதலில் காண்பது அந்த மலையின் வடிவை, பரப்பை, உயர்வை சிறப்பை  அதன்  பிறகு அவன் அந்த மலையில் ஏறி கந்தாசிரமம் சென்றாலும் அதன் பெருஞ்சிறப்பு அவன் மனதில் இருந்து மறைந்துபோவதில்லை.

   கிருஷ்ணர் போன்ற சிறப்பில், ஞானத்தில், திறனில், குணங்களில் உயர்ந்தோங்கிய ஒருவரை  வெளியில் இருந்து அவனை வந்தடைந்த அர்ச்சுனன், மற்ற பாண்டவர்கள்,  சாத்யகி, அபிமன்யு மற்றும் உபபாண்டவர்கள் போன்றவர்கள அறிந்த அளவுக்கு அவனுக்குப் பிறந்த பிள்ளைகளால் உணர  முடியாது போவதை    இவ்வாறு நாம் புரிந்து கொள்ளலாம்.  கிருஷ்ணரின் தத்துவம், கொள்கைகள், நோக்கங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வதைப்போல் கிருஷ்ணரின் பிள்ளைகள் ஏற்றுக்கொள்வதில்லை.  பிரத்யும்னன்  சதானிகனிடம் தான் எவ்வாறு கிருஷ்ணரிடம் இருந்து  முரண்படுகிறேன் என்று கூறுகிறான். 

   அவன் பேசுவது பெரும்பாலும் வாழ்வில் சிறந்து விளங்கிய ஒரு பெருவாழ்வு வாழ்ந்த மைந்தர்களின் குரல்.  அந்த பேராலமரத்தின்  நிழலாலேயே தன்னால் வளரமுடியாமல் போய்விட்டதாகக் கருதும் இயலாமையின் குரல்.  அந்த மைந்தர்கள் கூறுவது இதுதான். நீ ஏன் இன்னும் செயலாற்றிக்கொண்டிருக்கிறாய்.  போய் வெளித்  திண்ணையில் சுருண்டுகொள்.  இனி நான் பார்த்துக்கொள்கிறேன். நான் எப்போதுதான்  தானாக செயல்படுவது. இந்த ஆதங்கம் தான் பிரத்யுமனனின் வாதத்தில் அடிப்படையாக உள்ளது.  அவர் உலகியலிலிலிருந்து

அரசியலிலிருந்து ஓய்வெடுத்து வனம் புக வேண்டும் என்கிறான் . 
“நான் சொல்லவிரும்பியது இதுதான். நீங்கள் சென்றபின் என்னவானால் உங்களுக்கென்ன? உங்கள் பணி முடிந்தது என்றால் விலகிக்கொள்ளுங்கள். கனிந்தபின் கிளைவிடா கனி அழுகியுதிரும். எது எவ்வாறானால் உங்களுக்கென்ன? இவை உங்களால் நிகழ்ந்தவை என எண்ணும் அறிவின்மையை நீங்களுமா சூடிக்கொள்கிறீர்கள்? எந்த விசை யாதவரைத் தொகுத்ததோ, துவாரகையை அமைத்ததோ அது அதை கையாளட்டும். ஊழை ஆள மானுடரால் இயலாது. மாமனிதர்களோ ஆணவத்தால் ஊழை நோக்கும் பார்வையையே இழந்துவிடுகிறார்கள்.”
“கானேகுங்கள் என்று அவரிடம் சொல்ல விரும்பினேன்.


