விலங்குகளுக்கு வேண்டுதல்கள் இல்லை. உணவு உறைவிடத்திற்கான தேடல் அவைகளிடம் இருக்கிறது என்றபோதிலும் அவை அதை வேறொருவரிடம் இரந்து நிற்பதில்லை. தமக்கானவற்றை தானே தேடிக்கொள்கின்றன. தன் முயற்சியால் மட்டுமே தனக்குத் தேவையானவற்றை அடைவதற்கு முயலும். அதற்காக மற்ற விலங்களை கொல்லும், ஏமாற்றும், அல்லது மற்ற விலங்குகளின் உடன் சென்று அவை முயன்று அடைவதில் மீதியாவதை எடுத்துக்கொள்ளும். இன்னொரு விலங்கிடம் ஒரு விலங்கு சார்ந்து வாழ்வதுண்டு ஆனால் எனக்குக் கொடு என்று இரந்து வேண்டி வாழ்வதில்லை. வளர்ப்பு விலங்குகள் இப்படி இரந்து பெறப் பழக்கப்படுத்தி வைக்கப்படிருக்கின்றனவேயல்லாமால் அது அவற்றின் இயல்பான குணமல்ல.
விலங்குகள் மிக எளிதாக நிறைவடைந்துவிடுகின்றன. ஆனால் மனிதனுக்கு எவ்வளவு பெற்றாலும் அடுத்து என்ன பெறலாம் எனத் தன் தேடலைத் தொடங்குகிறான். பெற்றவை சலிப்பை அளிக்கின்றன அடையாதவை அவனைக் கவர்ந்திழுக்கின்றது. மனிதன் எப்போதும் உணர்வது போதாமையைத்தான். நிறைவென்பது அவன் அடைய இயலாத கானல் நீரென இருக்கிறது. அவன் போதாமை என்ற அடியற்ற பெருங்கிணறை நிறைத்துக்கொள்ள ஒவ்வொருநாளும் தன் விழைவுகளைப் பெருக்கிக்கொள்கிறான். அதன் காரண்மாக தன்னால் முயன்று பெற முடியாததை
அடைவதற்காக பிறரை வேண்டுபவனனாக இருக்கிறான். உலகியல் ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியிலான என எண்ணிறந்த வேண்டுதல்கள் ஒவ்வொரு நாளும் மனிதர்களால் வைக்கப்படுகின்றன. தன்னில் ஏதேனும் ஒரு விதத்தில் உயர்ந்தவர்களை, தலைவர்கள் என இருப்பவரை, சில சமயம் தனக்கு முன்பின் தெரியாதவர்களிடம் கூட அவன் இரந்து நிற்கிறான். இது மனிதனின் தாழ்மை என நாம் எண்ணத்தோன்றும். ஆனால்
வெண்முரசு இப்படி சொல்கிறது:
வெண்முரசு இப்படி சொல்கிறது:
“வேண்டுதலே மானுடனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. வேண்டுதலினூடாக மானுடம் வளர்ந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.
ஆம் மனிதனின் தனிப்பட்ட குணம் தன்னால் தன் முயற்சியால் பெற இயலாததை அவன் அப்படியே விட்டு விடுவதில்லை. அதை எப்படியாவது பெற்றுவிட முயல்கிறான். அது தன்னால் சாத்தியமாகாது எனத் தெரிந்திருந்தபோதிலும். எப்படியாவது பெறவேண்டும் என்ற விழைவை அவன் விட்டுவிடுவதில்லை. ஒரு குழந்தை உயரத்தில் இருக்கும் ஒரு விளையாட்டுப்பொருளை தன்னால் எடுக்க முடியாது என்ற தெரிந்தவுடன் அருகில் இருக்கும் பெரியவர்களிடம் எடுத்துதரும்படி வேண்டுகிறது கெஞ்சுகிறது. அழுது அடம் பிடிக்கிறது. தரையில் விழுந்து புரண்டு பிடிவாதம் பிடிக்கிறது. தான் அடைய வேண்டியதை அடைகிறது. உலகில் மனிதன் பெற்றிருப்பது அனைத்தும் அவன் தன்னால் பெற முடியாததை, வேண்டி அழுது அடம்பிடித்துப் பெற்றுக்கொண்டவைதான்.
