Tuesday, March 8, 2016

பெண்ணின் பார்வை (வெய்யோன் 76)


    

உலகில் விழி இருக்கும் அனைத்து உயிர்களும் பார்க்கின்றன. ஆனால் ஒரு பெண்ணின் பார்வைக்கு மட்டும் ஆயிரம் அர்த்தங்கள் ஏன் தோன்றுகின்றன என எண்ணிப்பார்க்கிறேன்.  ஆணின் கண்கள்  நான்குபுறமும் எதையாவது துழாவிக்கொண்டிருக்கும். அவன் கண்கள் வேட்டையாடியின் கண்கள் அல்லது ஆபத்தை எதிர்பார்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பார்வை கொண்டிருப்பது. அதனால் அவன் பார்வைக்கு அறிதல் என்ற ஒரு பொருள் மட்டுமே இருக்கிறது.  அதாவது அவன் பார்ப்பது எதையோ அறிந்துகொள்வதற்கு என ஆகிறது. மற்றபடி அவன் பார்வையில் வேறு அர்த்தம் இல்லை. வேண்டுமென்றால் அவனின்  மற்ற  முகமாறுதல்களைக்கொண்டு மேலும் அவன் அகம் பற்றி அறிந்துகொள்ளலாம். 


   ஆனால் பெண்ணின் பார்வை அப்படியல்ல. ஒரு பெண் தன் பார்வையை மிகவும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள்.   ஒரு பெரிய சபையினில் யாரையும் பார்க்காமல அவளால் அமர்ந்திருக்க முடியும். ஒரு ஆணால் அப்படி இருக்க முடியாது.  ஒரு பெண் ஒருவரை அல்லது ஒரு பொருளை பார்க்கிறாள் என்றால் வேண்டுமென்றே தன் மனமறிந்து பார்க்கிறாள் என்ற கருத்து  அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே ஒரு பெண்ணின் ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பொருள் இருக்கிறது என்று எண்ணுகிறான். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கிறது. அவளால் விழியால் மட்டும் சினத்தை, ஆவலை, மகிழ்வை, காதலை, அவமதிப்பை, அலட்சியத்தை என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடிகிறது. அவள் பார்க்கும் கோணம், பார்க்கும் சமயம், அதற்கு அவள் எடுத்துக்கொள்ளும் நேரம், அதனுடன் அவள் காட்டும் உடல்மொழி இத்தனையும் சேர்ந்து பெண்ணின் பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்கள் தருகின்றன.    மேலும் அந்தப் பார்வையை அறியும் ஆணின் உளவியல்   இன்னும் பல பொருள்களை  அப்பார்வைக்கு அளிக்கிறது. 
  

  ஒரு பெண்ணின் பார்வை என்ன சொல்லவருகிறது என்பது ஆணுக்கு ஒரு புதிராக இருகிறது. அந்தப் பார்வைகளின் பொருள்களை புரிந்துகொள்வதற்கென ஒரு நுண்ணறிவு தேவைப்படுகிறது.  அதை தவறாக புரிந்துகொள்பவர் அந்தப் பெண்ணையும் தவறாக புரிந்துகொள்கிறார். அதன் காரணமாக சிக்கல்கள் விளையலாம். அதற்கு அவளின் பார்வைதான் காரணம் என்று நாம் வெளியில் சொல்லிக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் இந்தப் பார்வையில் பொருள் காணவிழைவது அனைத்துப் பெண்களிடமும் இல்லை.  தன்னை ஈர்க்கும் பெண்களின் பார்வை மட்டுமே ஒருவனை பாதிக்கிறது. மற்ற பெண்களின் பார்வைகளை அவன் பொருட்படுத்துவதில்லை.

    துரியோதனன் பிறவியிலேயே தான் என்ற அகங்காரம் மிக்கவன். சிறு வயதில் அவனை விட வல்லவன் என பீமன் ஒரு  தோற்றம் கொள்ளும்போது அவன் உள்ளம் எப்படி பொங்கியது என்பதைக் கண்டோம். அந்த அகங்காரத்தை தன் நல்லெண்ணத்தால் அவன் புதைத்து வைத்திருக்கிறான்.   பீமன் அர்ச்சுனனின் அலட்சியம் கூட அவ்ன் அகங்காரத்தை சீண்ட வில்லை. ஆனால் அவன் நீர்ப்பரப்பில்  விழுகையில் திரௌபதியின்  பார்வை அவன் அகங்காரத்தை சீண்டி எழுப்புவதாக தெரிகிறது. உண்மையில் திரௌபதியின் பார்வையின் பொருள் அவனை அவமதிப்பதற்கானதா என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் துரியோதனன் அதை அப்படித்தான் பொருள் கொள்கிறான். அந்த நேரத்தில் திரௌபதி விழியில் நகைப்பு காட்டியது சரியா? வெடித்து சிரித்த பலர் இருக்கையில் ஏன் திரௌபதியின் நகைப்பை மட்டும் பெரிதாக அவன் மனம் கொள்கிறது?  அது அவ்ன் உள்ளத்தில் அவளால் அடைந்த பாதிப்பாக இருக்கலாம்.  அவள் அண்ணனின் மனைவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு ஆணாய் அவன் உள்ளத்தில் இருக்கும் அவள் மேலான காமம்.  தான் காமம் கொண்டிருக்கும்  பெண்ணிடம் இகழ்ச்சி யடைவது அவனின்  அகங்காரத்தை பெரிதாக பாதிக்கிறது. இதே காரணம் கர்ணனிடமும் இருக்கிறது. அதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் துரியோதனனின் மேல் மனம் இதை அறியாதிருக்கிறது.   ஆக துரியோதனனின் மன மாற்றத்திற்கு காரணம் வெறும் திரௌபதி சிரித்ததுதான் என்று சொல்வது  சரியல்ல.  பாண்டவர் மீதான பொறாமை, திரௌபதி மீதான காமம் அனைத்தும் அவன் மேல் மனதை அடையாமல்  அணைகட்டி வைத்திருந்தான்.  ஆனால் அவை எந்நேரமும் அவன் ஆழ்மனதில் இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. அந்த அணை இப்போது உடைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அது பெருகி பாய்ந்தோடி ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளுக்கு வேறு காரணங்களை காட்ட முடியுமா என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.