    அவன் தயக்கமின்றி இவ்வாறு வைக்கும் தர்க்கத்தில் பிழை உள்ளது.   ஊழ்,   தானே அனைத்தையும் நடத்திவருகிறது என்றே வைத்துக்கொள்வோம்.  அதை அதனிடம் விட்டுவிட்டு ஏன் கிருஷ்ணர் விலகிவிடக்கூடாது என்று சொல்வது சரியாகுமா?  ஊழ் தான் செய்யவிருப்பதை மனிதர்களின் மூலமே செய்கிறது. ஊழின் ஆயுதம் என்றே அவர்கள் செயல்படுகிறார்கள்.  அதுவே அவர்களை செயலில் ஆழ்த்துகிறது.  கிருஷ்ணர் ஆற்றவேண்டியது இது என்றும் இதுவல்ல என்றும் தீர்மாணிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  முடியுமானால் அவர் செய்வது தவறு என்று உணர்த்தி அவரை தடுக்கமுயலவேண்டும். அதை விட்டு அவரை செயலைத் துறந்து செல் என்பதில் என்ன தர்க்க நியாயம் இருக்கிறது?  ஊழை யாரும் ஆளுவதில்லை. ஊழை யாரும் மாற்றி அமைப்பதில்லை. ஏனென்றால் எது நடக்கிறதோ அதுவே ஊழ். அதனால் நடக்கவிருந்த ஒன்று  நடக்காமல் போவது என்பது ஊழ் மாற்றப்பட்டது என்று கருதக்கூடாது.  அவ்வாறு அது நிகழ்வதே ஊழ்தான்.  ஆகவே சமூகப்போக்கை ஒருவரின் செயல் மாற்றுகிறது என்றால்     அவர் ஊழை மாற்றவில்லை. அவ்வாறு அந்த சமூகபோக்கை அவர் மாற்றுவதே அந்த ஊழின் செயல்தான் என்பதை நாம் அறிய வேண்டும்.  கிருஷ்ணர் செயல்படுவது ஊழுக்கு எதிராக என்று எப்படி பிரத்யுனன் சொல்லமுடியும்?          
   அடுத்து அவன் சொல்வது பெரும்போரின் மொத்த அழிவுக்கான பழியை கிருஷ்ணரின் மேல் போடுகிறான். 


 இன்று யாதவருக்கும் பாண்டவர்களுக்கும் மட்டுமல்ல, பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும் பலகோடி மாந்தருக்கும் அவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த நற்செயல் விட்டுவிலகுவதே. அணுகி வந்துகொண்டிருக்கிறது பெரும்போர். ஆயிரங்கள் இலக்கங்கள் அழியக்கூடும். குருதிப் பெருக்கும் விழிநீர் பெருக்கும் எஞ்சக்கூடும். அதை நிகழ்த்துவது அஸ்தினபுரியின் நிலவுரிமைப் பூசல் அல்ல. அவர்களிட்ட வஞ்சினமும் அல்ல. மெய்யான ஏது இவர்தான். இவர் மட்டும் இல்லையேல் அப்பூசல் அஸ்தினபுரியின் அவைப்பேச்சிலேயே முடியும். மிஞ்சினால் அவர்களின் எல்லையில் ஒரு சிறுபோரில் தெளியும். இப்போர் நிகழ்வது இவர்பொருட்டே.”

         ஏதோ ஒரு நெறியைக் கைக்கொண்டு இருக்கும் உலகத்தின் நெறிகளை மாற்றி ஏன்  அமைக்க வேண்டும் என நினைக்கிறான்.  கிருஷ்ணர் இப்போரில் ஈடுபடுவது தேவையில்லை என்கிறான்.   கிருஷ்ணர் இப்படி அகன்று சென்றுவிட்டால் பெரும்போர் ஒன்று ஏற்படாமல் போய்விடும் என்கிறான். அதன் மூலம் பல்லாயிரம் பேர் போரில் மாய்ந்து போவதைத் தடுக்கலாம் என்கிறான்.  இப்படி பெரும் அழிவை ஏற்படுத்துவது எவ்விதத்தில் நன்மையென ஆகும் என்று வினவுகிறான். 

