Wednesday, June 27, 2018

நாளை வரும் நிலவுஜெ, 
நேற்றைய அத்தியாயம் பெரும் மன எழுச்சியைத் தந்தது. பூரிசிரவஸின் பகுதி ஆரம்பிக்கும் அத்தியாயத்தில், அவன் அந்த கோட்டையைப் பார்த்து எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்த சாலையின் வருகை ஒரு பழங்குடி சமூகத்தை பேரரசாக மாற்றுகிறது. அது உருவாக்கும் சமய மாற்றம், பொருளியல் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றை விட எனக்கு அந்த அத்தியாயத்தில் பெரிய கிளர்ச்சியைத் தந்தது வேறு ஒன்று. அதை நான் ‘கால தரிசனம்' என எடுத்துக் கொண்டேன். அந்த சாலையை, பேரரசை நிறுவ அவன் வாழ்வின் பெரும்பகுதியை கொடுத்திருக்கிறான். காதல்களை இழந்திருக்கிறான். பிரேமையின் குடும்பத்தை இழந்திருக்கிறான். ஒரு மனிதனின் காலத்தில் அது பெரும் பகுதியும் விலையும்.  
அப்படிக் கொடுத்து உருவாக்கும் ஒன்று, அவனுக்குள்ளிருந்து வெளிப்பட்டு காலத்தின் அகாலத்தில் தனித்து மிதக்கும் போது உருவாக்கும் திகைப்பு அதில் வெளிப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்கு அப்பாலான காலத்தில், அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும். இந்த மாற்றத்தை உணரும் தருணம், சாத்யகி மணமான தன் மகனைக் காண்பதை நினவூட்டியது. தனக்குள்ளிருந்து விளைந்த ஒன்று தனித்து தானாகுவதைக் காணும் தருணம். தன் கையால் செதுக்கிய சிற்பத்தில் தெய்வம் கண் திறப்பதை காண நேர்வதைப் போல. 
எல்லா நாகரீங்களும் நாளையைக் கணக்கில் கொண்டு வாழ்வதால், அதில் இயங்கும் மனிதர்களும் நாமும் இன்னமும் ஆயிரமாண்டு காலம் இங்கிருப்போம் என எண்ணி வாழ்கின்றனர். போர் அந்தக் கனவிலிருந்து ஒரு விழிப்பைத் தருகிறது. நீங்கள் உருவாக்கிய பொருளற்றவையும் கூட இங்கு எஞ்சியிருக்கும், நீங்கள் இருக்கப் போவதில்லை என்று. பூரிசிரவஸ் அந்த விழிப்பை அடையும் கணம்தான் துவக்க அத்தியாயத்தில் வருகிறது. இது இங்கிருக்கும், இது இங்கிருக்கும் என அரற்றுகிறது மனம். அப்பொழுதுதான் அவன் கோட்டையின் காலத்தில் நின்று அதைப் பார்க்கிறான்.
பூரிசிரவஸ் மலைகளின் மீது பயணிக்கும் இடம் காலத்தின் அந்த அகாலத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அங்கு நேற்றும், நாளையும் இல்லை. அங்கிருந்து தோன்றிய குடிதான் பால்ஹிகம். அது பேரரசாகி இருக்கிறது. விலங்குகளிடமிருந்தும், மலைகளிடமிருந்தும் மனிதனை வேறுபடுத்துவது, மனிதன் மட்டுமே காலத்தை தொகுத்துக் கொள்கிறான் என்பது. அந்த தொகுத்தல் வழியாக உருவாகும் நாளைக்காக தன் வாழ்க்கையை “தியாகம்” செய்கிறான். அப்படி பூரிசிரவஸ் உருவாக்கிக் கொண்டது அந்த கோட்டை. கோட்டை என்பது  எதிர்காலத்தின் மீதான அச்சம்தான். மலைகளின் திறந்த தன்மையில் ஒரு அறைகூவல் இருக்கிறது. பால்ஹிகருக்கும் யாமாவிற்குமான உறவில் அது வெளிப்படுகிறது. அவர்களுக்குள் முறைமைகள் இல்லை. யார் வலியவரோ அவர் மற்றவரை நிலத்தில் அறையவே முயல்கின்றனர். அது வஞ்சமுமில்லைகண