Friday, May 15, 2015

தளைகள்



இடிந்திடிந்து சரிந்தன
 எழுந்தெழுந்து சூழ்ந்தவை எல்லாம். 
அறுந்தறுந்து தெறித்தனை 
அணைத்தணைத்து நின்றவை எல்லாம். 
எங்குமென்று வெளித்தன திசைகள். 
ஏதுமற்று திறந்தது பூமி. 

மூதாதை முகங்கள் முனை மழுங்கின.
மூத்தோர் சொற்கள் பொருளழிந்தன. 
நிறையென்றும் கற்பென்றும் 
முறையென்றும் நெறியென்றும் 
கல்லாகிச் சூழ்ந்து கனத்து நின்றவை எங்கே? 
இங்கு எரியேறிய கலம் மீது 
நீர்த்துளிபோல் மறைவனவே அவைதானா?

நஞ்செழுந்த நாகம். 
குருதிச்சுவை கண்ட சிம்மம். 
அவிதேடும் தெய்வம் 
எங்கும் அடங்காத பெருநதி

இனிய ஜெ,

ராதையின் தாபம் கட்டுமீறுவதைச் சொல்லும் வரி இது. நீலம் நாவலை அப்படியே ஒரு நீண்ட புதுக்கவிதையாக அமைத்துவிடலாம். தமிழில் கவிதையில் எழுதப்பட்ட நவீனக் காவியம் இதுதான். அவ்வகையிலே கொற்றவை கூட அருகே வரமுடியாத படைப்பு இது.

இந்தவரியை நான் பலமுறை வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த உணர்வை நீ நானாக இருந்துதான் அறிந்துகொண்டாய் என்று நினைத்தேன். முன்பு வாசித்தது. மீண்டும் வாசிக்கும்போதும் மனசு கொந்தளித்தது. கற்பு, நிறை, பொறை எல்லாவற்றையும் கடந்து உடைத்துக்கொண்டு போகாமல் காதலை அடையமுடியாது. குழலோசையைக் கேட்கவும் முடியாது

ஆர்