          போரை கிருஷ்ணன் உருவாக்கவில்லை என்பதே என் கருத்து. ஆனால் அவன் பாண்டவர்க்கு துணையென்று தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தால்  பாண்டவர்களுக்கென்று படைக்கூட்டு இப்போதிருக்கும் அளவுக்கு பெரிதாக தோன்றியிருக்காது.  கௌரவர் பாண்டவர் இடையிலான போர் அதன் காரணமாக ஏற்படாமல் போயிருக்கலாம்.  ஒருவேளை பீமன் துரியோதனனுக்கிடையிலான தனிப்போர் என்ற அளவில் முடிந்துவிட்டிருக்கலாம்.   ஆனால்  பாண்டவரின் தோழன் என்று இருக்கும் அவன் அவர்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டு  அந்த அநீதிக்கு எதிராக அவர்கள் போராடும்போது அவர்களுக்கு உதவாமல்  எப்படி அவர்களை கைவிடமுடியும்? மேலும்   பல ஆண்டுகளுக்கு முன் பாண்டவர்களின் உதவியால் தன் நாட்டை பகைவர்களிடமிருந்து மீட்டெடுத்த நன்றிக்கடனும் அவனுக்கு இருக்கிறது.  ஆகவே அவன் பாண்டவர் தரப்பில் இருப்பது இயல்பானது,  தவிர்க்கமுடியாதது.  அவன் அத்தரப்பில் இருக்கிறான் என்பதாலேயே அவனுக்கும் அவன் தத்துவத்திற்கும் எதிரானவர்கள் பாண்டவருக்கு  எதிர்த்தரப்பான கௌரவர்களிடம் சேர்வது இயல்பானதுதாகிறது.   அவ்வாறு கௌரவர்களுடன் சேர்ந்தவர்களின் எதிரிகள் பாண்டவர்களுடன் இணைகிறார்கள். இவ்வாறு இந்தப் படைக்கூட்டுகள் பெரிதாகிக்கொண்டே போவது கிருஷ்ணரை ஆதாரமாக்கொண்டுதான் என்றபோதிலும்,   இதற்கான முழுப்பொறுப்பை கிருஷ்ணரிடம் விட்டுவிட முடியுமா? 
     
    கிருஷ்ணருக்கு எதிரான இந்த பெரிய அளவிலான பகைக்கு அவரே காரணம் என்று கூறுகிறான்.
“இன்று பாரதவர்ஷமே திரிந்துள்ளது. பாற்கலத்தில் பிடியுப்பு என அதை திரித்தது இவருடைய இருப்பு. இவர்மேல் அச்சம்கொண்டவர்களே இங்குள்ள அரசர்களனைவரும். அதற்கேற்ப இவர் ஷத்ரியர்களை கைத்தூசு என ஊதி அழித்துள்ளார். பௌண்டரிக வாசுதேவரையும் சிசுபாலனையும் ஜராசந்தனையும் தந்தை கொன்றது அத்தனை தரப்பையும் அவருக்கு எதிரியாக்கியது.


அது ஏன் என்ற காரணத்தையும் அவன் கூறுகிறான். ஷத்திரியர்கள் தனக்கு இணையாக மற்ற குலத்தினர் அரசர்களாவதை எதிர்க்கின்றனர்.  நாலாம் வருணத்தினர் மேலெழுந்து வருவதை தடுப்பதற்கு காரணம் இருக்கிறது என்று பிரத்யும்னன் கூறுகிறான். 

மெய், நாலாம்குடிகள் கோல்கொண்டமைவதை அரசகுடியினர் விரும்புவதில்லை. அது அவர்களின் அறமும் கடமையும்கூட. கோல்கொண்டு எழும் எவரும் அரசனால் கொல்லப்பட வேண்டியவர்களே. இல்லையேல் நாடென்றும் அரசென்றும் ஏதுமில்லை. அதுவே ஸ்மிருதிகளின் அறிவுறுத்தல்.”

       ஆனால் கிருஷ்ணனும்ஷத்திரியர் இல்லாத குலத்திலிருந்து எழுந்து வந்தவன்தானே?  அதற்கு  பிரத்யும்னன்  அதுதான் நம்மை ஏற்றுக்கொன்டுவிட்டர்களே. அத்துடன் விட்டுவிட வேன்டியதுதானே. ஏன் மொத்த நெறியையும் மாற்றி எழுத வேண்டும் என்கிறான்.   அதை ஷத்திரியர்களின் காரணம் கூறுகிறான்.

