Thursday, June 21, 2018

இரு படிமங்கள்




ஜெ


பூரிசிரவஸ் பாதை அமைக்கும் காட்சியில் இரண்டு வலிமையான படிமங்கள் வருகின்றன. நெம்புகோலால் பெயர்க்கப்பட்டு உருட்டிக்கொண்டுசென்று அமைக்கப்படும் பெரும்பாறைகள். அது ஒரு பெரிய காலமாற்றம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தவம்செய்த பாறைகள் இடம்பெயர்கின்றன . பெரும்பாறை திடுக்கிடுவதை, முனகியபடி மெல்ல சரிவதை, சினம்கொண்டு சிறுபாறைகளை உடைத்தபடி, பூழியும் சேறும் தொடர உருண்டிறங்குவதைக் கண்டு பலர் அஞ்சி கூச்சலிட்டனர். விழிபொத்தி நடுங்கி அழுதனர். சிறுநீர் கழித்தபடி சிறுவர் தந்தையரை கட்டிக்கொண்டனர். அப்பாறைகள் மெல்ல சென்று உரிய இடத்தில் பாறைகள்மேல் அமர்ந்து நீள்மூச்செறிந்து மீண்டும் துயில்கொள்வதைக் கண்டு கைகூப்பினர். மறுநாளே குலக்குழுக்கள் பூசகர்களுடன் வந்து அப்பாறைகளிலிருந்து விழித்தெழுந்த தெய்வத்தை பலிகொடுத்து ஆறுதல்கொள்ளச் செய்து மீண்டும் அதில் அமைத்தனர். அத்தெய்வத்தின் விழிகள் அப்பாறையில் பொறிக்கப்பட்டு சாலையை திகைப்புடன் நோக்கின அந்த வரிகளிலேயே அந்தக் காட்சி ஒரு உருவகம் என்பது தெரிகிறது

பலர் கயிறுகட்டி பெரிய எடைகளை மேலே தூக்குவது இன்னொரு படிமம். விலங்குகளும் மானுடரும் ஆளுக்கொரு திசையில் இழுக்க பொதிகள் மெல்ல எழுந்து மலைச்சரிவில் ஏறி வந்தன. கூட்டு உழைப்பின்வழியாக பெரிய செயல்களைச் செய்யும் பழக்கமே நாகரீகத்தை உருவாக்குகிறது. அது பழங்குடிகளின் இயல்பல்ல. ஆகவேதான் அவர்களுக்கு அந்தக்காட்சி திகிலை அளிக்கிறது. எல்லாவற்றையும் நெம்பி இடம் பெயரச்செய்யும் அந்த நெம்புகோல் எப்போதும் இருக்கிறது

மதன்