ஜெ
நெடுங்காலம் முன்பு நான் காஞ்சி மூத்த பெரியவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
எனக்கு ஆர்வமெல்லாம் இல்லை. நண்பர்களுடன் சென்றேன். அவரை வழிபடுவதைப்பற்றியெல்லாம்
பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை. அது ஒரு பாவலா என்றும் முடநம்பிக்கை என்றும் நினைத்திருந்தேன்.
அவரை நெருங்கிச்செல்லும்போது
வரைக்கும்கூட என் மனம் கிண்டலாகவே நினைத்துக்கொண்டிருந்தது. அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.
சின்னப்புள்ளை போல அவர் அமர்ந்திருந்தார். யாரையும் பார்க்கவில்லை. ஒன்றும் பேசவுமில்லை.
அவரைப்பார்த்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது. வணங்கிவிட்டு வந்தபோது என்னை எல்லாரும்
கிண்டல்செய்தார்கள். நான் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இன்றைக்குத்தோன்றுகிறது அவருடைய
வயதும் அந்த வயது அளித்த குழந்தைப்பருவமுதான் அந்த மனநெகிழ்ச்சிக்குக் காரணம் என்று.
நாமெல்லாம் டிரைபல் மனநிலையை ஆழத்தில் வைத்திருப்பவர்கள்தானே? நமக்கு அதைக்கடந்து வரமுடியாது.
அந்த மனநிலைதான் இப்படி நம் மனதில் வயது மூப்பு எல்லாவற்றையும் மதிக்கவும் வணங்கவும்
நெகிழவும் செய்கிறது. எனக்கு அந்த நாளை மீண்டும் நினைவூட்டியது பால்ஹிக பிதாமகரை எல்லாரும்
கண்ணீருடன் வணங்கும் காட்சி
எஸ்.மயில்வாகனம்