அன்புள்ள ஜெ
வெய்யோனின் மனமயக்கக் காட்சி என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. நடந்ததும் நடக்கப்போவதும் கலந்து காலமில்லாத ஒரு கனவுவெளியில் அது நிகழ்கிறது. ஜயத்ரதன் தலை அவன் அப்பா கையில் போய் அமர்கிறது. ஜராசந்தன் இரண்டாகப்பிளக்கிறான். மனிதர்களும் நாகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து தெய்வங்களுடன் கலந்துவிடுகிறார்கள். எல்லாமே ஒரு பெரிய கலவையாக ஆகிவிடுகிறது.
நான் ஒரு முறை ஆப்பரேஷன் செய்து கிடந்தபோது அந்தவகையான ஒரு மனமயக்கநிலையை அடைந்தேன். அதை மீண்டும் அடைந்தேன். அந்த மனநிலையில் பல விஷயங்கள் புதிர். ஜயத்ரதன் தலையுடன் ஏன் சிசுபாலன் தலையும் சென்று அமரவேண்டும்? முதலில் அது தப்பாக இருந்தாலும் பிறகு சிந்திக்கும்போது வேறுமாதிரியும் தோன்றுகிறது. இருவர் கதையும் இன்றே. இருவரும் தலைகொய்யப்பட்டார்கள். அந்த ஒற்றுமை ஏன் நமக்குத்தோன்றாமல் போயிற்று என்று நினைத்துக்கொண்டேன். ஆச்சரியமாக இருந்தது.
துரியோதனனுக்கும் தம்பிக்கும் நடுவே வரும் அந்த தெய்வம் அல்லது பேய் எது? ஸ்தூணகர்ணன் உள்ளே வருகிறான். எல்லாவற்றையும் விடமுக்கியமானது பாஞ்சாலியின் குருதிபூசிய கூந்தல் வருவது. துரியோதனன் ஆழ்மான அமைதி கொண்டிருக்கிறான். அவன் அந்தக்கூந்தலைப் பார்த்திருப்பானா?
செல்வராஜ்