“ஆனால் ஆற்றல்கொண்டு வென்று நின்று தன் கோலைநாட்டிய அனைவரையும் ஷத்ரியர்கள் ஏற்றுக்கொண்டு அரசனென்றே அவையமர்த்தியும் உள்ளனர். நிஷாதராகிய நளனும் அசுர அன்னையின் மைந்தராகிய ஜராசந்தரும் ஷத்ரியர்களுக்கே தலைவர்களாக ஆனார்கள். அவர்கள் அஞ்சுவது அவர்களையும் கடந்துசெல்லும் பெருங்கனவுகள் கொண்ட நாலாம்வருணத்தவரை மட்டுமே. அவ்வாறு தன்னை காட்டிக்கொண்டவர் தந்தை. துவாரகை அதன் கண்கூடான சான்று.”

“அதுவும்கூட ஷத்ரியர்களால் பொறுத்துக்கொள்ளப்பட்டது. அத்தனையையும் மீறி ஷத்ரியர்களிலேயே பலர் ஆற்றலை வழிபடுபவர்கள் என்றும் நாம் கண்டோம். அவர்களை அச்சுறுத்துவது இவர் சொல்லும் புதிய அரசியலொழுங்கு. அதன் மையமென முன்வைக்கும் புதிய வேதக்கொள்கை. வேதத்தைக் கடந்து கண்டடைந்த மெய்மை என இவர் அதை முன்வைக்கும் தயங்காப் பெருவிசை. நாளை இங்கு ஷத்ரியர்களே இல்லாமலாகிவிடக்கூடும் என்றும் குடித்தலைவர்களெல்லாம் அரசர்களென்றமையக்கூடும் என்றும் அதற்கு வேத ஒப்புதலை அளிக்க அந்தணரும் அமையக்கூடும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். இவையனைத்தும் திரண்டே பேரழிவின் விளிம்பில் நம்மை நிறுத்தியிருக்கிறது.”

     சமூகம் வளர வளர அதில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.   அந்த மாற்றங்கள் அவசியமானதாக இருக்க வேண்டும். ஆகவே சமூகத்தில் மாற்றங்களை எதிர்ப்பதற்கென்ற அமைப்பு, அதற்கான மன நிலை  எப்போதும் இருக்கும். அதை ஜெயமோகன் நிலைசக்தி என்று கூறுவார்.  அதை எதிர்த்து போராடி வெற்றி பெறும் மாற்றம் தன்னை சமூகத்தில் நிறுவிக்கொள்கிறது.   சிலசமயம் இப்படி மாற்றத்தை எதிர்க்கும் அமைப்பு மிகவும்  இறுகி தேவையான மாற்றங்களை உள்நுழைக்க விடாமல் இறுகி இருக்கும்.  அப்போது அந்த அந்தக் காலங்களில் பெருந்தலைவர்கள் தோன்றி அந்த அமைப்பை உடைத்தெறிந்து அந்த மாற்றத்தைக்கொண்டுவருவார்கள்.   அதில் சிலகாலம்  பேரழிவுகளும், சமூக குழப்பங்களும் ஏற்படலாம்.  ஆனால் அவ்வாறு  செய்வது ஒரு வயலில்  களைகளை, முதிர்ந்து அழிந்த  பழைய பயிர்களை, வேரோடு பிடுங்கி எறிந்து  புரட்டிப்போடும் ஏர் முனை செய்யும் வேலையைப்போன்றது என்று வெண்முரசு  கூறுகிறது.  இத்தகைய வேலையைச்செய்யும் எந்த ஒரு தலைவனும் ஏதோ ஒரு நெறியின் படி வாழும் சமூகத்தை குழப்பமடையச் செய்பவனாகவே தெரிவான். அதன் காரணமாக மக்கள் பலர் அறிந்தும் அறியாமலும்   பலவித இன்னல்களுக்கு உயிரிழப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது.  ஒரு நல்ல தலைவன் இவை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.  ஆனால் அவன் தான் நிகழ்த்த இருக்கும் மாற்றத்தை நிகழ்த்தாமல் விடுவதில்லை.  ஆனால் அவன் பணியை சமூக நலனுக்குக் கேடானது என்றும் காலம்காலமாக  பின்பற்றப்படும்  மரபுகளையும்  சமூகம் கைகொண்டிருக்கும் நெறிகளையும்  தகர்க்கிறான் என்றும் கூறி  அவன் பழிக்கப்படுவான்.   அதையே பிரத்யுனன் சொல்கிறான்.

