Sunday, April 8, 2018

துறவு




முதுமையில் துறவு சாத்தியமல்ல என்று கண்ணன் சொல்கிறான். முதியோர் எதையும் இழப்பதில்லை. பயனற்ற சிறுபொருட்களைக்கூட. எனில் உடலை, உயிரை, வாழ்வை எங்ஙனம் இழக்கவியலும்? இறுதிச்சொட்டு மூச்சுக்காக ஏங்கிப்போரிட்டு உயிர்துறப்பதே உயிர்களின் இயல்பான நெறி என்கிறான். என்னை உலுக்கிய வரி. இது என் பெற்றோரை ஞாபகப்படுத்தியது. என் அப்பா தொழிற்சங்கவாதி. பொதுநலமே வாழ்க்கையாக 50 ஆண்டு இருந்தவர். ஆனால் முதுமையில் பயங்கரமான லௌகீகவாதியாகவும் தன்னலம் நிறைந்தவராகவும் ஆனார். எல்லாவற்றிலும் தலையிட்டார். எல்லாவற்றையும் அறிந்துகொள்ல விரும்பினார். பயங்கரமான கஞ்சன். அவரிடம் காசு இருந்தது. ஆனால் அவருடைய ஆஸ்பத்திரிச் செலவை மகன்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். செத்துப்போனபின்னர்தான் சின்ன அளவில் வட்டிக்குக்கூட விட்டிருந்தார் என்பது தெரிந்தது. மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இப்போது புரிகிறது. அந்த வயதில் சுயநலமும் உலகவெறியும்தான் இந்தப்பூமியில் பற்றிப்பிடித்துவாழச்செய்தன அவரை.

செல்வராஜ் குமாரசாமி