Tuesday, June 19, 2018

அன்னையும் தந்தையும்




ஜெ


வெண்முரசில் வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரிக்கையில் ஒருசில விஷயங்கள் திரும்பத்திரும்ப வருகின்றன. தந்தைவழிச்சமூகம் உருவானால் மட்டுமே வளர்ச்சி உருவாகும், முடிவெடுக்கும் உரிமை அன்னையருக்கு இருந்தால் அக்குடி பழங்குடியாகவே எஞ்சும் என்று இன்றைய அத்தியாயத்தில் பூரிசிரவஸ் தன் மகன்களிடம் பேசும்போது வருகிறது. இதுவே வேறுவார்த்தைகளில் வந்துள்ளது. நிஷாதர் கிராதர் போன்ற பழங்குடிகள் அன்னைவழிச்சமூக அமைப்பு கொண்டவர்கள். ஷத்ரியர்கள் தூய தந்தைவழிக்காரர்கள். இதனால் ஷத்ரிய அரசுகள் போர்வேகம் கொண்டவையாக இருக்கின்றன. அன்னையர் போருக்கு மைந்தர்களை அனுப்புவதற்குத் தயங்குகிறார்கள். ஆகவே படையெடுப்பதும் ஜெயித்துவருவதும் அவர்களுக்குப்பிடிக்கவில்லை. அவர்களின் சமூகம் தேங்கிவிடுகிறது.  

அன்னையர் முதன்மை கொண்ட குடிகள் வளர்வதே இல்லை. ஏனெனில் நிலைக்கோள் என்பதே பெண்டிர் இயல்பு. அன்னையர் தங்கள் மைந்தர்களை தாய்க்கோழி சிறகுக்குள் என அடைகாத்து வைத்திருக்கிறார்கள். வெல்வதும் கடந்து செல்வதும் அவர்களுக்கு புரிவதில்லை. ஒவ்வொன்றையும் அவ்வண்ணமே பேணுவதே அவர்களின் கடன் என தெய்வங்கள் வகுத்துள்ளன. அன்னையர் முடிவெடுக்கும் மரபிலிருந்து நாம் மீறிச் சென்றாக வேண்டும். தந்தை முதன்மை கொள்ளும் குடியாக நாம் மாறியாகவேண்டும் 

என்று யூபகேதனன் சொல்கிறான். இதையே பேரரசுகளுக்கும் சொல்லலாம். தந்தைவழிச்சமூகம் உருவானதும் பேரரசுகளும் உருவாகின்றன. ஒருநாடு பேரரசு ஆகவேண்டும் என்றால் அன்னைவழியிலிருந்து தந்தைவழிக்கு வந்தாகவேண்டும்.

சாரங்கன்