Friday, June 29, 2018

போர் ஆயத்தங்கள்


எழுதழல், குருதிச்சாரல், செந்நாவேங்கை – இம்மூன்று நாவல்களும் பாரதம் போர் முனை நோக்கிச் செல்வதை மூன்று கோணங்களிலாக நம்முன் விரிக்கின்றன. எழுதழலில் மைந்தர்கள் பார்வையில் போர். அவர்களின் போர் அல்ல இது, இருப்பினும் அவர்கள் பங்கேற்கிறார்கள். எதிர்முகாமின் தன் வயதொத்தவர்கள் மீது பகையோ, வெறுப்போ, வஞ்சமோ அற்றவர்கள். ஆயினும் போர் செய்ய சித்தமாகிறார்கள். அவர்களுக்கு போருக்கான நியாயம் என ஒன்று நேரடியாக இல்லை. அவர்கள் ஓர் கூட்டு நியாயத்தை கையில் கொள்கிறார்கள், இளமை வேகத்துக்கே உரிய வகையில் ஒரு பொன்னொளிர் எதிர்காலத்திற்கான ஓர் லட்சியத்தை கையில் கொள்கிறார்கள். பாண்டவ புத்திரர்கள் வருங்காலத்திற்கான நெகிழ்வான வேதமுடிபை நிலைநாட்ட களம் காண்கிறார்கள் என்றால் கௌரவ ஆயிரத்தவர் உறைந்து இறுகிய, தற்கால நெறிநாட்ட களம் காணப் போகிறார்கள். நாவல் முழுவதுமே பாண்டவ புத்திரர்கள் வழிந்து ஓடி, புதுநிலம் கண்டு, தன் வழி சமைத்துப் பெருகும் நதியாக காட்டப்படுகிறார்கள். வேதமுடிபுக் கொள்கை அப்படிப்பட்டது அல்லவா, ஒவ்வொருவருக்குமான ஒன்று!!! இதற்கு நேர்மாறாக கௌரவ ஆயிரவர் ஊருக்கு வெளியே தேங்கிய ஏரி போல ஒரே இடத்தில் தளும்பி நிறைந்திருப்பதாகக் காட்டப்படுகின்றனர். உபபாண்டவர்கள் ஒவ்வொருவரும் போரை நிகழ்த்த அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். ‘அன்றுகாலை புலி வாயில் மடியவிருக்கும் மான் விரைந்தோடுகிறதுஅந்தக் கணத்தை நோக்கி’ என ஒரு அற்புதமான கவிதை வரியில் நாவல் முழுமை கொள்கிறது.

இலட்சியவேகம் கொண்ட இளைஞர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அவர்கள் அன்னையர் பார்வையில் போர் நிகழ்வுகள் விவரிக்கப்படும் நாவலே குருதிச் சாரல். இளையோருக்கு அதர்வ வேள்வியின் அவி கொண்டு எழும் தழலாகத் தெரியும் இப்போர், தம் மைந்தர் குருதியின், தமது கருக்குருதியின் சாரலாகத் தெரிவதாகத் துவங்கும் இந்நாவல் பாண்டவ மற்றும் கௌரவ அன்னையரின் பார்வையாக விரிகிறது. பாண்டவர் தரப்பு அன்னையர்கள் தம் மைந்தர் மரிக்கலாகாது என போரைத் தவிர்க்க முனைகையில், கௌரவ அன்னையர்கள் மனதின் ஓர் மூலையில் அல்லது இயல்பாகவே இப்போரை ஒரு விடுதலையாகக் காண்பதைக் காட்டுகிறது இந்நாவல். இந்த வேறுபாடு மிக முக்கியமானது. பொதுவாக நாம் அறிந்த பாரதத்தில் பெண்கள் வருவது மிகக் குறைவு. போரை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பது வரவே இல்லை எனலாம் (ஸ்திரீ பர்வத்தில் காந்தாரியின் புலம்பலைத் தவிர்த்து) மாறாக வெண்முரசு மிக விரிவாக இதை அலசுகிறது.  பெண் இழிவு என்பது அன்னையரைத் தாண்டிய ஒன்று என்பது இந்நாவலில் தெளிவாக எழுந்து வருவதை வாசகர் காணலாம். திரௌபதியை வஞ்சம் தவிர்க்க வைக்கும் தேவிகை கூட உள்ளூர அவள் வஞ்சம் துறப்பதாகச் சொல்கையில் ஏமாற்றமடைகிறாள். முதற்கனலில் கனல் ஏற்றிய அம்பை மீண்டும் இந்நாவலில் வருகிறாள். அவள் மீள்கையில் அன்னையரும் ஓரளவிற்கு போரை ஏற்றுக் கொள்ளத் துவங்குகின்றனர். அத்தகைய பெண் இழிவைக் கொண்டாடிய அந்த ஒரு தருணம் கௌரவர்கள் வாழ்வில் எத்தகையதோர் தாக்கத்தை ஏற்படுத்தியது, அதை அவர்கள் எவ்விதம் கடக்க முனைகிறார்கள் எனச் சொல்லும் இந்நாவலின் முக்கியமான தருணம் என, துச்சளை முன் குற்ற உணர்வில் ஓங்கிய கை வெட்டுண்டது போல் துவண்டு விழும் துச்சாதனன் உளமுருகி விம்மும் காட்சியைச் சொல்லலாம். பாண்டவர் தரப்பு, கௌரவர் தரப்பு என மாறி மாறி அன்னையரைக் காட்டும் இந்நாவல் இரு தரப்பிற்கும் பொதுவானவனான கர்ணனின் மனைவியான சுப்ரியையில் முழுமை கொள்கிறது. போரைத் தடுக்க முயலும் பெண்களின் கதையாக விரிந்தாலும், தாரை வாயிலாகவும், சுப்ரியை வாயிலாகவும் பெண் கொள்ளச் சாத்தியமான ஒரு விடுதலையை, அடைதலை, நிறைவை தனி இழையாகச் சொல்லிச் செல்வதில் நாவலின் பன்முகத் தன்மை நம்மை வியக்க வைக்கிறது.

இந்தப் பின்னணியில் வைத்துத் தான் செந்நாவேங்கையை பார்க்க வேண்டும். இலட்சியமும், பாசமும் கொண்ட மைந்தர்கள், அன்னையர்கள் இவர்களின் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்டதாகக் கடமையின் பாற்பட்ட தந்தையரின் பார்வையாக விரிந்து வருகிறது இந்நாவல். எழுதழலில் புலி வாயில் மடியும் கணத்தை நோக்கி ஓடிய இளமான்கள், கொன்று கிழித்துண்டு மேலும் மேலுமென நாச்சுழற்றிக் காத்திருக்கும் செந்நாவேங்கையைக் காணப் போகின்றன. இதுவரை தந்தையருடன் நெருங்கிப் பழகாத மைந்தர்களும், அவர்களை முதலும், கடைசியுமாகக் காணப் போகும் தந்தையரும் வரப்போகிறார்கள். போர் அனைத்தையும் அடித்துச் செல்லப்போகிறது. பாரதம் கண்டதிலேயே பெரும் போரான இதன் ஆயத்தங்களை மூன்று கோணங்களில் இருந்தும் விவரிக்கும் வகையில் இம்மூன்று நாவல்களும் வெண்முரசின் கதைப் போக்கில் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்