Friday, May 8, 2015

யாதவனின் நகரம்




ப்ரயாகையில் கிருஷ்ணன் யாதவன் என்றே அழைக்கப்படுகின்றான். க்ருஷ்ணனை அரச மரியாதையுடன் அழைக்கின்றார்கள், கொண்டாடுகின்றார்கள், பேசுகின்றார்கள். ஆனாலும் க்ருஷ்ணன் யாதவனாகவே அடையாளப்படுத்தப்படுகின்றான்.

க்ருஷணனின் துவாரகையில் அமைச்சு பொறுப்பு, வணிக பொறுப்பு, நகர நிர்வாகம், நகர பாதுகாப்பு அனைத்தும் யாதவர்களால் நடத்தப்படுகின்றது. தேவையெனில் சத்திரிய சேனைகள் அஸ்தினாபுரியில் இருந்து க்ருஷ்ணணால் பயன்படுத்தப்படுகின்றது. க்ருஷ்ணன் எந்த வேள்வியும் துவாரகையில் செய்யவில்லை. துவாரகை நிர்மாணத்துக்கு கங்கை தீர்த்தம் வேண்டுமானாலும் தானே வந்து செய்து கொள்கின்றான்.

ஏன் க்ருஷ்ணன் இப்படி இருக்கின்றான் என்பது கேள்வியாகவே இருக்கின்றது.

வெண்முரசில் வரும் நகர அமைப்புகள், ஆற்று பாதைகள், நகரங்களுக்கு இடையேயான இணைப்புகள், உறவுகள், சந்தைகள், குல முறை நிர்வாகம், பழங்குடி அமைப்புகள் எல்லாம் வெண்முரசின் மீது பலருக்கு கசப்பை கொடுக்கின்றது. அது சற்று வேடிக்கையாக இருக்கின்றது.

பக்தி அடிப்படையிலும், வாய்மொழி கதையாகவும் தமிழில் பழக்கப்பட்ட மகாபாரதம் வேறு தளத்தில் பார்க்கப்படும் பொழுது, அந்த தளத்தின் விரிவு அபாரமாக இருக்கின்றது.

வெண்முரசு வெறும் பாத்திரங்களின் வாயிலாக நகர்த்தப்படவில்லை, மொத்த கங்கை கரை நாகரீகமும் அதில் திரண்டு மையமாக உள்ளது.

உங்கள் தளத்தில் தமிழ் வரலாறு என்றொரு இணைப்பை பார்த்தேன். மொத்த தமிழ் வரலாற்றையும் பல தலைப்புகளில் பிரித்து வைத்துள்ளீர்கள். அருமையாக இருந்தது.

அன்புடன்
நிர்மல்