Saturday, May 2, 2015

மகாபாரதம் தொன்மங்களின் வழி
அன்புள்ள ஜெ,

வெண்முரசு சார்ந்து இரு கேள்விகள்.

1. வெண்முரசின் காலம் பற்றி நாம் விவாதித்த போது அதன் காலம் கிட்டத்தட்ட கிமு 2000 என்று சொல்லியிருந்தீர்கள். வெண்முரசு இந்திய ஞானமரபை அதன் தத்துவங்களை  மரபு படிமங்களை தற்காலத்துக்கு கொண்டு வருவதற்கான ஒரு படைப்பு என்றும் பல இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள். அப்போது வெண்முரசு நடக்கும் காலகட்டத்திற்கு பிறகு இந்திய ஞான மரபில் பல பிரம்மான்டமான முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பௌத்தம் முதல் அத்வைதம் வரை. அப்படியான பிற்கால ஞானங்களை வெண்முரசு எப்படி சொல்ல போகிறது? வண்ணக்கடலில் வந்த இந்திய தரிசனங்களில் கூட பிற்கால தத்துவங்கள் வரவில்லை என நினைக்கிறேன்.

ஒருவேளை படிமங்களை கொண்டு அதை சொல்லி விட வாய்ப்பிருக்கலாம். ஏற்கனவே ஓரிடத்தில் யூங்கின் anima/animus போன்ற கருத்து படிமத்தின் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது. நீலம் யோகத்தை பற்றி விரிவாக பேசுகிறது. கீதையே பிற்காலத்தில் தோன்றியது தான் என்கிறீர்கள். இருந்தும் அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னரே மகாபாரதத்துடன் கலந்துவிட்டிருக்கிறது. அதை போல் மற்ற பிற்கால சிந்தனைகளும் வெண்முரசில் சேர்க்கப்படுமா?


2. மரபு படிமங்களை, குறியீடுகளை தற்காலத்தாலான ஒரு படைப்பில் மறு உருவாக்கம் செய்ய முடியாதா? அவைகளை புராணங்கள் அல்லது வரலாற்று கதைகளின் மூலம் தான் புதுப்பிக்க முடியுமா? ஜோஸப் கேம்பலின் ஒரு பேட்டியில் அவர் மதங்களின் குறீயீடுகளை(myths) காலத்திற்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்கிறார். பழைய குறீயீடுகள், உவமைகள் வழியாக கூறப்படும் உன்மைகளை புதிய குறீயீடுகளை கொண்டு சொல்ல வேண்டும்

என்கிறார். அப்படி ஒரு முயற்சியாக அவர் ஸ்டார் வார்ஸை சொல்கிறார். அந்த கருத்து மரபு படிமங்களுக்கும் சேராதா?

நன்றி,
ஹரீஷ்
அன்புள்ள ஹரீஷ்,

இந்தியாவின் தொன்மையான சிந்தனை முறை எதுவானாலும் நமக்குக் கிடைக்கும் முதல்நூல்கள் அனைத்துமே அதுவரை பேசப்பட்டவறை குருகுல மனன முறைக்காக காரிகை, சூத்திரம் ஆகிய செய்யுள் வடிவங்களில் தொகுத்து அளிப்பவைதான். அவையும் பெரும்பாலும் உபநிஷத காலகட்டத்தைச்சேர்ந்தவை. அதாவது ஏறத்தாழ மகாபாரதத்திற்குச் சமானமான காலத்தைச் சேர்ந்தவை. ஆகவே அச்சிந்தனைகள் மகாபாரதத்திற்கும் நெடுங்காலம் முன்னரே இருந்துவந்தவை என்று எளிதில் ஊகிக்கலாம்.

