Saturday, June 30, 2018

போரின் வருகை




அன்புள்ள ஜெ


பால்ஹிகரின் வருகையும் அவர் உருவாக்கும் அரசியல்சிக்கல்களும் ஒரு பொதுவான சரடாகச் செல்கின்றன. ஆகவே கதையை விரைவாக வாசிக்கமுடிகிறது. என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா அத்தியாயங்களிலும் உள்ளது. இதைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கே தோன்றியது. இந்த நிகழ்ச்சிகள் இல்லை என்றால் என்ன இருந்திருக்கும்? பாண்டவர்களின் படைகளின் எண்ணிக்கை, அவர்களின் வியூகங்கள், அவர்கள் கிளம்பிச்சென்றது. இந்தப்பக்கம் கௌரவர்களின் படைகளின் எண்ணிக்கை போன்ற செய்திகள். படைவஞ்சினங்கள்கூட செய்திகளாகவே இருந்திருக்கும். 

அவற்றை நேரடியாகச் சொன்னால் ரிப்போர்ட்டிங் போலவே இருக்கும். ஏனென்றால் என்ன நிகழும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். தெரிந்த கதைக்கு ஒரு தெரியாத கோணத்தை இந்த துணைக்கதைகள் உருவாக்குகின்றன. சம்பிரதாயமான விஷயங்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான மனிதத்தன்மையை உருவாக்குகின்றன. போருக்கு முந்தைய ஏற்பாடுகள்தான் உண்மையில் சொல்லப்படுகின்றன. ஆனால் பால்கிகர் பூரிசிரவஸ் சாத்யகி திருஷ்டதுய்ம்னன் கதைகள் சொல்லப்படுவதாக ஒரு மாயத்தோற்றம் உண்டுபண்ணப்படுகிறது

ஆனந்த்