“இவர் மட்டும் சற்றே அகன்றால் அத்தனை முடிச்சுகளும் அவி“எந்தையை நான் ஒரு விளையாட்டுத் தோழனாக மட்டுமே அறிந்திருக்கிறேன். அவரைப்பற்றிய கதைகள் சூழவே நான் வளர்ந்தேன். அதையெல்லாம் பிறிதொருவர் என்று எண்ண என் உள்ளம் பழகிக்கொண்டது. அதன் ஆழ்விழைவு அது. எந்தை எளியவராகும்போது எனக்குரியவராகிறார். நான் கையாளத் தக்கவராக இருக்கிறார். ஆகவே அந்தப் பேருருவை நான் விலக்கினேன். அதை வேடிக்கையாக மாற்றிக்கொண்டேன். அதனூடாக அவரை அப்புகழ் தொடாத சிறுவனாக ஆக்கிக்கொண்டேன். கூடவே அவருடைய அப்பேருருவை கேலிக்குரியதாக சமைத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டே என்னிடம் விளையாடினார்.” “உண்மை, நான் அவரை அறிந்ததே இல்லை. சபராசுரருடன் எதிர்நின்று போரிட்ட களத்திலேயே அவர் எவரென்று என் அகம் உணர்ந்தது. அன்றுவரை இருந்த நான் முற்றிலும் நொறுங்கினேன். மீண்டெழவே இயலாது அயலான் என்றானேன். பின்னர் அவரை நான் அணுகியது பாணருடன் போரிட்ட அக்களத்தில். இன்றும் அவர் எனக்கு அயலவரே.ழ்ந்துவிடும். ஒவ்வொருவரும் அச்சங்களும் ஐயங்களும் ஒழிந்து மண்ணில் அமைந்து எண்ணத் தலைப்படுவர். யோகியர் வாழவேண்டிய இடம் காடே என வகுத்தவர் மூடர்கள் அல்ல. யோகியர் குடியும் உடைமையும் கொள்வது இழுக்கு என நூல்கள் சொல்வதும் வெறுமனே அல்ல. யோகியர் கோரினால் இவ்வுலகு போதாது. அவர்கள் பெருகினால் இங்கு பிறருக்கு இடமில்லை. ஆகவே விலகுக, அகல்க. இவ்வெளிய மக்களை வாழவிடுக. இதையே அவரிடம் கோர எண்ணினேன்.”

