Wednesday, June 13, 2018

இளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . 
வெண்முரசு – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை – 12  - குருஷேத்திர யுத்தத்திற்கு தயாராகும் பாண்டவ படைகள் போருக்குரிய தெய்வமான கொற்றவைக்கு குருதி பலி கொடுத்து நிகழ்த்தும் அசுர வேள்வியை விரிவாக எடுத்துரைக்கிறது .அதில் உச்ச கட்டமாக நிகழ்வது திரௌபதியின் அணுக்க தோழி மாயை மெய் அவியாவது தான் .ஆம்  கௌரவ முதல்வன் துரியோதனன் நிகழ்த்திய சூதாட்ட களம் தன்னில் திரௌபதி மான பங்கம் செய்யப்பட்டபோது ,திரௌபதி  சார்பாக வஞ்சினம் உரைத்தவள் மாயை தான் .‘வெண்முரசு– நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம் – 88  -

 துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன்?  நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன்? அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள்! உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்என்றாள். 

அணியறைவாயிலில்  புலிக்குரல் என ஓசை எழுந்தது. அவிழ்த்த கூந்தல் உடலெங்கும் விழுந்திருக்க விழிநீர் நிறைந்த கண்களுடன் மாயை தோன்றினாள். “அவையோர் அறிக! இது பாஞ்சாலமண்ணை ஆளும் ஐங்குழல்கொற்றவையின் வஞ்சினம்! ஐந்து தேவியரின் அழியாச்சொல் இது.”“இன்று அவிழ்ந்தது அன்னையின் ஐங்குழல். இனி அது அவையமர்ந்த அரசன் துரியோதனனின் ஆக்கைக்குருதியும் அவன் இளையோன் துச்சாதனனின் நெஞ்சத்து நிணமும் கலந்து பூசப்பட்டபின்னரே அது சுருள்முடியப்படும். பாஞ்சாலத்து ஐந்தன்னையர் ஆலயத்து மூதன்னையர் வந்து குருதிதொட்டு எடுத்துக்கொடுக்க பின்னி அமைக்கப்படும். கௌரவ நூற்றுவரும் மண்மறைந்தபின்னரே அதில் மலர்சூட்டப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” 

திரௌபதியின் நிழலாக நின்றவள் மாயை .அத்தகைய மாயை பாண்டவர்கள் வனவாசம் செய்த நாட்களில் பிச்சி பிடித்தவள் போல ஒரே அறையில் தனது சபதம் முடியும் நாளை நோக்கி நின்றிருந்தாள் .அவளை துரியோதனன் மனைவி பானுமதி மூலமாக உபப்பிலாவ்யத்திற்கு கொண்டுவந்தது இளைய யாதவரின் முடிவாகும் .ஆம் வனவாசமும் அஞ்ஞாவாசமும் திரௌபதியை மூதன்னையாக கனிய செய்து விட்டன .அதனால் தான் போர் குறித்த வஞ்சினம் உரைக்க மாயையை மாற்றாக நினைத்தார் இளைய யாதவர் .ராமாயணத்தில் கூட சீதா பிராட்டியாரை இலங்கேஸ்வரன் ராவணனுக்கு தெரியாமல் ,ராமனிடம் சேர்ப்பிக்க மண்டோதரி எடுத்த முயற்சிகளை காணாலாம் .ஆனால் அது முடியாமல் தோல்வியில் முடிந்தது .வஞ்சினம் உரைக்க வந்த மாயை மெய் அவியானது தான் திரௌபதியை அன்னை என எழுந்து போருக்கான சபதத்தை உரைக்க செய்தது .மாயையின் நோக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க முடியும் .

இது போல வேள்வியில் மானுட பலி நிகழ்த்துவது இரு முறை வந்துள்ளது .‘வெண்முரசு – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு – 55 “நான் கற்ற முழுவேதத்தையும் ஒரு சொல் மிச்சமின்றி ஓதி அவியிடுவதே இவ்வேள்வியின் நெறி. என் உள்ளத்தில் அமைந்த சொற்கள் அனைத்தையும் எரியாக்குவேன். அதன் பின் இறுதிநாளில் நான் என்னை இத்தீயில் அவியிடுகையில் வேள்வி முடிகிறது. என்னுடன் என் வேள்விக்கொடையால் நிறைவுகொண்ட ருத்ரர்களும் விண்ணிலெழுவார்கள். என் மாணவர் வேள்விச்சாம்பலை எடுத்துக்கொண்டு மாளவத்துக்குத் திரும்புவார்கள் என்றார் சுஃப்ர கௌசிகர். “நான் கிளம்பியதுமே நோய் என்னுடன் வந்துவிட்டது. அவியாகும் பலிமிருகம் தூயதாக இருக்கவேண்டும். அதனுள் காமகுரோதமோகங்கள் நிறைந்திருக்கக்கூடாது. ஆகவே நான் இங்கு வந்தேன். ஓராண்டாக இவ்வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாளை முடியவிருக்கிறது. 

குழந்தைகளின் நோய் நீங்க சுஃப்ர கௌசிகர் மெய் அவியான கதையை விவரித்தது சொல் வளர் காடு .அதன் பின்பு    வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’– துரியோதனன் நிகழ்த்திய புருஷ மேத யாகத்தில் அவிரதன்  எனும் இளம் அந்தணன் மெய் அவியாவது விவரிக்கப்பட்டுள்ளது . ஆம் அவரின் தந்தை அதர்வண யாகம் நடத்தியதால் வந்த பாவ சுமையை ஏற்று வேள்விக்கு பலியாக முன்வரும் அவிரதன் புரிவதும் தியாகமே .

விலங்குகள் தான் வேள்வியில் அதன் இஷ்டம் இல்லாமல் பலியாவதை தான் நாம் கண்டதுண்டு . .ஆனால் தொல் மஹாபாரதத்தில் மனிதர்களே மனம் உவந்து தங்களின் மெய்யை அதாவது உடலை பலியாக விடுவதையும் அதன் மூலம் மெய் அவியென மாறுவதையும் காண முடிகிறது .இது தியாகத்தின் உச்சம் .ஆம் மற்றவர்களுக்காக விரதம் அனுஷ்டித்து (வேள்வி பலி  தூயதாக இருக்க வேண்டும் ) அதன் பொருட்டு வேள்வி தீயில் தங்களை மாய்ப்பதுவும் வேள்வி வகைகளில் ஒன்றாக அனுஷ்டிக்கப்பட்டது.கொற்றவை பூஜைகள் முடித்து போருக்கான ஆணையை பெற்றுவிட்டனர் பாண்டவர்கள் .படை நகர்வில் இருந்து விலக நினைத்த நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் மீண்டும் குருஷேத்ர யுத்தத்தில் இணைந்திட இளைய  யாதவர் நிகழ்த்திய நிகழ்வு தான் இது .
நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி .செந்தில்  ஸ்ரீவில்லிபுத்தூர்