Monday, March 28, 2016

எதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)



  எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலை எதிர்கொள்ளாத ஒரு நாளையாவது நாம் கண்டிருக்கிறோமா?  ஒரு செயலை செய்வதற்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளனவோ அந்த அளவுக்கு அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான சிக்கல் அதிகரிக்கிறது.  எது எளிதானது, எது அதிக நன்மை தருவது,  எது  நீண்ட கால நன்மை பயப்பது, எது இப்போதைக்கு மிகத் தேவையானது, எதில் பிரச்சினைகள் குறைவாக வரும். எதில் அதிக இன்பம் வரும்,  எது அதிக வசதியை கொடுக்கும் எது அதிக நற்பெயரை உண்டாக்கும், எது அறத்தால் அதிகம் உயர்ந்தது. எதில் அற மீறல் குறைவு, எது குறைவான செல்வக் குறைவை தரும், எதில் செல்வம் அதிகம் பெருகும், எதில்  பிறர் நம்மை அதிகம் விரும்ப வைக்கும், எதில்  பிறர் நம்மை வெறுப்பது குறைவாக இருக்கும்.   எதில் நம்  வஞ்சம் தீர்க்கப்படும், எதில் நாம் அடையும் பகை குறைவாக இருக்கும் என பரிசீலிக்கப்படவேண்டிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
           

இப்படியாக பற்பல காரணிகளை  எதையும் விட்டுவிடாமல், தவறின்றி கணக்கிட்டு,  பரிசீலித்து,  ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. இந்தச் சிக்கலை, காலியாக இருக்கும் பேருந்தில் இருக்கையை தேர்ந்தெடுக்கும் மிக எளிய முடிவுகள் எடுப்பதிலிருந்து எந்தத் தொழிலை நாம் தேர்ந்தெடுப்பது என்பதைப்போன்ற வாழ்வில் மிகப்பெரிய முடிவுகளைஎடுப்பதுவரை நாம் காண்கிறோம்.   அப்படி முடிவெடுத்தபின்னும் இது சரியான முடிவா என குழம்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் ஆரம்பத்திற்கு சென்று  முடிவை மாற்றிக்கொள்ளலாமா என ஊசலாடுகிறோம். இந்த ஊசலாட்டத்தில் நேரம், பொருள், புகழ், வெற்றி,  மனநிம்மதி போன்ற  பலவற்றை இழக்கிறோம்.


      இந்த சிக்கலை முடிவெடுப்பதில் நாம் காணும் மன ஊசலை இன்று வெண்முரசில் ஒரு காட்சியாக விவரிக்கப்படுகிறது.  தவமிருக்கும் தனுவின் முன் அன்னை தோன்றுகிறாள். அவனுக்கு தான் நினைத்ததை தர நினைக்கிறாள். அவனோ போதாது என்கிறான். அவனுக்கு இரு வாய்ப்புகளை அளிக்கிறாள் அன்னை.  முடிவெடுப்பதற்கான அந்தக் கண நேரம் அவனுக்கு அவன் வாழ்க்கையிலேயே பெரும் சிக்கலான நேரமாக அமைகிறது.  அவன் ஏதாவது முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு அவன் இறுதியில் மேற்கொள்வது  உண்மையில் சிறந்த முடிவா எனத் தெரியாமல் விழிக்கிறான்.


   இத்தகைய நிலையில் ஒருவன் என்னதான் செய்வது? ஒன்றும் செய்வதற்கில்லை. இதில் நம் அனுபவம், அறிவு, உள்ளுணர்வு எல்லாம் கொண்டு ஏதாவது ஒரு முடிவை எடுக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இதைப்போன்ற சிக்கலான தருணம் ஒன்றில் என் சிறுமகன் மிகச் சிறந்த முடிவெடுத்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவனுக்கு மூன்று வயதுக்கும் குறைவு. அப்போதுதான் பேச ஆரம்பித்திருந்தான். அவனை சுசி என்று கூப்பிடுவோம். திருச்செந்தூர் கோயில் பிரகாரத்தில் ஒரு பொம்மைக்கடைக்கு சென்றோம். பலவண்ணம் கொண்ட பலவிதமான பொம்மைகளைப் பார்த்து வியந்து நின்றான்.  நான் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன் என அவனுக்கு தெரியும். எந்தப் பொம்மையை தேர்தெடுப்பது என அவன் முடிவெடுக்காமல் திகைத்தது தெரிந்தது. அவன் சட்டென்று திரும்பி என்னைப்பார்த்து 'அப்பா சுசிக்கு என்ன வேண்டும்'  என தன் மழலைக்குரலில் கேட்டான். என்ன அருமையான முடிவு. கொடுப்பவனிடமே முடிவெடுப்பதை விட்டுவிடுதல்.
  


தனுவும் முடிவெடுப்பதை  அன்னையிடமே விட்டுவிட்டிருக்கலாம். அவள் வரத்தை இறை பிரசாதமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்  எனத் தோன்றுகிறது. வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவளே காரணம் என ஆக்கியிருக்கலாம்.  உண்மையான துறவிகள் தம் வாழ்வில் முடிவெடுப்பதையும் துறக்கிறார்கள்.  அவர்கள் வாழ்வு எனும் ஆற்றில் மரத்தில் இருந்து விழுந்த மலர் மிதந்து செல்வதைபோல மிதந்து செல்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய சிக்கல் என்பதே இல்லை அல்லவா?

தண்டபாணி துரைவேல்