   எடுத்துக்காட்டுக்கு இந்தியாவில் பொது மனிதர்களின் குரலுக்கு மதிப்பென்பது ஒருகாலம்வரை இல்லாதிருந்தது.  மக்களின் பொருட்டு, அரசர்கள், குலத் தலைவர்களே முடிவெடுத்து வந்தனர். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களை பிரதிப்படுத்தும் தலைவர்கள் இல்லாதிருந்தனர். கால ஓட்டத்தில் இவர்கள் சமூகப் பலன்களைப் பகிர்ந்துகொள்வதிலும்  புறக்கணிக்கப்பட்டார்கள்.  இவர்கள் தமக்கென நோக்கமென ஏதுமில்லாமல் தமக்கு மேலுள்ளவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாக இருந்தார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் மட்டும் மிகக் குறுகிய அளவில் நிறைவேற்றப்பட்டன.  அப்போது ஆங்கிலேயர் ஆட்சி வந்தது.  அவர்களின் ஆளுகை இந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கு   மட்டுமென தனியாக தீங்கு என எதையும்  பெரிதாக தந்துவிடவில்லை.  மாறாக முன்பிருந்ததை விட அவர்கள் நிலை சற்று மேம்பட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் காந்தி அவர்களை விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார். அது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது பெண்கள் உட்பட பலர் சிறைசெல்ல நேர்கிறது.  பலர் பெரும் இன்னல்களுக்கு ஆளாக சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.  சாதி மத ஏற்றத்தாழ்வுகளை கைவிடும்படி அதிலிருந்து வெளிவருமப்டி மக்களை அழைக்கிறார். பல்வேறு படிநிலைகளாக உயர்வு  தாழ்வுகளோடு கட்டமைக்கப்படிருந்த இந்திய சமூகத்தை உடைத்து அனைவரும் சமம் என்ற நிலையை கொண்டுவர முயல்கிறார்.    அப்போது  இருந்த பழமைவாதிகள் அவரை எவ்வளவு எதிர்த்திருப்பார்கள்.  அவர்கள் காந்தியை அமைதியாக இருக்கும் சமூகத்தில் கலகம் விளைவிப்பவராகக்  கருதிஇருப்பார்கள்.  ஆனால் இந்தக் கலகங்களின் மூலம் காந்தி இந்திய சமூகத்தில்  அடங்கி இருந்தருக்கு  நிமிர்ந்து நிற்பதற்கான  தன்னம்பிக்கையையும் அடக்கி ஆண்டவர்களும் மன உறுத்தல்களையும் கொடுத்தார்.  அதனால் இந்தியா என்ற ஒரு நாடும் அதற்கான மக்களாட்சிவழிமுறையும் உருவாகியது.        ஆனால் காந்தி பலரின் ஐயத்திற்கும் பகைக்கும் ஆளானாலும் அவரை புரிந்துகொண்டு அவருடன் தோள்நிற்க பலர் வந்தனர். ஆனால் அவரின் சொந்த மகன் ஒருவர் அவரின் பெருமையைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு முறிலும் எதிராகச் செயல்படுபவராக மாறிப்போனார்.  இதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் சதானிகனின் கூற்று நமக்கு உதவுகிறது.  

    சதானீகன் “மூத்தவரே, நான் தங்களை சந்திக்க வந்தது ஒன்றை அறியும்பொருட்டே. உங்கள் தந்தையின் பெருமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்று. அணுக்கம்போல் மறைக்கும் திரை பிறிதில்லை என்பதனால் அந்த ஐயத்தை அடைந்தேன்” என்றான். பிரத்யும்னன் விழிகள் சுருங்க அவனை நோக்கினான்.

“பிற உபயாதவர் அனைவருமே தந்தையை சற்றும் அறிந்தவர்களல்ல என்றுதான் நினைக்கிறேன். அவர் ஈட்டிய பேரரசு என்பது அவருடைய ஆற்றலின் முன் சிறு கூழாங்கல். ஆனால் அவர்களோ நல்லூழால் தந்தை கண்டெடுத்த புதையல் அது என எண்ணுகிறார்கள். மூத்த யாதவரோ, பேரரசர் வசுதேவரோகூட இளையவரை உணர்ந்தவர்கள் அல்ல” என்று சதானீகன் சொன்னான்.

“நானும் உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். உணர்வது எளிதும் அல்ல. ஏனென்றால் தந்தையர் தங்கள் மைந்தருக்கு முன் பிற தோற்றங்களைக் களைந்து வெறும் தந்தை மட்டுமே என நின்றிருக்க விரும்புகிறார்கள். அது அவர்களுக்கும் தங்களிலிருந்து தாங்கள் கொள்ளும் இடைவிடுதலை. ஒரு நீராட்டு. ஓர் ஊழ்கம். அதிலிருந்து அவர்களால் வெளிவரவே முடிவதில்லை. முதிரா இளமையில் மைந்தருக்குக் காட்டிய அம்முகம் அவர்களுக்கு பழகிவிடுகிறது. மைந்தருக்கும் அந்த முகம் பழகிவிடுகிறது. பிறிதொரு முகத்தை காட்டினால் மைந்தர் தந்தையை இழந்துவிடுவதாக உணர்கிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து எளிதில் மீள இயலாது. தந்தையரும் மைந்தரை இழக்கக்கூடும், அவர்களும் அதை விரும்புவதில்லை.” 