ஆம் மனிதனின் தனிப்பட்ட குணம் தன்னால் தன் முயற்சியால் பெற இயலாததை அவன் அப்படியே விட்டு விடுவதில்லை. அதை எப்படியாவது பெற்றுவிட முயல்கிறான். அது தன்னால் சாத்தியமாகாது எனத் தெரிந்திருந்தபோதிலும். எப்படியாவது பெறவேண்டும் என்ற விழைவை அவன் விட்டுவிடுவதில்லை. ஒரு குழந்தை உயரத்தில் இருக்கும் ஒரு விளையாட்டுப்பொருளை தன்னால் எடுக்க முடியாது என்ற தெரிந்தவுடன் அருகில் இருக்கும் பெரியவர்களிடம் எடுத்துதரும்படி வேண்டுகிறது கெஞ்சுகிறது. அழுது அடம் பிடிக்கிறது. தரையில் விழுந்து புரண்டு பிடிவாதம் பிடிக்கிறது. தான் அடைய வேண்டியதை அடைகிறது. உலகில் மனிதன் பெற்றிருப்பது அனைத்தும் அவன் தன்னால் பெற முடியாததை, வேண்டி அழுது அடம்பிடித்துப் பெற்றுக்கொண்டவைதான்.
தன் தேவையை அடைய மற்ற மனிதர்கள் யாரும் உதவாதபோது அவன் . தனக்கு முன்னாள் பேருருக்கொண்டு எழுந்திருக்கும் இயற்கையிடம், மூதாதையர்களால் சிறிது சிறிதாக சேர்த்து வளர்த்துவைத்திருக்கும் அறிவுத் தொகையிடம், அவன் செல்லும் வழியைச் செதுக்கிச்செல்லும் நிகழ்தகவென உருக்கொண்டு வழிநடத்தும் விதியிடம், இவை அனைத்தையும் ஒன்றென ஆகி நிற்கும் இறைவனிடம், மண்டியிட்டு வேண்டிக்கொள்கிறான். அவன் பெறும் துயரங்கள், முடிவற்று எழும் விழைவுகள், தான் உண்மையில் அடையப்பெற்றிருக்கும் தீர்க்க இயலாதனிமையினை உணரும் தருணங்கள் ஆகியவை அவன் வேண்டுதலுக்கான காரணங்களை அவனுக்குள் உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன.
மனிதன் வேண்டி வேண்டி பெற்றவைகளின் மூலம் அவன் நிறைவடையப்போவதில்லை என்பதை எப்போதும் உணர்கிறான். பெற்றவைகளின் அர்த்தமின்மையை அவனை சலிப்படையவைக்கிறது. அவன் தேடிப்பெற்ற பொருட்கள் எதுவும் அவனுடனேயே இருப்பதில்லை. உண்மையில் அவன் வேண்டியது அவற்றையல்ல என்பதை அவன் உணர்கையில் வெறுமையை உணர்கிறான். அப்போது, தான் உண்மையில் எதைத்தான் தான் அடைய விரும்புகிறோம் என சிந்திக்கிறான்.
எவ்வளவு தேடிப்பெற்றாலும் அவன் வேண்டுதல்களுக்கான முடிவு இல்லாது போகிறது.
