Wednesday, March 30, 2016

விழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)


  புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைகளற்றவனுக்கு துன்பமென் ஏதுமில்லை என்று கூறினார். மனிதன் ஆசைவயப் படுவதனால் மற்றவர்களுடன் போட்டி போடுகின்றான். பொறாமை கொள்கின்றான், அவன் ஆசை நிறைவேறாதபோது பெருங்கோபம் கொள்கிறான், அதன் காரணமாக மற்றவர்களுக்கு தீங்கிழைக்க துணிகிறான். உண்மையில்  பார்த்தால்  உலகின் அனைத்து அறமீறல்களுக்கும் தீய நடத்தைகளுக்கும் ஆசை ஒன்றே காரணம் என்றாகிறது.


     அப்படியென்றால் கடவுள் அல்லது இயற்கையால்  ஏன் உயிர்களுக்கு ஆசைவயப்படுதல் கொடுக்கப்பட்டுள்ளது. கற்பனை செய்து பார்ப்போம். கடவுள் உயிர்களைப் படைத்திருக்கிறார். அனைத்தும் சும்மா உட்கர்ந்திருக்கும். கடவுளே சென்று ஒவ்வொன்றுக்கும் உணவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். கடவுள் மேலும் மேலும் உயிர்களை உருவாக்கி உலகில் விடவேண்டியிருக்கும். அவரே அவற்றுக்கென உறைவிடங்களை உருவாக்கவும்,  அவற்றை மழை பனி வெய்யில் போன்றவற்றிலிருந்து காப்பாற்றவும் செய்ய வேண்டியிருக்கும்.  உயிர்களின் சேவகன் போல இடைவிடாத பணி இருந்துகொண்டே இருந்திருக்கும். சலித்துப்போன கடவுள் சிந்தித்து ஒரு வழி கண்டு பிடித்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான  விழைவை அளித்தார். வாழும் இச்சை உயிர்கள் வாழ்வதற்கு உணவு தேட வைத்தது.  அந்த வாழும் இச்சை  உணவு தேடுவதற்காக  உணவாசையாக ஆனது. தாம் பாதுகாப்பாக இருப்பதற்கு இருப்பிடம் தேடவைத்தது. அப்படி உருவானதுதான்  மண்ணாசை.  எப்படியாயினும் தமக்கு இறப்பு உறுதி என்பதால் தன் இறப்பிற்கப்புறமும் தன் நினைவுவாழ இனப்பெருக்கம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் காமம் உருவானது. இந்த அடிப்படை ஆசைகள் காரணமாக பல்வேறு ஆசைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. ஒன்று மூன்றாகி, மூன்று முப்பது முக்கோடி ஆசைகளாக உயிர்களிடம் பல்கிப்  பெருகி வளர்கிறது. இன்பம் என்பது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதே.  இன்பங்களை அடைவதற்காக தன் வல்லமையை உயிர்கள் பெருக்கிக்கொள்கின்றன. அவை பரிணாம வளர்ச்சியாக நிகழ்கிறது.   மனித உயிர்கள் தம் சிந்தனைத்திறன் காரணமாக ஆசைகளை பலமடங்கு  பெருக்கிக்கொண்டே போகிறன.   இன்பங்கள் தடையின்றி கிடைக்க பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன.   கோட்டைகள் கட்டப்படுகின்றன, கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. அடிப்படை இச்சைகள் மேல் அலங்காரம் செய்து கலைகளாக ஆக்கப்படுகின்றன. உலகில் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அதன் பொருட்டு அறிவியல் வளர்கிறது. அதனால் இன்னும் இன்னும் என ஆசைகள் பெருகி வளர்கின்றன. விண்ணைமுட்டும் கட்டிடங்கள், விண்ணில் செல்லும் வாகனங்கள், என  ஆக்கங்கள்  பலவும் ஆசையின் காரணமாகவே விளைகின்றன.


   ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வும் உயர்வும் அவன் ஆசைகளின் காரணமாகவே ஏற்படுகிறது. மனிதன் தன் விழைவுகளை அகற்றிவிட்டால் வெறும் மண்ணென செயலற்று போகின்றான். அவன் ஏற்கெனவே பெற்ற வல்லமைகள் பொருளற்றுப்போகின்றன.  விழைவுகளற்றவினடமிருந்து வல்லமைகள் தேய்ந்து மறைகின்றன.  ஒருவன் தன் அடிப்படையான வாழ்விச்சையையும் விடும்போது அவன் உடலும் பொருளற்றுப்போய், அது  அழிவை நோக்கிப்போகிறது. ரம்பனும் குரம்பனும் தன் வாழ்விச்சைகளை தம் உளச்சிக்கல் காரணமாக இழந்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் அழிவுப்பாதையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்விச்சையை அளிக்க வேண்டும். வாழ்வதற்கு ஏதாவது காரணம் காட்டவேண்டும்.


“அரசரிடம் விழைவை மூட்டுக! செயலுக்கு அனல் விழைவே. அதன்பின் அருஞ்செயல் ஒன்றை அவருள் கூட்டுக! அதில் தன்னைச் செலுத்துகையில் அவர்கள் ஆற்றலுறுவர்.”
அவர்களுக்கு காம இன்பம் உணர்த்தப்படுகிறது.

காமம் அவர்கள்  ஐம்புலன்களையும் விழித்தெழச் செய்தது. ஏழுசக்கரங்களையும் உயிர்கொள்ளச்செய்தது. உண்டு பயின்று உடல்தேறினர். அணிசூடினர். கலையும் இசையும் கவியும் தேர்ந்தனர். மணமும் சுவையும் நாடினர். அவர்களின் மூச்சு வலுப்பெற்றது. சொல் கூர்மைகொண்டது. விழிகளில் நகைப்பு நின்றது.
 
      அதன் மூலம் அவர்கள் வாழ்விச்சையை  மீண்டும் அடைகிறார்கள். அந்த வாழ்விச்சை அவர்களுக்கு மற்ற ஆசைகளை உருவாக்கி அவர்களை ஊக்கம் பெறவைக்கும்.
    ஆனால் சித்தர்கள் ஞானிகள் இச்சைகளை துறந்தவர்கள் அல்லவா? அவர்கள் எப்படி மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இருப்பது அனைத்து விழைவுகளுக்கும் மேலான பெரு விழைவு. அந்த இறைவனிடமே ஒன்றிவிடும்  பெரிய இச்சை. வாழும் இச்சை,  இறை இச்சையென ஆகியவர்கள் அவர்கள். தன்னை அந்த பேரியற்கையுடன் கரைத்துக்கொள்ளும் பேராவல் அவர்களை இயக்குகிறது. அதன்மூலம் அவர்கள் அடைவது  ஆன்மீக பேரின்பம். புத்தன் மற்ற ஆசிகளை விடச்சொல்வது இந்தப் பெரும் இன்பத்தை அனுபவிக்க அவை தடிஅகளாக இருக்கின்றன என்பதற்காகவே.   சிறந்த இலக்கியங்கள் சில  அந்த பேரின்பத்தை நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அந்த பேரின்பத்தின் சிறுதுளிகளை நாம் சுவைக்கத் தருகின்றன. வெண்முரசு அத்தகைய நூல்வரிசையில் ஒரு முக்கிய இடத்தை இப்போதே பெற்றுத்திகழ்வதை யாரும் மறுக்க முடியாது.

தண்டபாணி துரைவேல்