Wednesday, May 27, 2015

மீண்டும் வெண்முரசு

அன்புள்ள ஜெ அவர்களுக்கு
,
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணி யென்மாசக்தி வையத்தேவி,

          பாரதியின் சொற்களுடன் ஒரு சிறு இடைவெளிக்குப்பின் எழுதுகிறேன்.
       
        இதற்குள் காண்டவத்திலிருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.வெண்முரசு எப்படிப்பட்ட உழைப்பு.மனித முயற்சிக்கு மேற்பட்டத் திறன்.அப்படிப்பட்ட பெரு நிகழ்வில் இதைப்போன்ற சிறு இடைவெளிகள் நடக்கும்.உங்கள் எழுத்துகள் உடன் வருபவர்கள் என்றும் உங்களுடன் உண்டு.எனவே எங்களுக்கு நன்றாகவே புரியும்.

      உங்களுக்கு எழுதாமலே வாசிப்பில் மட்டும் தொடரும் பல ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள்.உங்களுடன் நெருக்கமானவர்கள் போலவே அவர்களுக்கும் உங்கள் படைப்பு மனநிலை பற்றி நன்கு தெரியும்.நானே கூட நீலம் வாசிப்பிலே தான் உங்களுக்கு எழுதத் தொடங்கினேன்.சில ஆண்டுகள் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் கடிதம் அதுவரை எழுதியதில்லை.வெண்முரசின் வாசகர்களுக்கு உங்கள் அறிவிப்பே போதும் .இவ்வளவு விளக்கம் கூட எனக்கெல்லாம் தேவைப்படவில்லை.எழுத்து உருவாகி வரும்போது வாசிக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.

      ஆகவே நல்ல இடைவெளி எடுத்துக் கொண்டு எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.

            எல்லாவற்றையும் கடந்து செல்ல காலமும் ,மௌனமும் வழி என்று எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.சில மனத்தடைகளால் எழுத முடியாமலிருந்தேன்.

      காண்டவம் அறிவிப்பு அதை உடைத்தது.உங்கள் எல்லா படைப்புகளையும் ,முயற்சிகளையும் வாழ்த்தும் பல்லாயிரம் நெஞ்சங்களுன் நானும் கூறுகிறேன்.எழுதுங்கள் காத்திருக்கிறோம்.எந்த உயர்விலும் வாசக நெஞ்சங்களை மதித்து நீங்கள் அளித்த விளக்கம் மனதை என்னவோ செய்தது.உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்

மோனிகா.