Monday, May 18, 2015

முழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)

அன்பு ஜெயமோகன்,

காண்டவம் இரண்டாவது அத்தியாயத்தின் சொற்பதங்கள் பலவற்றின் ஈர்ப்பிலிருந்து உடனடியாக என்னால் விடுபட்டுவிட முடியவில்லை. மூங்கில்காட்டின் உச்சிவெயிலை இருளாக்கிய இனியநிழல், முழுவேதத்திற்கும் நிகராகும் ஒரு குயில்மொழி, மானுட உடலென்பது கணுதோறும் தளிர்க்கும் காட்டுமரக்கிளை, கோடானுகோடி உயிர்த்துளிகள் கலந்து வளர்ந்தெழுந்தது எங்கள் பாடல், பொருள்சுமந்து சலிக்கும் எளியமானுடச்சொல், எளிய உயிரென மகிழும் இக்கணமே என் முழுமை, தன்முகம் கண்டு புன்னகைசெய்யாத குழந்தை போன்ற சொற்பதங்களை எதிர்கொண்டபோது உள்ளுக்குள் பிறந்த உற்சாகம் விதையிலேயே மலர்ந்த பூவுக்கானது. மொழியின் சொல்லாளுமை எவ்விதத்தும் புறத்தில் எவ்வித நிறைவும் தருவதில்லை; மாறாக அகத்தின் மணற்பரப்பில் பெருவெள்ளமாய் ஓடி குளிர வைத்துவிடுகிறது. நெடுநேரம் நான் குளிர்ச்சியாக இருக்க உதவிய சொற்பதங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

”எளிய உயிரென மகிழும் இக்கணமே முழுமை” எனும் வரி அசாதாரண மனநிலையைச் சாதாரணமாகச் சுட்டி நிற்கிறது. ஆறாவது அறிவு பெற்ற உயிர்கள் நாம். துவக்கத்தில் அப்படியான எண்ணத்தில் மட்டுமே இருந்த நாம் படிப்படியாக நம்மை இயற்கை வலைப்பின்னலில் இருந்து துண்டித்துக் கொண்டோம். உயிரியல் வாழ்க்கை என்பதாக மட்டுமே இருந்த வாழ்வு உலக வாழ்க்கை(பொருளியல் வாழ்க்கை / சிறப்பு வாழ்க்கை) எனும் தளத்திற்கு நகர்ந்தது. அதில் தவறில்லை எனினும் உலக வாழ்க்கையை மட்டுமே முதன்மைப்படுத்தி நாம் வாழத்துவங்கிய பின்புதான் துன்பம் துவங்கியது. உயிரியல் வாழ்க்கையில் நமக்கு சிறப்பு அடையாளங்கள் இல்லை. உலக வாழ்க்கையிலோ சொல்லி மாளாத அடையாளங்கள். அடையாளங்களையே நாமென்று நம்பித் தவிக்கிறோம். அவற்றிலிருந்து விடுபட்டுவிட உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே போராடுகிறோம். இறுதிவரை போராட்டமாகவே தொடர்கிறோம். உயிரியல் வாழ்க்கையைப் புரிந்து கொண்டால்போதும் எனும் எளிய சிந்தனைக்குக்கூட பலமற்றவர்களாக கையறு நிலையில் புலம்பிச் சாகிறோம். மந்தபாலரின் நிலையும் அப்படியானதாகத்தான் தோன்றுகிறது. “பெருந்தவ முடிவிலும் நான் உணர்ந்த நிறைவின்மை” என அவர் தவிப்பது அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. ”தவம் செய்து அடைந்த ஆணவமெல்லாம்” எனும் வாக்கியத்தில் உலகவாழ்க்கையின் உச்சகட்ட மனநிலையையே காண்கிறேன்.  

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.