மேலும் மகாபாரதம் காட்டும் அன்றைய அறிவுலகம் மிகமிக படைப்பூக்கத்துடன் உள்ளது. புதியசிந்தனைகள் பொங்கிஎழுந்த ஒரு காலம் அது. ஆகவே அச்சிந்தனைகளை வெண்முரசின் உள்ளே கொண்டுவரலாம். தீர்த்தங்காரர்களில் நேமிநாதர் மகாபாரதகாலகட்டத்தவர். அவருக்கு முன்னால் உள்ளவர்களையும் அவரையும் கொண்டுவரலாம். பௌத்த சிந்தனைகளை சரித்திரபூர்வமாக உள்ளே கொண்டு வரமுடியாது


ஆனால் புனைவின் உத்தியைக்கொண்டு கொண்டுவரமுடியும். உதாரணமாக இளநாகன் மகாபாரதம் நிகழ்ந்து பல ஆண்டுகளுக்குப்பின் மகாபாரதம் நோக்கிச் செல்கிறான். கதையின் நிகழ்காலம் எங்கு வேண்டுமானாலும் அமையாலாமே? அங்கே எல்லா சிந்தனைகளும் வரலாமே?

மகாபாரதத்தில் உள்ள தொன்மங்களை மிக விரிவாகவே வெண்முரசு மறு ஆக்கம் செய்திருக்கிறது. புத்தம் புதிய தொன்மங்களே இதுவரை நூறுக்குமேல் வந்துள்ளன. தொன்மங்களின் அமைப்பையும் அழகியலையும் நீட்சி செய்து உருவாக்கப்பட்டவை அவை. இந்தியத்தொன்மங்களுக்குச் சமானமான பிற தொன்மங்களும் இதில் கையாளப்பட்டுள்ளன

தொன்மங்களை எப்படிப் பார்ப்பது என்பது நம் மரபில் முன்னுதாரணம் உடைய இரண்டு கோணங்களைக் கொண்டது. தொன்மங்கள் ஊழ்கத்திற்கும் வழிபாட்டுக்கும் உரியவையாகக் கருதப்படுமென்றால் அவை நிலைத்த தன்மை கொண்டிருக்கவேண்டும். அவற்றில் மாறுதல்கள் இருக்கக்கூடாது. மகாபாரதத்தை வழிபாட்டுநூலாக கருதுபவர்கள் அவர்களின் குருமரபுகளில் எது அறுதியான வடிவம் என கருதப்படுகிறதோ அதை அப்படியே கொள்ளவேண்டும். அதுவே முறையானது

தொன்மங்கள் ஞானத்திற்கான கருவிகள் என்று கருதுபவர்கள் அவற்றைக்கொண்டு மெய்மையை உய்த்துணர முற்படவேண்டும். அது தொன்மங்களை மறு ஆக்கம் செய்தும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் தான் இயல்வது. நம் அத்தனை புராணங்களிலும் தொன்மங்கள் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதை காணலாம்

ஏதேனும் ஒரு புராணக் கதையை எடுத்துக்கொண்டு அதை மட்டும் பின்தொடர்ந்து பார்த்தோமென்றால் அது ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்துகொண்டிருப்பதை காணலாம். இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதே முக்கியம், அதனூடாக எந்த மெய்மை உணர்த்தப்படுகிறது என்பது’

மகாபாரதத்தை ஞானநூல் எனக்கொள்பவர்கள் அதன் வடிவங்கள் மீளமீள மாறுவதை காணலாம். காளிதாசன் முதல் பாரதி வரையிலானவர்கள் அதை எப்படியெல்லாம் மாற்றினார்கள் என்பதை காணலாம். அந்த வரிசையிலேயே வெண்முரசு வருகிறது.

புராணங்கள் ஞானத்திற்கான கருவிகள் என்று கொண்டால் ஒரு புராணத்தில் சிவன் பிரம்மனையும் விஷ்ணுவையும் வென்றார் என்று வருவதையும் இன்னொரு புராணத்தில் விஷ்ணு சிவனையும் பிரம்மாவையும் வென்றார் என்று வருவதையும் முரண்பாடாக எண்ணமாட்டார்கள்.


இன்னும்கூட இன்றைய சூழலில் இப்படிம- தொன்ம அழகியலை முன்னெடுக்க முடியும். அந்த வழியை திறப்பதே வெண்முரசின் நோக்கம்.

ஜெ