இனிய ஜெயம்
பீஷ்மர் நீலன் சந்திப்பை இரண்டாம் முறை வாசித்துக்கொண்டு இருக்கிறேன் ,
நான் ,மிருகங்கள் ,பிற உயிரிகள் செடி கொடிகள் , அசேதன பொருட்கள் ,இங்கு செயல்படும் ஆற்றல்கள் விசைகள் எல்லாம் காரணமற்ற பெருவிழைவு பல்வேறு திசைகளில் தனது நிறைவு நோக்கிய ஓட்டத்துக்கு கொள்ளும் பல்வேறு வடிவங்களே . என்கிறார் ஷோபனவர் . நீர் நோக்கிய விழைவே செடியில் ஆணிவேர் என்றாகிறது . கொன்று கிழித்து உண்ணும் விழைவே புலியில் கூர் நகமும் பற்களும் என்றாகிறது . அந்த பெரு விழைவின் கரங்களில் இவை தனது செயல் என்றறியா ,செயல்முறைக்குள் இயங்குகின்றன . மானுடத் துயர் என்பது இதிலிருந்து பிரிந்து நிற்பதால் நிகழ்கிறது . இந்தப் பிரிவு விழைவின் மற்றொரு வெளிப்பாடான இயற்கைத் தேர்வு ,தகவமைத்தல் , புலன் ருசி இவற்றால் பொதியப்பட்ட தன்னுணர்வால் உருவாகிறது . என்கிறார் ஷோபனவர் .
//
லமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.
அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றன. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றன. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றன.//
// அவள் அவரிடம் தன் முதல் வினாவை கேட்டாள். “உயிர்களின் உடல்வடிவை அமைப்பது எது?” ஜனகர் “அவற்றின் உணவு” என்றார். “அவற்றின் உள்ளமைந்த விழைவு அல்லவா?” என்று அவள் கேட்டாள். “விழைவு அவற்றின் உள்ளத்தை அமைக்கிறது. உள்ளம் உடலின் வடிவைச் சூடுவதேயில்லை” என்றார் ஜனகர்.//
பீஷ்மர் கேட்கும் கதைகளில் வரும் சொற்கள் இவை . வேத புராண இதிகாசங்கள் தன்னுள் கொண்டிருக்கும் தேடல் களங்களை நோக்கி ஷோபனவர் பௌத்த தத்துவ துணை கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார் .
விழைவே துன்பத்தின் காரணம் .விழைவு பின்னி விரித்திர்க்கும் இந்த வலையின் பிடியில் இருந்து விடுபடுவதே நிர்வாணம் . ஷோபனவரும் புத்தரும் வந்து நிற்கும் மையம் .
கடலூர் சீனு