Friday, March 4, 2016

மீனாட்சி


வணக்கம் ஜெயமோகன்.

இந்திரநீலம் செம்பதிப்பு உங்கள் கையெழுத்திற்காக இருப்பதாக அறிந்தேன். இம்முறை என் மகளின் பெயரில் கேட்டிருக்கிறேன்.

பெங்களூருவில் பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தியுடன் என் மனைவி (சில சமயம் நானும்) கற்றுத்தரும் தமிழில் அவள் படிப்பதைப் பார்க்க ஆவலாக உள்ளோம்.

"மீனாக்ஷி" என்ற பெயரில் கையெழுத்திடும்போது என் சிறுமகளை நினைவுறுத்தி நற்சொல் அளிக்குமாறு பணிந்து கேட்டுகொள்கிறேன். நன்றி.
*
அன்புள்ள ஜெயமோகன்,  என் மகள் பெயரில் தங்கள் கையெழுத்துடன் "இந்திரநீலம்" செம்பதிப்பு கிடைக்கப்பெற்றேன்.
இன்று காலை அவளிடம் புத்தகத்தைக் கொடுத்தோம். "இன்னொரு பெரிய புக்கா? ஜெயமோகன் தானே, இந்த தரம் யாரு பேருல கையெழுத்து போட்டுருக்காரு" என்று அதைப் பிரித்தவள்  எழுத்துக்கூட்டி வாசித்து "அப்பா, என் பேருப்பா" என்று சிரித்த கணம் -  "பூமாலையே தோள் சேரவா" பாடலின் தொடக்க இசை தரும் கிளர்ச்சி  -  மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு
அன்புள்ள மூர்த்தி,

மீனாட்சி என்னும் சொல் பற்றி ஒருமுறை காஞ்சி சந்திரசேகரர் சொன்னார். அது அபூர்வமான கலவை. தமிழும் சம்ஸ்கிருதமும். இரு பெரும் பண்பாட்டுவெளிகளின் கலவை. இந்து மதத்துக்கே ஒரு குறியீடு போல என்று
மீன்விழி என்பதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். மீன் வடிவம்தான் நமக்குத் தோன்றுவது. ஆனால் மீன் இமைப்பதே இல்லை. அதைப்போல அன்னை தன் மைந்தரை இமைக்காது  புரக்கிறாள் என்பதே அச்சொல்லின் பொருள் என்று
மீனாட்சிக்கு என் வாழ்த்துக்கள்

ஜெ