Tuesday, May 26, 2015

காண்டவம், அரைப்புள்ளி

அன்புள்ள ஜெ,

முன்பொருமுறை 'அறம் பற்றிய சொல்' என்று திருதாவின் ஒரு கூற்றைச் சொல்லியிருந்தீர்கள். அறம் பற்றுதல் சொற்களுக்குத் தான் நிகழ வேண்டும் என்பதில்லை போலும். எண்ணங்களுக்கும் நிகழலாம். காண்டவம் மூன்றாவது அத்தியாயம் வந்த போதே மனதில் ஒரு நினைப்பு, ஏன் அனைத்து சூதர்களும் பாடி முடிந்த உடன் ஓர் சிறு இடைவெளியைக் கேட்கக் கூடாது என்று. ஏன் அவ்வாறு தோன்றியது என்று இப்போது கூடத் தெரியவில்லை. பொதுவாக வெண்முரசு வாசிக்கத் துவங்கி இரண்டாவது அத்தியாயத்திலோ அல்லது மூன்றாவது நான்காவதிலோ மனம் நாவலை உள்வாங்குவதற்கென்று ஒரு வடிவைக் கண்டுகொண்டுவிடும். அவ்வடிவம் வரும் போதே நாவலின் நிகழ்வுகளை அதனதன் சரடில் கோர்க்கத் துவங்கி விடும். எத்தனை பாத்திரங்கள் வரினும் அவர்களை அவரவர் இடத்தில் வைத்து நிகழ்வுகளின் சரடை மனது இழுக்கத் துவங்கிவிடும். எனவே எளிதாக நாவலை நினைவில் கொள்ள முடியும். அப்படி நினைவு கொள்ள முடிந்தால் மட்டுமே வாசிப்பும் எளிதாக அமையும். ஆனால் அதற்கு பெருஞ்சவாலாக வந்தது நீலம். அதன் வடிவும், அதில் வரும் சரடுகளும் முதல் ஆறு அத்தியாயம் வரை பிடி கிடைக்கவில்லை. பின்பு நீங்களே அதற்கு ஒரு வழியைக் கொடுத்தீர்கள். அதன் பிறகே நாவல் எனக்குள் நிகழத் துவங்கியது.

காண்டவம் சிக்கலானது என்பதாலேயே மிக அதிக முறைகள் வாசிக்க வைத்தது. முதல் முறையாக கதைகளுக்கிடையே ஓர் ஒருங்கமைவை கண்டு கொள்ள மிகுந்த சிரமம் கொண்டேன். வெண்முரசில் 6 நாவல்களைத் தொடர்ந்த எனக்கு ஆச்சிரமம் தந்த அபாரமான தாழ்வுணர்வு சாதாரணமானதல்ல. அதனால் கூட அந்த ஓய்வை மனம் கேட்டிருக்கலாம். அனைத்து அத்தியாயங்களையும் மீண்டும் மீண்டும் படித்து அதற்கு ஓர் மன வரைவை ஏற்படுத்த வேண்டும் என்றே மனம் விரும்பியிருக்கிறது. ஆனால் இன்று தங்களின் காண்டவம் நாவலாக எழாமை குறித்த பதிவைப் படித்த போது குற்ற உணர்வே மேலிடுகிறது. ஒரு சிறு அளவேனும் என்னுடைய இயலாமையும் இதற்கு காரணமாகிவிட்டதோ என்று!!!

ஒரு வகையில் காண்டவம் தந்திருக்கும் நாகர்களின் வம்ச வரிசை வெண்முரசில் வேறெங்கோ நிச்சயம் வரத்தான் போகிறது. அப்போது இந்த நாவலின் ஆறு பகுதிகளும் சொல்லிய கதைகளும், நிகழ்வுகளும் உதவத் தான் போகிறது. நீங்கள் இப்போது வேண்டுமானால் நாவல் எழவில்லை என்று சொல்லலாம். ஆனால் இதுவரை வந்த பகுதிகளில் ஒரு ஒருமையும், வடிவும் கூடித்தான் வந்திருக்கிறது, சில கால குழப்பங்கள் எனக்கு உள்ளன என்றாலும். எனவே என்றோ ஒரு நாள் இவை ஒரு குறுநாவலாகவேனும் வரலாம், வர வேண்டும் என்றே ஒரு வாசகனாக விரும்புகிறேன்.

