Saturday, May 2, 2015

கனிந்த மொழி



ஜெ,

நீலம் இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசின் மொழியையும் நீலத்தின் மொழியையும் வெவ்வேறாக நினைத்தேன். ஆனால் திடீரென்று தோன்றியது இதெல்லாமே ஒரே மொழிதான் என்று. ஒரு மரத்தின் அதே ருசி கனியிலே இனிமையாக ஆகியிருபதை மாதிரி என்று நினைத்தேன். வெண்முரசு முழுக்க ஒரு உச்சத்துக்குப்போகும்போது ஒரு மொழி வருகிறது. அந்த மொழியை மட்டுமே கையாண்டு எழுதிய நாவல் என்று நீலத்தைச் சொல்லமுடியும்

எல்லா வரியுமே கவிதையாக அமைந்த ஒரு நாவல் நீலம். அதிலே உள்ள பல இடங்களை கண்ணீருடன் தான் வாசித்தேன். எல்லா பிள்ளைகளும் வந்து அமையும் அதே சொல்லில்தான் நீயும் வந்து அமைந்தாய என்ற வரியை நான் வாழ்க்கைமுழுக்க மறக்கமாட்டேன். கிருஷ்ணனின் படத்தை பார்க்கும்போதெல்லாம் இனி அந்த வரியைத்தான் நினைக்கப்போகிறேன்.

நீலம் நீங்கள் எழுதிய படைப்புகளிலேயே உச்சமானது என்று நினைக்கிறேன். அதிலே உள்ள இந்தியாவின் கலைகளை  ஒட்டிய நுட்பத்தை எல்லாம் கலைகளைப்பற்றித்தெரிந்தவர்கள் வந்துதான் விளக்கிப்புரிந்துகொள்ளவேண்டும். நான் நீலத்தை வாசித்து ரசித்ததற்கு ஒருகாரணம் என்னவென்றால் எனக்கு நடனம் தெரியும் என்பதுதான்

ஆர் .நீலா