Tuesday, December 5, 2017

அழையா விருந்தினன்.(எழுதழல் - 67)      
ஒரு  விழாவை முன்னின்று நாம் நடத்துகையில் நாம் அழைக்காமல் விட்ட ஒருவர் வந்தால் எத்தகைய மனச் சங்கடத்திற்கு ஆளாவோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.   இது விழா என்பதில்தான் இல்லை.  ஒரு முக்கிய கலந்தாலோசனைஒரு பெரிய சமூகப் பணிஅரிய பலன் கருதி எடுக்கப்படும்  முயற்சி போன்ற முன்னெடுப்புக்களில் இப்படி யாராவது ஒருவர் நாம் அழையாமல் வந்து நின்றால் சிலசமயம் நமக்கு பெரும் உதவியாக அமையலாம்  என்றாலும் பெரும்பாலும் அவர்கள் வருகையின் காரணமாக  நாம் செய்வதறியாது திகைக்க  நேரிடுகிறது.  அழையாமல் வந்து நிற்கும் விருந்தினன் எதிரே நாம் தோற்றவரென தலை குனிந்து நிற்பவர்களாகிறோம்அவர்களைப் பொருத்துக்கொள்ளுமாறு வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லைஅவர் அந்த நிகழ்வுக்கு பொருத்தமானவராஅவரின் வருகை நம் நோக்கத்திற்கு உதவக்கூடியதாமாறாக அவர் செய்வது நமக்கு எதிராக அமைந்துவிடுமா அல்லது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்திவிடுமா என்று தெரியாது போகலாம்நாம் முயலும் அச்செயல் அவர் விழைவுக்கு  எதிரானதாக இருந்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும்


       
சாம்பனின்  மணவிழாவில் கிருஷ்ணரின் வருகை இத்தகைய திகைப்பை  அஸ்தினாபுர அவையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.  மணமகனின் தந்தை இல்லாமல் அத்திருமணம் நடைபெறுதலே அவர்களுக்கு சங்கடத்தைத் தரவேண்டிய ஒன்றுஆனால் போருக்கென எதிரெதிர்  கூட்டணியில் இருப்பதால் கிருஷ்ணன் வருகையை எதிர்பாராததில் வியப்பொன்றும் இல்லைசாம்பனே தன் தந்தையின் நோக்கத்திற்கு எதிராக பலராமருடன் சேர்ந்துகொண்டவன்தான்.  இத் திருமணம் ஒரு போர்க்கூட்டணியை உறுதி செய்வதாக அமைய இருப்பதுஅது கிருஷ்ணன் இருக்கும் தரப்புக்கு எதிரான போர்மேலும் கிருஷ்ணன் இருக்குமிடத்தை அவன் ஆளுகையின்கீழ்  வரவைத்துவிடுபவன்.  அங்கு அவன் நோக்கம் மட்டுமே நிறைவேறும்.  அப்படி இருக்கையில் அவனை அவர்கள் அழைக்காமல் விடுவது நன்று என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.  ஆனால் அவன் வந்து நின்றுவிட்டான்.    அழையா விருந்தினனாக அவன் வந்திருப்பது அவையினருக்கு  எத்தகைய சங்கடத்தைத் தந்திருக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

    நிமித்திகர் கைகளை அசைத்து கனகரிடம் ஏதோ கேட்க கனகர் “சற்று பொறுங்கள்” என்று சொன்னபின் வெளியே ஓடியதை பிரதிவிந்தியன் கண்டான்கூர்ந்து நோக்குவதனாலேயே மிக அண்மையிலென அவை நிகழ்ந்தன. “எவரோ வந்திருக்கிறார்கள்” என்று சுருதசேனன் சொன்னான்சௌனகரின் விழிகள் வந்து தொட்டுச் சென்றன. “சௌனகர் உணர்ந்துவிட்டார்யார் வந்திருப்பதென்று” என்றான் பிரதிவிந்தியன். “நானும் உணர்ந்துவிட்டேன்மூத்தவரே” என்றான் சுருதசேனன்திகைப்புடன் திரும்பி “யார்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான்சுருதசேனன் புன்னகைத்து “சற்று பொறுங்கள்” என்றான்.  சிலகணங்களுக்குப்பின் தொலைவில் முரசுகள் முழங்கத் தொடங்கினஅதன் தாளத்தை கேட்டதுமே “அவரா?” என்று பிரதிவிந்தியன் கேட்க “ஆம்” என்று சுருதசேனன் புன்னகைத்தான்தாளம் மேலும் எழுந்ததுமே அவை முழுக்க வருபவர் எவர் என்பதை உணர்ந்துகொண்டதுதிகைப்பும் ஆழ்ந்த அமைதியும் உருவாகி அவையெங்கும் படர்ந்தது.