ஒரு வாக்கியம் எழுதும் போது அதில் காற்புள்ளிகளும், அரைப்புள்ளிகளும் தருகின்ற மேலதிகப் பொருள் அவ்வாக்கியத்தையே வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். வெண்முரசு நாவல் தொகையை ஒரு நீண்ட வாக்கியமாகக் கொண்டால், காண்டவத்தின் அத்தியாயங்கள் ஒரு அரைப்புள்ளியாக நிச்சயம் அமையும். அவை தந்திருக்கும் பொருள் நாளை முற்றிலும் வேறாக, வேறு தளத்திலாக நாவலில் எங்கேனும் நிகழலாம். 

படைப்பு என்பது எப்போதுமே கலைஞனின் வழியாக நிகழ்வது. நீங்களே பல முறை அதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அது நிகழும் போது நிகழட்டும். இதைத் தொய்வாகவோ, சோர்வாகவோ கொள்ள வேண்டியதில்லை. இந்த சமயத்தில் உங்களிடம் சில கேள்விகள்.

1. நீங்கள் எழுதுவதைப் படிப்பதற்காக சில ஆயிரம் வாசகர்களாவது இந்திய நேரம் இரவு 12 மணியை நோக்கிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நாங்கள், எங்களின் எதிர்பார்ப்பு உங்களுக்கு ஏதேனும் அழுத்தத்தைத் தருகிறதா? அப்படித் தரக் கூடாது என்பதே உங்களின் உண்மையான வாசகர்களின் எண்ணம். எங்களின் இருத்தல், இந்த எதிர்பார்ப்பு உங்களுக்கு உந்து சக்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

2. வெண்முரசு நாவல் எழுதத் துவங்கிய காலத்தில் ஒரு முறை நாவல் தொகுதிகளின் இடையில் நிச்சயம் ஒரு சோர்வு வரும். அப்போது என் வாசகர்கள் அதைத் தாண்டிச் செல்ல உதவுவார்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இது அது போன்ற ஓர் சோர்வா? அப்படியென்றால் வாசகனாக நான் என்ன செய்ய வேண்டும்? நல்லவேளையாக ஊட்டி இலக்கிய முகாம் வருகிறது. நிச்சயம் வாசகர்களின் சந்திப்பு உங்களை மேலும் மேலும் உற்சாகப் படுத்தக் கூடும். மேலும் இயல் விருதிற்கான பயணமும் உங்களுக்கு புத்துணர்ச்சி தரட்டும். மீண்டும் புதிதாக எழுதுங்கள். இருபது அத்தியாயங்களுக்குப் பிறகு புது அறிவிப்பு விட்டு நாவலைத் தொடருங்கள்.

சற்று அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகளாக இவை இருந்தால் மன்னியுங்கள். எவ்வித அழுத்தமோ, புறக் காரணிகளோ உங்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இக்கடிதம். உங்களின் பதிவில் பதில் கூறும் ஒரு தொனி இருந்தது. அது என்னை மிக மிக சங்கடப் படுத்துகிறது.  மாறாக காத்திருங்கள் வாசகர்களே என்று தோளில் கைபோட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.




அன்புள்ள மகாராஜன்
உண்மையில் வாசகர்கல் ஒருவகையில் அதிகர்கள், உரிமையாளர்கள். ஒரு தனிநபரல்ல. ஒரு பெருந்திரளாக. காலமெங்கும் நிறைந்திருப்பவர்களாக
ஜெ