அதே நேரத்தில் அடுத்து அடுத்து கொள்ளும் வேண்டுதல்களே வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன. ஒருவகையில் பார்த்தால் மனிதனுக்கு வேண்டுதலே வாழ்வென இருக்கிறது. ஒருவேளை வாழ்வென நாம் இங்கிருப்பதே ஒரு வேண்டுதல்தானோ? பிறந்து இறந்து போகும் உயிர்கள் வாழ்வுக்கு பொருளென என்ன இருக்கிறது ? அவற்றின் வாழ்வே ஒரு வேண்டுதலை நோக்கமெனக் கொண்ட தவமோ? நிலத்தில் ஒற்றை காலூன்றி பெருங்கிளைகளை கைகளென விரித்து தன் வாழ்வையே இடைவிடாத வேண்டுதல் என கொண்டிருக்கும் ஒரு மரத்தின் நோக்கம்தான் என்ன? அவை வேண்டுவது நம் சொற்களில் விரித்துரைக்கக்கூடியதாகத் தெரியவில்லை. ஏனென்றால அனைத்து சொற்களும் குறைகொண்டுள்ளன.
ஒவ்வொரு சொல்லும் பல்லாயிரம் தலைமுறை துயர்களால் விழைவுகளால் தனிமையால் களிம்பு கொண்டிருக்கிறது. இளவரசே, வேதச்சொல்கூட மானுடக்களிம்பு கொண்டதே. சொல்லற்ற வேண்டுதல் ஒன்றால் மட்டுமே நம்மால் அத்தனை அருகில் செல்லமுடியும்.”
“அதை நீங்கள் உணர்ந்தால் இங்குள்ள ஒவ்வொரு உயிரும் தங்கள் இருப்பால் வேண்டிக்கொண்டிருப்பதை காண்பீர்கள். காலையொளியில் மரச்சில்லையில் அமர்ந்திருக்கும் குருவி, புல்நுனியில் ஆடும் விட்டில், முள்முனையில் திரண்டு வரும் பனித்துளி அனைத்தும் ஒற்றைப்பெரும் வேண்டுதல் ஒன்றை தாங்களும் கொண்டுள்ளன. அவ்வேண்டுதலின் ஒருபகுதியென ஆவதே நாம் இயற்றவேண்டிய தவம். நமக்கென குடிக்கென குலத்திற்கென வேண்டுவது இழிவு. மானுடத்திற்கென அறத்திற்கென வேண்டிக்கொள்வதும் இழிவே. வேண்டுதல் எதற்காகவும் நிகழலாகாது. அது ஒரு நிலையென நம்மில் கைகூடிவிடவேண்டும்” என்றார் கார்க்கியாயனர்.
நம் வாழ்வையே வேண்டுதல் என, ஒரு தவமென நாம் அறிய வேண்டும். அப்போது நம் வேண்டுதலில் சொற்களில்லாது போய்விடும் ஏனென்றால சொற்களின் பொருளுக்கு எல்லையுண்டு. எல்லையிருப்பவை எதுவும் நிறைவளிப்பதில்லை. நிறைவளிக்காத ஒன்றை வேண்டி அதைப் ஏற்பதில் என்ன பயன்?
நாம் அடைய இருப்பது நமக்கு நிறைவளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். அதை எந்த சொல்போட்டும் விளக்கமுடியாது. ஆகவே நாம் வேண்டுகையில் மனதில் தோன்றும் ஒவ்வொரு சொல்லையும் விலக்கிக்கொண்டே செல்கையில் நாம் அடைவது மகா வெறுமை. அதுவே மகா முழுமை. அதை அடைவதற்கான தவமே இவ்வாழ்வு என அறிபவன் ஞானி. அதை அடைபவனே முக்தன்.
“அரிதுதான். ஆனால் அதைப்பயில்வது எளிது. வேண்டிக்கொள்க! ஒவ்வொரு முறை வேண்டுகையிலும் உங்களில் எழும் சொற்களை உள்ளிருந்து விலக்குக! அச்சொற்கள் ஏந்திய விழைவும் துயரும் உடன்விலகுவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம்.”
தண்டபாணி துரைவேல்