     
 இப்படி ஒரு அழையா விருந்தினன் நம் மனதிற்குள்ளும் வருவதுண்டு.   நம் உள்ளம் என்பது  பல்வேறு கருத்துக்கள் ஒட்டியும் வெட்டியும் வாதிட்டுக்கொண்டிருக்கும் இடம்.  ஒரு முடிவெடுப்பதற்குமுன் அவன் மனதில் பல்வேறு தரப்புகள் விவாதிக்கப்படும்.   நம் எதிர்கால நன்மைகளை சிந்திக்கும் தரப்புகள்நம் புகழை வளர்ப்பதற்கான தரப்புகள்நம் செல்வத்தை பெருக்குவதற்கான மற்றும் அதை குறையாமல் காப்பதற்கான தரப்புகள்நம் நெருங்கிய உறவுகளுக்கான தரப்புகள்நாம் வஞ்சம் கொண்டவர்களுக்கு எதிரான தரப்புகள்நம் விழைவுகளுகளை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் தரப்புகள்,   நம் குற்றங்களை மறைத்துக்கொள்ள முயலும் தரப்புக்கள்நமக்கென கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு ஆதரவான தரப்புகள்,  நமக்கு எழும் ஐயங்கள் அச்சங்கள் ஆகியவற்றின் தரப்புகள் என ஆயிரம் தரப்புகள் பங்குகொண்டு விவாதித்துக்கொண்டிருக்கும் அவையரங்காக  நம் மனம் இருக்கிறது.    நாம்  ஒவ்வொரு தரப்பையும் தவறவிடாமல் நம் மனதில் வருவித்துக்கொள்கிறோம்அவற்றின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டபின்னரே  நாம்  ஒரு முடிவெடுக்கிறோம்இவற்றில் ஒரு தரப்பின் கருத்தை கேட்காமல் தவறவிடப்பட்டால்கூட நாம்  எடுக்கப்போகும்  முடிவு தவறாகிவிடும் என நினைக்கிறோம்.
    
இத்தனை தரப்புகளை விவாதித்துக்கொண்டிருக்கும் அவைக்கு   ஒரு அழையா விருந்தினனாக ஒரு தேவன் வருகிறான்.  அவன் அறத்தேவன்.  அனைத்து தரப்பும் அப்போது ஒரு கணம் திகைத்து நிற்கின்றன.  பின்னர் அவனைப்  பொருட்படுத்தாமல் தன் விவாதத்தை அவை தொடர்கின்றன.   அந்தக் கூச்சலில் அவன்  குரல் மிக மெலிதாக ஒலிக்கிறது.  அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் போவது எப்போதும் நடக்கிறது.    ஆனால் உலகில் நடக்கும் அனைத்து  நன்மைகளும் யாரோ ஒரு சிலரின் மனதில் அந்த அறத்தின் குரல் தன் தரப்பை நிறுவி அதை ஏற்றுக்கொள்ளச் செய்ததின் மூலமே நடைபெற்று வருகின்றன.  நாம் அந்த அறத் தேவனின் வருகையை அறிபவராக இருப்போமாகஅவனுக்கு நம் சிந்தையெனும் கூடத்தின் அரியாசனத்தை தருவோமாக.  அவனின் மெல்லிய குழலிசையென ஒலிக்கும்  குரலை  மற்ற தரப்புகளின் குரல்கள் மூழ்கடித்துவிடாமல் செவி கூர்ந்து கேட்போமாக.     நம் மனம் என்ற அவையில் அவன் அழையா விருந்தினனாக இருக்கலாம்ஆனால் இனி அவனை நம்   முதன்மை விருந்தினனாக இருத்துவோமாக.  அவன் சொல்லுக்கு மாறான ஒன்றாக நாம் எடுக்கும் முடிவு இல்லாதிருக்கட்டும்.  வெண்முரசு போன்ற இலக்கியங்களைப் படிப்பது எல்லாம்  அந்த அறத்தேவனின் குரல் நம்முள் ஓங்கி ஒலிக்கவைப்பதின் பொருட்டல்லவா?


தண்டபாணி துரைவேல்