சதானிகனின் இந்தக் கூற்று பிரத்யுனனை சிந்திக்க வைக்கிறது. ஏன்  மற்றவர் அறிந்திருக்கும் தன்  தந்தையின் சிறப்பை தன்னால் அறிய இயலவில்லை என்பதை அவன் இவ்வாறு கூறுகிறான்:


“எந்தையை நான் ஒரு விளையாட்டுத் தோழனாக மட்டுமே அறிந்திருக்கிறேன். அவரைப்பற்றிய கதைகள் சூழவே நான் வளர்ந்தேன். அதையெல்லாம் பிறிதொருவர் என்று எண்ண என் உள்ளம் பழகிக்கொண்டது. அதன் ஆழ்விழைவு அது. எந்தை எளியவராகும்போது எனக்குரியவராகிறார். நான் கையாளத் தக்கவராக இருக்கிறார். ஆகவே அந்தப் பேருருவை நான் விலக்கினேன். அதை வேடிக்கையாக மாற்றிக்கொண்டேன். அதனூடாக அவரை அப்புகழ் தொடாத சிறுவனாக ஆக்கிக்கொண்டேன். கூடவே அவருடைய அப்பேருருவை கேலிக்குரியதாக சமைத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டே என்னிடம் விளையாடினார்.” “உண்மை, நான் அவரை அறிந்ததே இல்லை. சபராசுரருடன் எதிர்நின்று போரிட்ட களத்திலேயே அவர் எவரென்று என் அகம் உணர்ந்தது. அன்றுவரை இருந்த நான் முற்றிலும் நொறுங்கினேன். மீண்டெழவே இயலாது அயலான் என்றானேன். பின்னர் அவரை நான் அணுகியது பாணருடன் போரிட்ட அக்களத்தில். இன்றும் அவர் எனக்கு அயலவரே.பின்னர் அவன் கிருஷ்ணரில்  பிறர் காணும் பேருருவை அறிய தான் அவரைவிட்டு அகன்றுசென்று முயலவேண்டும் என்ற எண்ணம் கொள்கிறான்.  


தந்தையைத் துறந்து இளைய யாதவர் என்னும் யோகியை என்னால் சென்றடைய இயலுமா என்று இந்த கானேகலில் முயலவிருக்கிறேன். அகன்று அகன்று அவரை அணுகும் ஒரு பயணம் இது” என்றான் பிரத்யும்னன்.
    


  பரப்பிரம்மத்தை உணர்ந்து  அதில் நான் எனும் அகங்காரம் அழிந்து கரைந்துபோக ஞானமார்க்கமே சரியானது என்று தோன்றும். ஆனால் அது அண்ணாமலையில் இருந்தபடியே அம்மலையை முழுதறிய முயல்வதற்கு சமம்.  அதனால்தான் சற்று விலகிசென்று அப்பரப்பிரம்மத்திலிருந்து வேறாக தன்னைக் கருதி பிரம்மத்திற்கு  இறையுருவொன்று சமைத்து அதை வழிபட்டு அதன்மேல் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பக்திசெய்யும் வழிமுறையை அனைத்து மதங்களும் முதற்படியாக வைத்திருக்கின்றன.  பரப்பிரம்மத்தை அகன்று அறிந்த பின்னரே அதுவே  நானென அறியும் பெரு நிலை அடைவதற்கான ஞானப் பாதையின் வாயிலைத்  திறப்பது எளிதாகும் என்று நம் மதம் நமக்கு சொல்கிறது.
     
தண்டபாணி துரைவேல்