Wednesday, May 6, 2015

பருந்தின் காலில் பிணைந்த நாகம்




ஆசிரியருக்கு ,

விண்முகில் நகர் இறுதி தத்துவார்தமானது, அதே சமயம் மகாபாரத்தின்  சாரத்தை தன்னுள் கொண்டது. வெண்முரசில் நாம் வியக்கும் பண்பு என்பது "enemies in war, in peace friends",  பகையை  போருக்கு பின் யாரும் கட்டி சுமப்பதில்லை, போர்த்தொழில் என்பது ஒரு விதி நிமித்தம் மட்டுமே.  கூறப் போனால் போர் வழியாக ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்கின்றனர் (பூரிசிரவஸ் -பீமன்). 

 வெண் முரசை வைத்து பார்க்கிற  போது இது அக்கால சமூக பண்பாடு என்பது தெளிவாகிறது.  பகையையும் வன்மத்தையும் கட்டிச் சுமப்பது தனிப்மனித நோக்கிலும், சமூக நோக்கிலும், அரசியல் நோக்கிலும் மகாபாரத காலத்தில் ஏற்கத் தக்கதல்ல. வன்முறையையும் போரையும் நாம் கடந்து விட்டோம் கூடவே இப்பண்பாடையும்.  மகாபாரத காலத்தில் சாதாரணமான இது நமது காலத்தில்  அபூர்வம். உள்ளதெல்லாம் நிழல் யுத்தமும் வஞ்சம் வளர்தலும் போலிச் சமரசமும்.   

சதியகியின் அந்தப் பருந்து-பாம்பு கதை ஒருவகையில் மகாபாரத்தின் சாரம், அது ஒரு பண்பாட்டுத் திரிபு, அத்  திரிபே குருட்சேதிரத்திற்கு வழிகோல்கிறது. அம்பை- பீஷ்மர் எனத் துவங்கிய அது துருபதன்- துரோணன், கர்ணன்-அர்ஜுனன்/திரௌபதி, துரியன்-பீமன்  என பட்டியல் நீள்கிறது. துருபதினின் வார்த்தைகளில் அவர்களால் அந்நதியை  கடக்க முடிய வில்லை. 

இதுவே முதற்கனலில் ஆஸ்திகன் மீட்ட பாம்பு  என்பேன்.  

கிருஷ்ணன்.