Thursday, May 14, 2015

அசலை



அன்புள்ள ஜெ,
 
வெண்முகில் நகரம் முழுக்க பெண்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். வெண்முரசு முழுக்க முழுக்க பல்வேறு பாத்திரங்கள் வெகு சிறப்பாக வடிக்கப்பட்டு உலவி வருகின்றனர். ஒவ்வொரு நாவலிலும் ஏதேனும் ஒரு சிறு பாத்திரம் சட்டென்று மனத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். வெண்முகில் நகரத்தில் அவ்வாறு நான் விரும்பிய பாத்திரம் அசலை.

மிக மிகத் துடிப்பான, துடுக்கான பெண். சிரிக்காமலேயே பொடி வைத்து பேசி, தான் இருக்கும் இடத்தையே கலகலப்பாக்கி விடுகிறாள். துச்சாதனனுக்கு நேரெதிர் குணாம்சம். துச்சாதனன் பேசுவது என்பதே கிட்டத்தட்ட இல்லை. வெண்முரசில் அவன் பேசுவதாக வருமிடங்கள் மொத்தமே நான்கு என்று தான் நினைக்கிறேன். அதிலும் தன் தமையன் துரியனுக்காகவே பேசுகிறான். அவனுக்கு துரியனை மீறி வாழ்வில் ஒன்றுமே இல்லை. வெண்முரசு துச்சாதனனை முரடனாகப் படைக்கவில்லை. வண்ணக்கடலில் துரியன் கார்க்கோடகனைக் காணும் முன் கொண்ட பெருங்கோபத்தால் தன் தம்பியரை கண் மண் தெரியாமல் அடிப்பான். அத்தருணத்தில் இளையவர்கள் மீது அடிவிழாமல் அவ்வடிகளைத் தன் மீது தாங்கிக் கொள்வான் துச்சாதனன். அதனால் தான் துரியன் பானுமதியிடம் கூட, அவன் கண்கள் கருணையால் நிறைந்திருப்பவை என்று சொல்கிறான். தன் குரலையே வெளியிடாத ஒருவனுக்கு ஓயாமல் பேசும் வாயாடி மனைவி. நிச்சயம் துச்சாதனன் அசலையுடன் இருக்கும் நேரங்களில் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பான். யார் கண்டது அவனது குரலாக அசலையே கூட இனி ஒலிக்கலாம், பானுமதி வழியாக!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.