நேரத்தில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றனர். கீழே இருனூறு வருடங்களாக வஞ்சங்களையும், கணக்குத் தீர்த்தல்களையும் பேசிப்பேசி வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மலைச்சமூகத்திலிருந்து கோட்டைச் சமூகமானதில் மனிதர்கள் எதை இழந்தார்களோ அதற்கான ஏக்கம் அனைவருக்குள்ளும் எப்போதும் இருக்கிறது. அதுவே அந்த அந்தக் கணத்தில் [பால்ஹிகர், அஜபாகர்] அல்லது ஏதேனும் ஒற்றைக் கணத்தில் [மாயை, அம்பை] வாழ்பவர்களை தெய்வங்களாக்குகிறது. இந்த போர்ச்சூழலில் பால்ஹிகரின் மலைத்தன்மையை காணும் போது உருவாகும் மன எழுச்சிக்குக் காரணம் அதுதான் என நினைக்கிறேன். பூரிசிரவஸ் பால்ஹிக மூதாதை நிரையில் தான் இருப்போம் என்பதை வாழ்வின் பொருளாகக் காண்கிறான். பெரியவருக்கு அது பொருட்டாகவே தெரியவில்லை. 
அதே நேரம் அந்த மலைகளின் காலத்திலிருந்து ஏன் மனிதர்களின் காலத்திற்கு நகர்ந்தார்கள் என்பதற்கு பதிலையும் பால்ஹிகரே கூறுகிறார், அங்கு "பொருளே” இல்லை, இருப்பு மட்டுமே இருக்கிறது. அதற்கு பொருள் தர மனிதர்கள் தங்களுக்கான ‘மானுடகாலத்தை’ உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் அகாலத்திலிருந்து காலத்திற்கு வந்திருக்கிறார், போதுமென்று எண்ணி. 
உலகப் போர்களுக்குப் பிறகு நாற்பது வருடங்கள் உலகே ‘இன்றில்' மட்டும் வாழ முயன்றது. பிறகு, குடிகாரர்கள் திங்கள் காலையில் வேலைக்குப் போவதைப் போல எண்பதுகளுக்குப் பிறகு கிளம்பி விட்டது. 
சில வருடங்களுக்கு முன்பு நான் தலக்காட்டுக்கு சென்ற போது அங்கு கீர்த்தி நாராயணா ஆலயத்தை மறுநிர்மாணம் செய்து கொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளரிடம் உரையாடினேன். பதினெட்டு வருடங்களாக அந்த ஆலயத்தை அகழ்ந்து எடுத்து, கற்களைப் பிரித்து, எண்ணிக்கையிட்டு மறுபடியும் அடுக்கிக் கொண்டிருக்கிறார். [சென்ற முறை நாம் போன போது பணி முழுமையடைந்திருந்தது.] இதற்கு முன்பு இன்னொரு ஆலயத்தை பதினாறு வருடங்கள் பணி புரிந்து இதையே செய்திருக்கிறார். சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார். அவர் வாழ்க்கை என்பது இரண்டு ஆலயங்களை மறு நிர்ணயம் செய்தது மட்டுமே. தானே கட்டி எழுப்பியது கூட அல்ல. இன்றைய உலகை எண்ணும் போது ஒரு சிறிய ஆலயத்துக்கு அதில் என்ன மதிப்பிருக்க முடியும்? ஒருவரின் தனி வாழ்க்கையில் முப்பத்தைந்து வருடங்கள் என்பது பெரிய காலம். ஆனால், அவர் தன் வாழ்க்கையை தந்து எழுப்பிய அந்த ஆலயங்கள் இன்னமும் ஆயிரம் வருடங்கள் அங்கு இருக்கும். அதற்கு முன்பு நம் நூறு வருடங்கள் கூட பொருட்டேயில்லை. இனி அது அங்கு வரலாற்றில் மிதந்து கொண்டிருக்கும். அதை சாமானிய வாழ்க்கையில் அறிய முடியாது. போர் போன்ற முன்கூட்டியே அறிந்த மரணம் வரும் போதே உணர முடியும். 

சிறு வயதில் கேட்ட காயல் ஷேக் முஹம்மத் அவர்களின் ஒரு பாடல் வரிகள் இன்றும் அவ்வப்போது ஒரு உலுக்கலுடன் நினைவில் வரும். “நாளைக்கும் நிலவு வரும். நாமிருக்க மாட்டோம்.” அதை நினைவு கொண்டேன். 


ஏ வி மணிகண்டன்